பதிவு செய்த நாள்
27
செப்
2012
10:09
கோவை: மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா, கேரள மாநிலத்திலுள்ள அமிர்தபுரியில், இன்று கொண்டாடப்படுகிறது. கொல்லம், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் உதவித் தலைவர் அமிர்தஸ்வரூபானந்தபுரி அறிக்கை: சர்வதேச அளவில், மனிதநேயமிக்க ஆன்மிகத் தலைவியாகப் போற்றப்படுபவர் மாதா அமிர்தானந்தமயி. இவரது, 59வது பிறந்த நாள், கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள அமிர்தபுரியில், இன்று கொண்டாடப்படுகிறது; சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில், 25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. கொச்சி மடத்திலுள்ள அமிர்தா நவீன மருத்துவமனையில், ஏழை நோயாளிகள், 200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சையும், 50 பேருக்கு இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடத்தப்படவுள்ளன. 1998ல் துவக்கப்பட்ட அமிர்த குடியேற்றத் திட்டத்தின்படி, ஏழைகளுக்கு, இதுவரை, 45 ஆயிரம் வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சிவகாசி பட்டாசு ஆலை விபத்து மற்றும் கண்ணூர் டேங்கர் லாரி வெடி விபத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு, தலா, ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய், உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது.விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால உதவித்தொகை திட்டத்தில், 55 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்; மேலும், 3,000 பேர் பயனடைய உள்ளனர். வித்யாமிர்தம் திட்டத்தின் கீழ், 40 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு, மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மடத்துக்கு, சிறப்பு தொண்டு நிறுவனம் என்ற அந்தஸ்தை, ஐ.நா., சபை வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0476 - 2897 578, 2896 399 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.