பதிவு செய்த நாள்
27
செப்
2012
10:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குள தென்கிழக்கு மூலை மண்டபத்தில், பழுதான 72 கல்தூண்களுக்கு பதில், புதியவை பொருத்தும் பணி நேற்று துவங்கியது. ஒரு கல்தூணில், அசோக சக்கரம் பொறிக்கப்படுகிறது. பொற்றாமரைக்குளத்தில் சிமென்ட் தளம் போடப்பட்டதால், சுற்றியுள்ள மண்டபங்களின் கல்தூண்களில் விரிசல் ஏற்பட்டன. தற்போது குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி நடக்கிறது. விரிசல் ஏற்பட்ட, கல்தூண்களுக்கு பதில், 3.50 கோடி ரூபாயில், புதிதாக பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இணைகமிஷனர் ஜெயராமன் தலைமையில், தக்கார் கருமுத்து கண்ணன் துவக்கி வைத்தார். தக்கார் கூறியதாவது: 20 ஆண்டுகளாக தூண்கள் பழுதாகியிருந்தன. இரும்பு கம்பிகளை கொண்டு "முட்டு கொடுக்கப்பட்டது. மத்திய நிதி ஆணையம் தந்த 47 லட்சம் ரூபாயில், 10 புதிய கல்தூண்கள், பழமை மாறாமல் உருவாக்கப்பட்டன. பண்ருட்டி ஸ்தபதி குமரகுரு தலைமையில் இப்பணி நடந்தது. விரைவில், 45 லட்ச ரூபாயில் மேலூர் 10 கல்தூண்கள் உருவாக்கப்படும். இதற்காக, கர்நாடகா மாநிலம் கொய்லாராவில், கற்கள் எடுக்கப்படுகின்றன. தற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை, எதிர்கால தலைமுறையினர் அறியும் வகையில், ஒரு தூணில் அசோக சக்கரம் பொறிக்கப்படுகிறது. பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி, 15 நாட்களில் முடியும், என்றார்.