சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 06:05
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 8 கால யாக சாலை பூஜைகள் 20ம் தேதி தொடங்கி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கப்பப்பட்டுள்ளது. இதனிடையே கோயில் கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என்பதாலும் முக்கிய பிரமுகர் வர இருப்பதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவைகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எஸ் பி. நிஷா மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோபிலில் உள்ள பிரகாரங்கள், சாமி சன்னதிகள், மேல் தளங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பக்தர்கள் அனுமதி எண்ணிக்கை குறித்தும், முக்கிய பிரமுகர் தங்க உள்ள இடங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோயில் வளாத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.