பதிவு செய்த நாள்
27
செப்
2012
11:09
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நேற்று தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழா, ஒன்பது நாட்கள் நடக்கிறது. திருத்தேர் விழா வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, செப்., 19ம் தேதி, மாலை, 7 மணிக்கு, கிராமசாந்தி, நகரசோதனையோடு துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனங்களில் ஸ்வாமி திருவீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவியுடன் அரங்கநாதர் திருக்கல்யாண அலங்காரத்தில், புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்தார். நேற்று, காலை, 7 மணிக்கு, கோட்டை பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான மக்கள், கோட்டை பகுதியில் குவிந்து, பெருமாளை தரிசித்தனர். துணைமேயர் பழனிச்சாமி, மண்டலத் தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் செந்தாமரை உள்ளிட்ட பலர், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோட்டையில் புறப்பட்ட தேர், மணிக்கூண்டு, பி.எஸ்.,பார்க், மாரியம்மன் கோவில் வழியாக சென்று, மாலை 5 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று மாலை, 7 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை, 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.செப்., 29ம் தேதி காலை, 4 மணிக்கு மஹாபிஷேகம், மஞ்சள் நீர் நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் நடக்கிறது. தக்காரும், அறநிலையத்துறை உதவி ஆணையருமான வில்வமூர்த்தி, செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.