பதிவு செய்த நாள்
16
மே
2023
10:05
திருப்பதி : திருமலை ஏழுமலையானை நேற்று காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வழிபட்டார். திருமலையில் அனுமன் ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று காலை திருமலைக்கு வந்தார். அவரை மேள தாள வாத்தியங்களுடன், மரியாதை அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். இதன்பின் அவர் ஏழுமலையானை தரிசித்து திரும்பினார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு பட்டயம்: காஞ்சிபுரம் ஏனாத்துார் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, திருப்பதியில் உள்ள சங்கர மடம் பாதுகா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் கவுரி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் சேதுராமன் வாழ்த்தி பேசினார். இணையம் வழியாகவும் நேரடியாகவும் 2021 - 22 கல்வியாண்டில் சைவ சித்தாந்தம் பயின்ற 82 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்படிப்பில் சேர்ந்து, கனடா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தோர் பட்டயம் பெற்றனர். முன்னதாக சங்கரா கல்லுாரி முதல்வர் ராம.வெங்கடேசன் பட்டயம் பெற்றவர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், சித்தாந்த ஆசிரியர்கள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் மெய்யியல் துறைத் தலைவர் முனைவர் நல்லசிவம், திருவையாறு அரசர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் முனைவர் திருஞானசம்பந்தம், விருத்தாசலம் முனைவர் சிவகுமார் ஆகியோர், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கவுரவிக்கப்பட்டனர்.