பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
ஈரோடு: சிவகிரி, கொல்லங்கோவிலில், 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாமல் உள்ள சடையப்ப ஸ்வாமி கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியமைத்ததும், அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் செயல்படும், 1,000க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கும்பாபிஷேகம் காணாத கோவில்களின் பட்டியல் தயராகி வருகிறது.ஈரோடு அடுத்த கொல்லங் கோவிலில், 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத சடையப்ப ஸ்வாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க கோரி, அறநிலையத்துறைக்கும், அரசுக்கும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:கொல்லங்கோவிலில், சுயம்புவாக உருவெடுத்த சடையப்ப ஸ்வாமி, தன்னாசி ஸ்வாமிக்கு, 700 ஆண்டுக்கு முன் கோவில் கட்டப்பட்டது. அக்காலத்தில், இப்பகுதியில் மேய்ந்த பசு மாடு, தானாக பால் சுரந்து, சடையப்ப ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்ததாக, கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோவிலில், அமாவாசை, சித்திரைக்கனி, பங்குனி மாதம் ஒவ்வாதி, சிவன் நோன்பு ஆகிய நாட்களில் விசேஷமாக இருக்கும். சிவகிரி, ஈரோடு பகுதியை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவர். பத்து ஆண்டுக்கு முன், சடையப்ப ஸ்வாமி கோவில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இக்கோவில், துவங்கப்பட்ட நாள் முதல், இன்று வரை கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. கடந்த, 700 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாத சடையப்ப ஸ்வாமி கோவில், சிதிலமடைந்து காணப்படுகிறது. கோபுரங்களில் உள்ள சிலைகள் பெயர்ந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. போதிய வருமானம் இல்லாததால், திருப்பணிகள் மேற்கொள்ள, அறநிலையத்துறையினர் முன்வருவதில்லை.பழமை வாய்ந்த சடையப்ப சாமி கோவிலுக்கு, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த, அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.