பதிவு செய்த நாள்
27
செப்
2012
02:09
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 5
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை 10
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி 15
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக்
கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப 20
அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு 25
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் 30
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு
தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத்
தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர 35
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து 40
அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவல் 45
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக 50
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து 55
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் 60
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் 65
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 70
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து 75
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 80
துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து 85
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 90
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் 95
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்
கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில 100
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் 105
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ 110
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் 115
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 120
புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் 125
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த 130
மெல்லிதின் விரிந்த சேக்க மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை 135
ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் 140
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் 145
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்
தளிரேர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் 150
மெல்லியல் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோரென 155
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக 160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு இன்னா
அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் 170
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல 175
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப 180
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப 185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.
1. வையகம் என்பது தொடங்கி, 72-கூதிர் நின்றன்றாற் போதே, என்னுந்துணையும் ஒருதொடர். இதன்கண், கார்ப்பருவந் தொடங்கலும், மழை பொழிதலும், வெள்ளம் பெருகி விரைதலும் அப்பருவத்தே உலகின் நிகழும் நிகழ்ச்சிகளும், பின்னர்க் கூதிர்ப்பருவம் வருதலும், அதன்கண் நிகழ்ச்சிகளும், பிறவும் கூறப்படும்.
மழையும் வெள்ளமும்
1-2 : வையகம் ..................... பொழிந்தென
பொருள் : வையகம் பனிப்ப - உலகம் குளிரும்படி, வலன் ஏர்பு வளைஇ - தான் கிடந்த மலையை வலஞ்சூழ எழுந்து வளைந்து, பொய்யாவானம் - பருவம் பொய்யாத முகில், புதுப் பெயல் - கார்காலத்து மழையை, பொழிந்தென - பொழிந்ததாக,
கருத்துரை : பருவம் பொய்யாதே பெய்தலையுடைய முகில் தான் கிடந்த மலையை வலஞ்சூழ எழுந்து வளைந்து உலகம் குளிரும்படி கார்ப்பருவத்தே மழையைப் பொழியா நிற்ப, என்பதாம்.
அகலவுரை : இப்பாட்டின் தொடக்கத்தே வையகம் என்னும் மங்கலச் சொல் அமைந்திருத்தல் காண்க. கூதிர்ப் பருவத்தின் கொடுமையை எடுத்துக்காட்டலே, நல்லிசைப் புலவர் நக்கீரனார் கருத்தாகலின், தங்கருத்திற் கேற்பவே வையகம் குளிர்ப்ப என்னாது பனிப்ப என்றார். என்னை? குளிர்ப்ப என்னுஞ் சொல் மாத்திரையால் அதன் இனிமையே தோன்றுதலும், பனிப்ப என்னும் சொல் மிகையாய குளிராலுண்டாகும் இனிமையைத் தோற்றுவித்தலும் உணர்வு கருவியாக உணர்க.
வலன்-வலப்பக்கம். மழையும் காற்றும் வலஞ்சூழுமாயின் அவை மிகும் என்ப. இதனை,
வலமாதிரத்தான் வளி கொட்க (மதுரைக் காஞ்சி -5)
என்றும்,
வளிவலங் கொட்கும் மாதிரம் வளம்படும் (மணி-12: 91)
என்றும், சான்றோர் பிறரும் கூறுதல் காண்க : வளியின் இயக்கமே முகிலின் இயக்கமாதலின் ஒற்றுமை நயங்கருதி முகில் மேலிட்டுக் கூறியவாறு. ஏர்பு - எழுந்து, ஏர் என்னும் சொல்லடியாகப் பிறந்த எச்சம். ஏர்-எழுச்சி. வளைஇ - வளைந்துகொண்டு. வெப்பமிக்க முதுவேனிற் பருவத்தின் இறுதியிற் புதுவதாகப் பெய்யலின் புதுப்பெயல் என்றார். இதனைத் தலைப்பெயல் என்றும் கூறுப. வெப்பமிக்க முதுவேனிலின் முடிவில் பெய்தலைத் தவிராத முகில் என்பார் பொய்யாவானம் என்றார். வானம், ஈண்டு முகிலுக்கு ஆகுபெயர். பொழிந்தென - பொழிந்ததாக.
கோவலர் நிலைமை
3-8 : ஆர்கலி ...................... நடுங்க
பொருள் : ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் - அம் மழையாற் பெருகிய வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலினையுடைய இடையர், ஏறுடை இனம் நிரை வேறுபுலம் பரப்பி - ஏற்றையுடைய இனமாகிய முந்நிரைகளையும் வேற்று நிலங்களிலே மேயவிட்டு, புலம் பெயர் புலம்பொடு - தாம் பயின்ற நிலத்தைக் கைவிட்டுப்போந் தனிமையினாலே, கலங்கி - வருத்தமெய்தி, கோடல்நீடு இதழ்க் கண்ணி நீர் அலைத்தலால் - காந்தள் மலரினது நீண்ட இதழ்களாற் கட்டின கண்ணி நீர் அலைத்தலாலே கலக்க மெய்த, மெய்க்கொள் பெரும்பனி நலிய - தம் உடம்பிடத்தே கொண்ட பெரிய குளிர்ச்சி வருத்துகையினாலே, பலருடன் கைக்கொள் கொள்ளியர் - பலருங்கூடிக் கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையராய், கவுள்புடையூஉ நடுங்க - பற்பறை கொட்டி நடுங்கா நிற்ப;
கருத்துரை : அங்ஙனம் பெய்த மழையாலே பெருகின வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலினையுடைய இடையர்கள் ஏற்றையுடைய முந்நிரைகளையும் மேடாகிய முல்லை நிலத்திலே மேயவிட்டுத் தாம் பயின்ற இடத்தை நீங்கிப் போந்தமையால் உண்டான தனிமையாலே வருத்த மெய்திக் காந்தள் மலரின் நெடிய இதழ்களாற் றொடுத்த தம் தலைமாலை நீர் உறைத்தலானே அலைப்புண்டு கலக்க மெய்தத் தம் உடம்பிடத்தே கொண்ட பெரிய குளிர்ச்சி வருத்துகையாலே, பலரும் ஒருங்கு கூடிக் கையிடத்தே நெருப்பினை உடையராய்த் தம் பற்கள் பறை கொட்ட நடுங்கினராக; என்பதாம்.
அகலவுரை : ஆர்கலி - வெள்ளம், முனைஇய - வெறுத்த, தமக்குப் பல்லாற்றானும் வெள்ளம் இன்னாமை செய்தலின் அதனை வெறுத்தனர் என்க. மலையிடத்தே பெய்த மழையாற் பெருகிய வெள்ளம் அக் குறிஞ்சியை அடுத்துள்ள முல்லை நிலத்து வாழ்வோரையே முதற்கண் அலைத்தலின், கோவலரை முற் கூறினார். கோவலர்கள் இங்ஙனம் வெள்ளத்தால் அலைக்கப்படுதலை,
செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேர்ந்த நெய்யும்
உறியொடு வாரி யுண்டு குருந்தொடு மருத முந்தி
மறியுடை யாயர் மாதர் வனைதுகில் வாரு நீராற்
பொறிவரி யரவி னாடும் புனிதனும் போலு மன்றே (இரா-ஆற்றுப்-15)
என்னும் கம்பர் கூற்றானும் உணர்க. கொடுங்கோல் - கொடிய கோல். ஆ முதலியவற்றை அலைத்து அச்சுறுத்தும் கோலாகலான், கொடுங்கோல் என்றார். இனி வளைந்த கோல் எனினுமாம். என்னை, கோவலர் தம் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தற் பொருட்டுத் தலை வளைந்த கோல்களை வைத்திருக்கும் வழக்கமுடையராதலின் என்க.
இனி, கொடுங்கோலுடையார் இன்னலுறுதல் இயல்பென்பது பற்றிக் கொடுங்கோற் கோவலர் கவுள்புடையூஉ நடுங்கினர் என ஒரு நயந்தோன்றுதல் காண்க. இனம் நிரை - பசு எருமை ஆடு என்னும் மூன்று வகைப்பட்ட கிடைகள். இனமாகிய நிரை என்க. இனமும் நிரையும் என்றார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். ஏறு - ஆண், எருமைகளின் ஆண்.
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன (தொல்.மர-38)
கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல்.மர-39)
என்பது தொல்காப்பியம். இனம்பற்றி ஆட்டின் ஆணுங் கொள்க. வேறுபுலம் என்றது, தன்குடியிருப்பல்லாத அயனிலம் என்றவாறு. கோவலர் தம் நிரைகள் மேய்தற்குத் தக்க இடங்களை நாடி, ஆண்டு அவையிற்றைக் கொண்டு செல்லுதல் வழக்கம். புலம்பு - தனிமை. காந்தட் பூவின் இதழ் நீண்டிருத்தலான் நீடிதழ்க் கண்ணி என்றார். காந்தள் மலரைக் கண்ணியாகப் புனைந்து தலையிற் சூடுதல் இடையர் வழக்கம். நீண்ட இதழையுடைய காந்தள் மலர் மழைத்துளியை ஏற்று, அவர் முகம் முதலியவற்றிற் றுளித்து மேலும், அவர் இன்னாமையை மிகுதிப்படுத்தலை யறியாது, இக் கூதிர்ப் பருவத்தும் அக்கண்ணியைச் சூடி அதனாலும் அலைக்கப்பட்டு வருந்தும் பேதைமைக்கு இரங்கிக் கூறியபடியாம். அலை-அலைத்தல். அலைக்கலாவ - அலைத்தற்குக் கலங்க எனக் கண்ணிக்கேற்றுக; கலாவ என்னும் எச்சத்தைக் கலாவி எனத் திரித்துக் கோவலர்க் கேற்றினுமாம். ஊற்றுப்புலனை நுகர்பொறி உடலாகலின், மெய்க்கொள் பெரும்பனி என்றார். பெரும்பனி என்றது, மிகையாய குளிர் என்றவாறு. குளிர்க்கஞ்சுவோர் பலரும் உடலுடன் உடலொன்ற நெருங்கியிருத்தல் இயல்பாகலின் பலருடன் நடுங்க என்றார். கொள்ளி - நெருப்பு. கோவலர் தம்மைக் குளிர் நலியாமைக்குத் தீயுடையராதலை,
கடைகோற் சிறுதீ யடைய மாட்டித்
திண்கா லுறியன் பானையன் அகலன்
நுண்பஃ றுவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகா லூன்றிய தனிநிலை இடையன் (274: 5-8)
என்னும் அகப்பாட்டானும், பல்யாட்டின நிரை எல்லினிர் புகினே ... தீத்துணையாகச் சேந்தனிர் கழிமின், (414-20) என்னும் மலைபடுகடாத்தானும் உணர்க. கவுள்-பல்: ஆகுபெயர். புடையூ - கொட்டி. செய்யூ என்னெச்சம். மேல்வாய்ப்பல்லும் கீழ்வாய்ப்பல்லும் புடைபடுதல் குளிருற்றோர் மெய்ப்பாடென்க. குளிர்க்குடைந்து கலங்கலாவது பருவரல் உள்ளமோ டுழத்தலும் ஈரமாகிய போர்வையுறுத்தலும் ஆரவெயிலும் தழலும் வேண்டலும் உரசியும் முரன்றும் உயிர்த்தும் உரைத்தலும், உடனடுங் கலும்பற்பறை கொட்டலும் பிறவுமாகிய மெய்ப்பாடுகளை எய்தி இன்னலுறுதல். தீயின் வெப்பத்திற் கையைக் காய்த்தி அதிலேறிய வெப்பத்தைக் கவுளிலே அடுத்தலின், கைக்கொள் கொள்ளியர் என்றார். இனி மா முதலிய அஃறிணை உயிர்களின் நிலை கூறுகின்றார்.
9-12 : மாமேயல் .................. கூதிர்ப்பானாள்
பொருள் : மாமேயல் மறப்ப - விலங்குகள் மேய்தற் றொழிலை மறந்து ஒடுங்க, மந்தி கூர - குரங்கு குளிர்ச்சிமிக, பறவை படிவன வீழ-பறவைகள் மரத்திலே தங்குவன காற்று மிகுதியால் நிலத்தே வீழாநிற்ப, கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசி - பசுக்கள் தம்பாற் கன்றுகள் பாலுண்ணலை விடும்படி கடியவாய் உதைத்துத் தவிர்ப்ப, குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள் - மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க் காலத்தின் நடுயாமத்தே;
கருத்துரை : விலங்குகள் மேய்தற் றொழிலை விட்டொடுங்கவும், குரங்குகள் மிக்க குளிர்கொண்டு வருந்தவும், மரத்தில் உறையும் பறவைகள் காற்று மிகுதியால் நிலத்தே விழவும், பசுக்கள் கடியவாய் உதைத்துக் கன்றுகளைப் பாலுண்ணாதபடி தவிர்ப்பவும், மலைகளைக் குளிர்ப்பிப்பது போன்ற குளிர்மிக்க அக் கூதிர்க் காலத்து நள்ளிரவின்கண் என்பதாம்.
அகலவுரை : அக்கூதிர்க்காலத்து நள்ளிரவின்கண், புலம்பொடு வதியும் அரிவைக்கு, என, 166 ஆம் அடிக்கட் சென்று முடியும். மழையும் காற்றும் இடையறாது நிற்றலின் மாக்கள் மேய்தற்றொழிலை விட்டொழிந்தன. மா எனப் பொதுவிற் கூறலின், புலி கரடி முதலிய எல்லா விலங்குகளும் என்க. மந்தி - குரங்கு. குளிருக்கு மிகவும் வருந்தும் இயல்புடையதாகலின், குரங்கினை விதந்து கூறினார்.
மந்திதுயில் வுற்றமுழை வன்கடுவன் அங்கத்
திந்திய மவித்ததனி யோகரின் இருந்த (கம்ப.கார். 79)
என்பர் கம்பநாடர். கூர-மிக; குளிர்ச்சிமிக்கு வருந்த என்றவாறு. கறவை - பால் கறத்தற்குரிய பசு. பசு தன் கன்றின்பாற் பெரிதும் அன்புடையது ஆதலின், அதுதானும் தன் கன்றை உதைத்துத் தவிர்க்குமளவு குளிர்மிக்கது. எனக் குளிரின் கொடுமையை எடுத்தோதியவாறு. கன்று கோள் ஒழிய - கன்று முலை கொள்ளுதலை ஒழியுமாறு என்றும், கறவை கன்றை ஏற்றுக் கோடலை ஒழிய என்றும், இரு பொருளில் மயங்கிற்று. இரண்டும் பொருந்துதலின் ஏற்பது கொள்க. குன்று உணர்ச்சியற்றது. அங்ஙனம் உணர்ச்சியற்ற குன்றும் குளிருமாறு எனக் குளிர்ச்சியின் மிகுதியை விதந்தோதியவாறு. தாவர சங்கம மென்னுந் தன்மைய யாவையும் இரங்கிட் என்புழிப்போல. (நள்ளிரவு - குகப். 1) குளிர்ப்பன்ன - குளிரச் செய்யுமாறுபோல. பானாள் - பாதிநாள்; நள்ளிரவு. இனிக் கூதிர்ப்பருவத்து நிகழ்ச்சிகள் கூறுகின்றார்.
13-20 : புன்கொடி ....................... கற்ப
பொருள் : புன்கொடி முசுண்டை பொறிப்புற வான்பூ - புல்லிய கொடியினையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெள்ளிய பூக்கள், பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர-பொன் போன்ற நிறத்தையுடைய பீர்க்குடனே சிறு தூறுகள் தோறும் மலராநிற்ப, பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி - பசிய காலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடைய திரள், இருங்களி பரந்த ஈரவெண்மணல் - கரிய வண்டலிட்ட சேறு பரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணற் பரப்புகளில், செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவர - சிவந்த வரியினையுடைய நாரைகளோடு இருந்து எவ்விடங்களினும் கவர்ந்துகொள்ளுமாறு, கயல் அறல் எதிர-கயல் மீன்கள் அறல் பட ஓடும் நீர்ச்செலவினை எதிர்த்தேறி வர, கடும்புனல் சாஅய் - மிக்க நீரைப் பொழிந்துவிட்டமையாலே, பெயல் உலந்து - மிக்குப் பெய்யும் தன்மை கெட்டு, எழுந்த பொங்கல் வெண்மழை - வானிடத்தே உயர்ந்து எழுந்த பொங்குதலுடைய வெண்மேகங்கள், அகல் இரு விசும்பில் துவலை கற்ப - அகன்ற பெரிய வானிடத்தே சிறு துவலையாகத் தூவுதற் றொழிலைக் கல்லாநிற்ப;
கருத்துரை : புல்லிய கொடியினையுடைய முசுட்டையின் திரண்ட வெண்மலர் பொன்னிறமான பீர்க்கு மலரோடே புதல்கள் தோறும் மலராநிற்ப, பசிய காலையுடைய கொக்கின் மெல்லிய சிறகரையுடைய திரள்கள், வண்டலிட்ட களிபரந்த வெண்மணற் பரப்பிடத்தே நாரைகளோடே இருந்து நீரின் செலவினை எதிர்த்தேறும் கயல்மீன்களைப் பிடித்துத் தின்னும்படி அம்மீன்கள் எதிரேறாநிற்ப, மிகுதியாகப் பொழிந்துவிட்டமையால் நீர்உலந்து உயர்ந்து எழுந்த வெண்மேகங்கள், சிறிய சிறிய துளிகளை மெல்லத் தூவாநிற்ப என்பதாம்.
அகலவுரை : முசுண்டை-முசுட்டை என்னும் ஒருவகைக் கொடி. இது கார்ப்பருவம் கூதிர்ப்பருவங்களிற் றழைத்து மலரும் இயல்புடையது. இதன் மலர் வெண்ணிறமானது. இதன் மலர் புள்ளிகளுடைய தன்மையால், பொறிப்புறம் என்றதற்குத் திரண்ட புறம் எனப் பொருள் கூறப்பட்டது. பொறி - திரட்சி. பொன் - பீர்க்கம்பூவின் நிறத்திற்கு உவமை. மென்பறை - மெல்லிய சிறகு. தொழுதி - திரட்சி. இருங்களி-கரிய சேறு. இது வண்டலிட்ட சேறென்க. கார்ப்பருவம் கழிந்தவுடன் மழை குறைந்து போதலால், கால்களில் நீர் குறைந்து ஓடும்; அக்குறைந்த நீரோட்டத்தில் எதிரேறிச் செல்லல் மீன்களின் இயல்பு. கொக்கும் நாரையும் அக்கால்களின் அருகே மணற்பரப்பிலிருந்து அம் மீன்களைக் கவர்ந்துண்ணும் காட்சியை இன்றும் கூதிர்ப்பருவத்தே காணலாம். அறல்- அற்றற்றோடும் நீர். கடும்புனல் - மிக்க நீர். முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப்பெய்துவிட்டுப் பின்னர் நீர் வறந்த வெண்மேகமாகி இனி இங்ஙனம் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவேம் எனக்கருதி அங்ஙனம் பெய்தற்குப் பயிலுமாறுபோலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார். ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை, போகா றகலாக் கடை என்னும் பொருள் நெறி கல்லாப் பேதை முகில் என்பார் போன்று வெண்மழை என்ற நயமுணர்க. நீர் மிக்க முகில் தாழ்ந்தும் அஃது அற்றமுகில் உயர்ந்தும் இருத்தல் இயல்பாகலின் கடும்புனல் சாஅய்ப் பெயல் உலந்து எழுந்த என்றார். பெயல் உவந்து என்றது, முன்னர்ப் பெய்துவிட்டமையாற் பெய்தல் தன்மை கெட்டு என்றவாறு.
21-28 : அங்கண் ..................... தூங்க
பொருள் : அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த - அழகிய இடத்தையுடைய அகன்ற வயனிறைந்த நீராலே மிக்கெழுந்த, வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க - வளவிய இலையினையுடைய நெல்லினின்றும் புறப்பட்ட கதிர் முற்றி வளையாநிற்ப, முழுமுதற் கமுகின் மணி உறழ் எருத்தில் -பெரிய அடியினையுடைய கமுகினது நீலமணியை ஒத்த கழுத்தில், கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை - கொழுவிய மடலிடத்துப் பாளை விரிந்த திரட்சியைக் கொண்ட தாறுகளில், நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற - நுண்ணிய நீர் திரளும்படியாகப் பருத்துப் பக்கங்கள் திரட்சி எய்தித் தெளிந்த நீரையுடைய பசிய காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற, நளிகொள் சிமைய விரவு மலர் வியன்கா - செறிதலைத் தம்மிடத்தே கொண்ட குவடுகளில் விரவின மலர்களையுடைய அகன்ற சோலைகள், குளிர்கொள் சினைய குரூஉத் துளி தூங்க - குளிர்ச்சியைத் தம்மிடத்தே கொண்ட கொம்புகளையுடையவாக அவற்றில் நின்ற நிறத்தை யுடைய மழைத்துளிகள் தூங்கநிற்ப;
கருத்துரை : அழகிய இடத்தையுடைய அகன்ற வயல்களிலே நிறைந்த நீராலே மிக்கெழுந்த வளவிய இலையையுடைய நெல்லினின்றும் புறப்பட்ட கதிர்கள் முற்றி வளையவும், பெரிய அடியினையுடைய கமுகமரத்தின் மணிநிறக் கழுத்திலுள்ள மடலிடத்தே விரிந்த பாளையிடத்துத் தாறுகளில் உள்ள நுண்ணிய நீர் திரளும்படி பக்கங்கள் திரண்டு, தெளிந்த நீரை அகத்தேயுடைய பச்சைக்காய்கள் இனிமை யுண்டாகுமாறு முற்றவும், செறிந்த மலையுச்சியிடத்தே, பன்னிற மலரும் விரவிய சோலைகளின் கொம்புகள் தம்மிடத்தே மழைத் துளிகளை ஏற்றுக் கொள்ளுதலால், ஆண்டு அத்துளிகள் நிறமுடையனவாய்த் தூங்காநிற்பவும், என்பதாம்.
அகலவுரை : ஒளிறிலஞ்சி அடைநிவந்த முட்டாள சுடர்த்தாமரை கட்கமழு நறுநெய்தல், வள்ளிதழ் அவிழ்நீலம், மெல்லிலை அரியாம்பல் முதலியன உடைத்தாய்க் கண்ணுக்கு இனிமை பயக்கும் இடம் பல உடைய மருதத்தண்பணை என்பார், அங்கண் அகல் வயல் என்றார். ஆர்பெயல் - நிறைந்த நீர். பெயர் : ஆகுபெயர். இனி ஆர் பெயற் கலித்த என்றதொடர்க்கு, நிறைந்த மழையாலே செழித்த எனினுமாம். வண்தோடு - வளமுடைய நெல்லிதழ். வருகதிர் : வினைத்தொகை. வணங்க-வளைய. இதனால் நிலவளம், நீர்வளம், பயன் முதலியன கூறினார். முழுமுதற் கமுகு என்றது நீர்வளம் நிலவளம் பெற்று நன்கு பருத்த அடிப்பகுதியையுடைய வளவிய கமுகு என்றவாறு. மணி-நீலமணி. இது கமுகின் எருத்திற்கு நிறவுவமை. உறழ் : உவமவுருபு. எருத்து-கழுத்து, ஈண்டுக் கமுகின் நுனிப்பகுதி என்க. அவிழ்ந்த - விரிந்த. குழூஉக்குலை - திரட்சியையுடைய தாறு. இளங்காயாகிய பச்சைப்பாக்கின் அகத்தே உள்ள நீர் மிகவும் நுண்ணிதாகலின் நுண்ணீர் என்றும், மிகவும் தெளிவுடைமையின் தெண்ணீர் என்றும் கூறினார். சேறுகொள என்றற்கு அந்நுண்ணீர் இறுகிச் சேறாக முதிரும் படி எனினுமாம். சேறு என்றதனை இனிமைக்கு ஆகுபெயராகக் கொண்டார் நச்சினார்க்கினியர். தெவிளுதல்-திரளுதல். புடை - பக்கம். நளி - செறிவு, நளியென் கிளவி செறிவு மாகும் என்பது (உரி-25) தொல்காப்பியம். இனி, நளி-பெருமை என்னும் பொருளும் உடைத்தாகலான், பெருமையுடைய சிமையம் எனினுமாம். சிமையம்-மலைக்குவடு. பன்னிற மலர்களும் விரவி மலர்ந்து திகழ்தலான் விரவுமலர்க்கா என்றார். சினைய: பலவறி சொல். வெண்மழை சிறு சிறு துளியாகத் துளித்தலான் அத்துளிகள் கொம்புகளிலுள்ள தழையிற் றூங்குவன வாயின என்க. தூங்க என்றதற்கு மாறாமல் வீழ என்பர் நச்சினார்க்கினியர். நிறமற்ற நீர்த்துளிகள் தாம் பற்றியுள்ள இலைமலர் முதலியவற்றின் நிறத்தை ஏற்று மிளிர்தலின் குரூஉத்துளி என்றார். குரூஉ-நிறம். குருவும் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் : (உரி-5.)
நகரத்தில் முடலையாக்கை முழுவலி மாக்களின் தன்மை
29-35 : மாடம் .............................. திரிதர
பொருள் : மாடம் ஓங்கிய மல்லன் மூதூர் -மாடங்கள் உயர்ந்த வளப்பத்தையுடைய பழைய ஊரின்கண், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் - யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருக்களிலே, படலைக்கண்ணிப் பரேர் எறுழ் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் - தழைவிரவின மாலையையும் பருத்த அழகினையுடையவாகிய வலியினையுடைய இறுகின தோளினையும் முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பின மெய்வலியினையுமுடைய கீழ்மக்கள் வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து -வண்டுகள் மொய்க்கும் கள்ளையுண்டு மகிழ்ச்சி மிக்கு, துவலைத் தண் துளி பேணார் - தம் மேலுறைக்கும் சிறு துவலையாகிய தண்ணிய துளியை அஞ்சாராய், பகல் இறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர - முன்னும் பின்னும் தொங்கலாக நாலவிட்ட துகிலினை உடையராய் அந்திப்பொழுதின்கண் தம் மனம் விரும்பியவிடத்தே திரிதலைச் செய்ய;
கருத்துரை : (இங்ஙனம் முல்லைநிலத்து மாவும் மாக்களும் குளிரால் வருந்தாநிற்ப இனி) மாட முதலியன ஓங்கிய வளப்பமுடைய பழைய ஊரிகளின்கண் உள்ள யாறு கிடந்தாற்போன்ற அகன்ற தெருக்களிடத்தே, பொங்கல் வெண்மழை துவலை கற்பதனாற் றம்மேல் வீழும் தண்டுளிக்கும் குளிர்க்கும் அஞ்சாதவராய்த் தழைவிரவின மாலை புனைந்து முன்னும்பின்னும் தூங்கப்பெற்ற ஆடையுடையராய்ப் பருத்து அழகிய திண்ணிய தோள்களையும் முறுக்கேறிய உடலையும் நிரம்பின மெய்வலியையும் உடைய கல்லாமாந்தர் வண்டுகள் மொய்க்கும் கள்ளை நிரம்பவுண்டு களித்துப் பகல் கழிந்த அந்திப்பொழுதினும் தம் மனம் விரும்பிய இடங்களிலே திரிதலைச் செய்ய என்பதாம்.
அகலவுரை : இந் நெடுநல்வாடை என்னும் இன்சுவைப் பனுவலை அகப்பொருட்டுறை பற்றியதாகவே யாத்துப் பின்னர், இதன்கண் கூறப்படும் அரசன் கற்பனையிற் கண்ட அரசனல்லன், கண்கூடாக யாம் கண்ட பாண்டியன் நெடுஞ்செழியனே ஆவன் கண்டீர் எனக் குறிப்பான் உணர்த்துவார், ஆசிரியர் நக்கீரனார், அப்பாண்டிய மன்னன் அடையாளப் பூவாகிய வேம்பினை ஒரு வீரன் கையிலமைந்த வேலின்கண் சுட்டிக்காட்டினார். வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறை முறை காட்ட என்னுந் தொடர்க்கண் அவ்வடையாளப் பூப்போந்தமை அறிக. அதற்கிணங்கவே ஈண்டு ஒரு சிறு குறிப்பால், அம்மூதூர் தானும் நான்மாடக்கூடலாகிய மதுரையே காண்மின்! பிறிதன் றென்பார், மாடம் ஓங்கிய மல்லன் மூதூர் என்பாராயினர். ஈண்டு மாடம் என்றது நான்மாடங்களையும் மனதிற் கொண்டே என்க. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பனவாம். இனிக் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றும் கூறுப. என்னை? கன்னிதிரு மால்காளி யீசன் காக்கும் கடிமதில்சூழ் மாமதுரை என்பவாகலான்.
ஆண்டுவாழ்வார் இத்தகைய கூதிர்ப்பருவத்திற்கு அஞ்சவேண்டா என்பார், குளிர்க்கு அரணாகிய மாடத்தை விதந்து கூறினார். மல்லல் - வளன். இயற்கையாலுண்டாகும் தட்பவெப்பங்களைத் தடுத்துச் சமஞ் செய்யும் எல்லா நன்மைகளும் ஆண்டுளவென்பார் மல்லன் மூதூர் என்றார். இனி முல்லைக்காட்டில் உறைகின்ற கொடுங்கோற் கோவலர் இக் கூதிர்க்குளிர்க்குடைந்து கவுள் புடையூஉ நடுங்கினாற்போலாது பழைதாக நாகரிக முதிர்ந்த மாடமோங்கிய மல்லன் மூதூரில் வாழ்வோர் தம் நாகரிக உண்டி முதலியவற்றால் உடலை முறுக்கேற்றி இயற்கையை வென்று திரியும் நிலையினைக் கூறுகின்றார் என்க.
தெருவின் இருபக்கத்தும் நிரலாக அமைந்த இல்லங்கள் பேரியாற்றின் இருமருங்கும் அமைந்த கரைகள் போன்றும், தெருவின் நடுவிடம் யாற்றின் உட்பகுதிபோன்றும் தோன்றுதலானும், அகலம் நீள முதலியவற்றானும் பேரியாற்றின் கிடக்கை தெருவிற்கு உவமையாயிற்றென்க. யாறுகிடந் தன்ன அகனெடுந்தெரு, (மதுரைக்காஞ்சி. 359.) என்றும், யாறெனக் கிடந்த தெரு, (மலைபடு-481) என்றும், யாறு கண்டன்ன அகன்கனை வீதியுள், (பெருங்கதை: 2-7: 7) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. படலைக்கண்ணி - தழைவிரவிப் புனைந்த தலையிற்சூடும் மாலை. அஃதாவது, தாமரைக் கொழுமுறியினையும், அதன் மலரினையும், குவளையையும், கழுநீர் மலரினையும், பச்சிலையுடனே கலந்து தொடுத்த மாலை என்ப. இதனைத்,
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர்ப் படலை (சிலப். 4: 39-41)
எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.
தலையிற் சூடுமரபிற்றென்பார் கண்ணி என்றார். இவர்கள் முழுவலி முடலையாக்கைக்குக் கூதிர்க்குளிரும் போதியதன்றாகலின், குளிர்ச்சி மிக்க படலைக்கண்ணியும் சூடித்திரிந்தனர் என்க. பருமை ஏர் என்பன, பரேர் எனப் புணர்ந்தன பரியதாய் அழகிய என்க. பரேரம்புழகு (குறிஞ்சி -96) என்பர், குறிஞ்சிப் பாட்டினும். எறுழ்-வலி. எறுழ் வலியாகும் (உரி-90) என்பர் தொல்காப்பியனார். முடலையாக்கை முறுக்கேறிய உடல், மக்கள் யாக்கையில் எத்துணை வலியுண்டாமோ அத்துணை வலிமையும் எஞ்சாதுடையர் என்பார் முழுவலி மாக்கள் என்றார். மனனுணர்வில்லா ஐயறிவுடையர் என்பார் மாக்கள் என்றார். முழுவலியுடைய யாக்கையுடைமையானும், மேலும் கள்ளையும் நிரம்ப உண்டனர் ஆதலினானும் அதன் களிப்பு மிகுதியால், துவலைத் தண்டுளி பேணார் என ஏதுக்காட்டினர். பரேர் எறுழ்த்திணிதோள் முடலையாக்கை முழுவலி மாக்கள் என்னுந் தொடர், யாக்கையாற் சிறந்த உருவத்தைக் கண்கூடாக்கும் சொல்லோவியமாகத் திகழ்தலுணர்க. பகலிறந்து என்றது பகல் கழிந்த அந்திப்போதில் என்றவாறு. இதனைப் பிரித்து (34) அவிழ்பதம் கமழ என்பதனோடியைப்பர் நச்சினார்க்கினியர். இருகோட் டறுவை - என்றதற்கு இரண்டு விளிம்பினும் கரையமைந்த ஆடை எனினுமாம். அறுவை - ஆடை. துளி பேணார் என்றது, துளித்தலால் உண்டாகும் குளிர்க்கு அஞ்சாதவராய் என்றவாறு. அஞ்சுதற்குரிய துளி என்பார் தண்டுளி என்றார். மாக்களாதலின் மனம்போனவாறெல்லாம் திரிந்தனர் என்பார் வேண்டுவயிற் றிரிதர என்றார்.
மாலைக் காலமும் மகளிர் வழிபாடும்
36-44 : வெள்ளி ..................... மாலையயர
பொருள் : வெள்ளி வள்ளி வீங்கு இறை பணைத்தோள் - வெளுக்கப்பட்டதாகிய சங்குவளை இறுகின இறையினையுடைய மூங்கில் போலும் தோளினையும், மெத்தென் சாயல் - கட்புலனாய்த் தோன்றுகின்ற மெத்தென்ற சாயலினையும், முத்து உறழ் முறுவல் - முத்தையொத்த பல்லினையும், பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண் - பொலிவினையுடைய மகரக்குழை யிட்ட அழகிற்குப் பொருந்தின உயர்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும் உடைய, மடவரல் மகளிர் - மடப்பத்தையுடைய மகளிர், பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழ - பூந்தட்டிலே இட்டுவைத்த அலரும்பருவம் அமைந்த அரும்பாகிய பசிய காலினையுடைய பிச்சியினுடைய அழகிய இதழ்கள் விரியும் செவ்விபெற்று மணத்தலாலே, பொழுது அறிந்து - மாலைப்பொழுதென்றறிந்து, இரும்பு செய் விளக்கின ஈர்ந்திரிக் கொளீஇ - இரும்பாற் செய்த தகளியிலே நெய்தோய்ந்த திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது - நெல்லையும் மலரையும் சிதறி இல்லுறை தெய்வத்தைக் கைகுவித்து வணங்கி, மல்லல் ஆவணம் மாலை அயர - வளப்பத்தையுடைய அங்காடித் தெருவெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட;
கருத்துரை : வெளுக்கப்பட்டதாகிய சங்கு வளையல் இறுகின முன் கையையுடைய மூங்கில் போன்ற தோளினையும், மெத்தென்ற சாயலினையும், முத்துப்போன்ற பல்லினையும், பொலிவுடைய மகரக்குழைக்குப் பொருந்தின உயர்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ந்த கண்ணினையும் உடைய மடப்பம் பொருந்திய மகளிர், பூந்தட்டிலே பெய்த மலரும் செவ்வியமைந்த மிச்சியின் அரும்பு மலர்ந்து மணங்கமழ் தலானே. மாலைப்போது இஃது என்றறிந்து, இரும்பாற் செய்த தகளிக் கண் திரியிட்டு நெய்வாக்கித் தீக்கொளுவி, நெல்லையும் மலரையும் சிதறி, இல்லுறை தெய்வத்தைக் கைகுவித்து வணங்க, அங்காடித் தெருவெல்லாம் இவ்வாறு மாலைக்காலத்தைக் கொண்டாடாநிற்ப என்பதாம்.
அகலவுரை : வெள்ளி வள்ளி - என்றதற்கு வெள்ளி மீன் போன்ற நிறமுடைய சங்குவளை எனினுமாம். வெள்ளி - வெளுக்கப்பட்டது எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். வள்ளி - கைவளையல்: ஈண்டுச் சங்குவளையல் என்க வள்ளி வீங்கு இறை என்க. வளையலை இறுகச்செய்த முன்கை என்றவாறு. பணை-மூங்கில். மெத்தென் என்றதனைப் பணைத்த என்பதனோடும் சாயல் என்பதனோடும் இயைத்தனர் நச்சினார்க்கினியர்.
சாயல் என்றது, ஐம்பொறியானும் நுகரப்படுவதால் மகளிர்பாற் கிடக்குமொரு மென்மைத்தன்மையை. இம்மென்மை நெஞ்சு கொளினல்லது காட்டாலாகாப் பொருள (தொல்-பொருள். 52) என்பர் தொல்காப்பியனார். முறுவல்-பல். இதற்கு முத்து உவமை என்க. பூங்குழைக்கு அமர்ந்த கண் என்றது, அழகிய மகரக்குழை போன்று தாமும் சிறந்த அணிகலனாகத் திகழ்கின்ற கண் என்றவாறு. இனிக் குழைக்கு அமர்ந்த கண் என்றதனை உருபுமயக்கம் எனக் கொண்டு குழையின்கண் சென்று பொருந்திய கண் என உரைத்தலுமொன்று. மடவரல் - மகளிர் - மடப்பத்தையுடையவராகிய மகளிர் என்க. பிடகை - பூந்தட்டு. அன்றலரும் பருவமுடைய மொட்டென்பார் செவ்வி அரும்பு என்றார். கூதிர்ப்பருவத்தே ஞாயிறு தோன்றாமையால் பிச்சியின் அரும்பு அவிழ்ந்து மணத்தலால் பொழுதறிந்து என ஏதுவாக்கினார். இங்ஙனம் மலர்கள் மலர்தலால் பொழுதறிதல் பண்டைக் கால வழக்கம் என்க. பொழுதறிவித்தலால் மலர்க்கும் போது என்னும் பெயர் காரணப்பெயராதல் அறிக. பித்திகம் - பிச்சிப்பூ. அதன் காம்பு பசுமையாயிருத்தலிற் பைங்காற் பித்திகம் என்றார். பண்டைநாள் நந்தமிழகத்தே மகளிர் மாலைக்காலத்தில் விளக்கேற்றி நெல்லும் மலரும் சிதறி இல்லுறை தெய்வத்தை வணங்கும் சிறந்த வழக்கமுடையராயிருந்தனர் என்பதனை,
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள (சிலப்-9: 1-4)
எனவரும் சிலப்பதிகாரத்தானும்,
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ (மதுரைக் - 555-6)
எனவரும் மதுரைக் காஞ்சியானும் உணர்க. ஈர்ந்திரி - நெய்யானனைந்த திரி. இனி கூதிர்ப்பருவத்து வாடையால் ஈரமாக்கப்பட்ட திரி எனினுமாம். இரும்பு செய் விளக்கு என்றது தகளியை. விளக்கு : ஆகுபெயர். மல்லல் ஆவணம்-வளப்பமுடைய அங்காடித் தெரு. மாலையயர்தலாவது : மாலைக்காலத்தே செய்தற்குரிய கடமைகளைச் செய்தல்.
மனையுறை புறவுகள்
45-48 : மனை .......................... இருப்ப
பொருள் : மனையுறை புறவின் செங்கால் சேவல் - மனையின் கண்ணே இருக்கும் புறவினுடைய சிவந்த காலினையுடைய சேவல், இன்புறு பெடையோடு மன்று தேர்ந்து உண்ணாது - தாம் இன்பம் நுகருகின்ற பெடையோடே மன்றிலே சென்று இரையைத் தேடித் தின்னாமல், இரவும் பகலும் மயங்கிக் கையற்று - இராக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்குகையினாலே செயலற்று, மதலைப்பள்ளி மாறுவன இருப்ப - கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்தகால் ஆறும்படி மாறி மாறி இருக்க,
கருத்துரை : மனையின்கண்ணே இருக்கும் புறவினுடைய செங்காற் சேவல், தான் இன்புறுகின்ற பெடையோடே சென்று அம்பலங்களிலே இரைதேடி உண்ணாமல், இரவிது பகலிது என அறியாது மயங்கிச் செயலற்று மதலைப் பள்ளியிடத்தே கடுக்கும் காலை மாறி மாறி இருக்க; என்பதாம்.
அகலவுரை : மனையுறைபுறவு - மனையிடத்தே உறையும் இயல்புடைய புறவு என்க. புறவின்கால் பவள நிறமுடைத்தாகலின் செங்காற் சேவல் என்றார். தான் இன்புறுதற்குக் காரணமான பெண்புறவு என்க. அம்பலங்களிலே சென்று இரைதேர்ந்துண்ணல் புறவுகளின் இயல்பென்க.
மன்று - அம்பலம். தேர்ந்து - இரையை ஆராய்ந்து. வானம் முகிலாற் சூழப்பட்டு இருண்டுகிடத்தலால் இரவு பகல் அறிய வொண்ணாது மயங்கி என்க. கையறுதல் - செயலறுதல். மதலை - கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகை. இதனைக் கபோதகத்தலை என்றுங் கூறுப. மதலைப்பள்ளி : இருபெயரொட்டு. மாறுவன இருப்ப என்பதற்கு ஒன்றற்கொன்று தலைமாறி இருப்ப எனினுமாம். இறையுறைபுறவு என்றும் பாடம்; இப்பாடத்திற்கு வீட்டின் இறப்பில் உறைதலையுடைய புறவென்க. மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத் தெருவின் நுண்டாது குடைவன வாடி என்றார் குறுந்தொகையினும்.
மகளிரின் குளிர்காலத்துக் கோலம்
49-56 : கடியுடை ................. புகைப்ப
பொருள் : கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர் - காவலையுடைய அகன்ற மனைகளிலே தொழில்செய்யும் சிறியராகிய குற்றேவல் வினைஞர், கொள் உறழ் நறுங்கல் பல்கூட்டு மறுக-கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட் டரைக்க, வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப - வடநாட்டிலுள்ளார் கொண்டுவந்த வெள்ளிய நிறத்தையுடைய சிலாவட்டம் தென்திசையிடத்திற் சந்தனத்தோடே பயன்படாமற் கிடப்ப, கூந்தல் மகளிர் கோதை புனையார் - தம் கூந்தலிடத்தே மகளிர்கள் மாலையிட்டு முடியாராய், பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் - தம் பலவாகிய கரிய மயிரிடத்தே மங்கலமாகச் சில மலரிட்டு முடித்தலை வேண்டி, தண் நறுந் தகரம் முளரி நெருப்பு அமைத்து - தண்ணிய மயிர்ச் சந்தனமாகிய விறகிலே நெருப்பை உண்டாக்கி இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப - அதிலே கரிதாகிய வயிரத்தையுடைய அகிலோடே வெள்ளிய கண்ட சருக்கரையும் கூட்டிப் புகைப்ப,
கருத்துரை : காவலையுடைய அகன்ற மனைகளிலே குற்றேவல் செய்யும் வினைஞர் கொள் போன்ற நிறமுடைய நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட்டினை அரைக்க, வடநாட்டில் உள்ளார் கொணர்ந்த வெண்ணிறமுடைய சிலாவட்டம் தென்றிசையிற் பிறந்த சந்தனத்தோடே பயன்படாமற் கிடப்ப, மகளிர்கள் குளிர்மிகுதியாலே தங்கூந்தலில் குளிர்ந்த மலர்மாலைகளை இட்டு முடியாராய், மங்கலமாதல் கருதி ஒருசில மலர்களையே இட்டு முடித்தலை விரும்பிக் குளிர்ந்த நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகிலே தீமூட்டி, அதன்கண் கரிய அகிலோடே கண்டசருக்கரையும் கலந்து புகையாநிற்ப, என்பதாம்.
அகலவுரை : இம்மாதர்கள் தெருக்களிற் றண்டுளி பேணாது வேண்டு வயிற்றிரிந்த முடலையாக்கை முழுவலி மாக்களினும் மேம்பட்ட நாகரிக வாழ்வுடையராவார் : முன்னர் முல்லையம்புறவில் வாழ்ந்த கொடுங்கோற் கோவலர் குளிரால் கவுள்புடையூஉ நடுங்கும் பொழுதும் தந்தலையிற் சூட்டிய கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவுதலையும் அறியாராய் வருந்தாநின்றனர். யாறு கிடந்தன்ன தெருவில் திரிதரும் முடலையாக்கை முழுவலிமாக்கள் கள்ளைநிரம்பவுண்டு களித்தவராகலின் குளிர் தோன்றப் பெறாராய்ப் படலைக் கண்ணி மிலைந்து திரிதலைக் கண்டோம். கடியுடை வியனகரில் வாழும் மகளிர் காலத்தின் தட்ப வெப்ப நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப உடல்பேணும் நலம் உடையராதல் அறிக. இவர்கள் இல்லத்தே காவலுடைமையும் சிறு குறுந்தொழுவர் இருத்தலையும் கூறுமாற்றால் சிறந்தசெல்வக்குடி மகளிர் ஆதல் தெரித்தார்.
சிறுகுறுந்தொழுவர் ஆவார், மனைக்கண் இருந்து அவ்வவ்வமயத்தே அம்மனைக்குரியோர் ஏவுகின்ற சிறு சிறு தொழில்களைச் செய்வோர் என்க. குளிர்க்குக் கத்தூரிக் கூட்டு மருந்துமாதலால் சிறுகுறுந்தொழுவர் பல் கூட்டு மறுக என்றார். பல் கூட்டு என்றது, உடலிற்கு வெப்பந்தரும் கத்தூரி முதலியன கூட்டி அரைக்கும் சாந்தினை. கொள்-ஈண்டுக் கருங்கொள் ; இது கத்தூரிக் கூட்டரைக்கும் கல்லின் நிறத்திற்கு உவமை என்க. நறுங்கல் - நறிய சாத்தம்மி, வடவர் - வடநாட்டிலுள்ளார். இதனால் உயரிய சந்தனமரைக்கும் கற்கள் வடநாட்டினரால் கொணர்ந்து வாணிகம் செய்யப்பட்டமை புலனாம். வான்கேழ் - வெள்ளை நிறம். வட்டம் : ஆகுபெயர். வட்டவடிவிற்றாய கல் என்க. பொதிய மலையிற் றோன்றியதாகலின் சந்தனத்தைத் தென்புல மருங்கிற் சாந்தெடு துறப்ப என்றதன்கண் முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க. துறப்ப என்றது, அம்மகளிர் வேண்டாது விடுத்தலால் பயன்படாது கிடப்ப என்றவாறு. கோதை குளிரை மிகுப்பதாகலான் அஞ்சிப் புனையார் என்றும், மகளிர் மலரணிதல் மங்கலமாதலின் ஒரு சில மலரையே இட்டு முடிந்தனர் என்றும் கொள்க. தகரம் - மயிர்ச் சந்தனம், தகரமுளரி - தகரமாகிய முளரி என்க. முளரி - விறகு, மயிர்ச் சந்தனத்தை விறகாகக் கொண்டு அதன்கண் தீமூட்டி அகிலையும் கண்டசருக்கரையையும் அதிலிட்டுப் புகைத்தனர் என்க. அச் சில மலர்களைப் பெய்தற்கும் இங்ஙனம் புகைத்தனர் என்றவாறு. சின்மலர் பெய்ம்மார் புகைப்ப என இயைத்துக் கொள்க.
கூதிர்ப் பருவத்தில் பயன்படாப் பொருள்கள்
57-63 : கைவல்கம்மியன் .................... துறப்ப
பொருள் : கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த செங்கேழ் வட்டம் சுருக்கி - கையாற் புனைதல் வல்ல உருக்குத்து கின்றவனாலே அழகுபெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு, கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க -வளைந்த முளைக்கோலிலே சிலந்தியினது வெள்ளிய நூலாற் சூழப்பட்டனவாய்த் தூங்காநிற்ப, வான் உற நிவந்த மேனிலை மருங்கின் - வானத்தே மிக்குயர்ந்த மேலாம் நிலத்திடத்தே, வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் - இளவேனிற் காலத்தில் துயிலும் படுக்கைக்குத் தென்றற்காற்றைத் தரும், நேர் வாய்க் கட்டளை திரியாது - சாலேகத்திலே நின்று உலாவாமல், திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப - சிக்கென்ற நிலையினையுடைய பொருத்துவாய் அமைந்த கதவம் தாழிட்டுக் கிடப்ப,
கருத்துரை : கையாற் வினைதல் வல்ல, உருக்குத்துக்கின்றவனாலே பண்ணப்பட்ட அழகிய சிவந்த நிறமுடைய ஆலவட்டம் உறையிடப்பட்டு வளைந்த முளைக்கோலிலே சிலந்தி நூல் சூழப்பட்டனவாய்ப் பயனின்றித் தூங்காநிற்ப, இளவேனிற்காலப்படுக்கைக்கு இன்றியமையாத் தென்றற் காற்றைத் தரும் பலகணிகள் தம் திண்ணிய கதவுகள் நன்கு பொருத்தித் தாழிடப்பட்டு வாளாகிடப்ப என்பதாம்.
அகலவுரை : கைவல் கம்மியன் - கைத்தொழிலில் வல்லவனான தொழில் செய்வோன்; உருக்குத்துவோன். கவின்-அழகு. செங்கேழ் - செந்நிறம். வட்டம் - ஆலவட்டம்; விசிறி. சுருக்கி என்றதனால் ஆலவட்டம் சுருக்கவும் விரிக்கவும் தக்கதாக அமைக்கப்பட்ட தென்பது தெரிகிறது. சுருக்கி உறையிடப்பட்டென்க. கொடுந்தறி -வளைந்த முளைக்கோல். இது சுவரில் அமைக்கப்பட்டதென்க. சிலம்பி - சிலந்திப் பூச்சி. வான் நூல் - வெள்ளிய நூல். வலந்தன - பின்னப்பட்டன வாய், குளிர் மிகுதியான கூதிர்ப்பருவத்தே ஆலவட்டம் பயன்படுத்தப்படாமல் நீண்டநாள் தூங்கின என்பதனை அவற்றைச் சிலம்பி நூல் சூழ்ந்துள்ளமை கூறி உணர்த்தும் நுணுக்கம் மிகவும் இன்பந்தருதல் காண்க.
வான் உற நிவந்த - என்றதற்கு வானிடத்தே மிக உயர்ந்த என்று பொருள் கூறலே தமிழ்நெறிக்கேற்ற தாகும். இத் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தேவரூரைத் தீண்டும்படி உயர்ந்த, என வடவர் நெறிபற்றி மிகையுயர்வு நவிற்சியாகப் பொருள் கூறினர். மேல் நிலை மருங்கின் என்றது மேன்மாடத்தில் என்றவாறு. வளி-ஈண்டுத் தென்றற் காற்று. வளிதரும் நேர்வாய்க் கட்டளை என்றது பலகணி களை. பலகணி கட்டளை போறலின் கட்டளை என்றார். கட்டளை தெரியாது என்றும் பாடம்; இப்பாடத்திற்குக் கட்டளையைத் திறவாது என்று பொருள் கொள்க. திண்நிலை திண்ணிய நிலையை உடைய எனினுமாம். நிலை ஈண்டுப் பலகணியின் நிலை. போர்வாய்-பொருத்துவாய்; திண்ணிய நிலைமையினையுடைய பொருத்துவாய்க்கதவு எனக் கொள்ளினுமாம். தாழ் - தாழ்ப்பாள்; தாழொடு துறப்ப என்றது, தாழ் நீக்கித் திறவாது கிடப்ப என்றவாறு. குளிர்க்கு அஞ்சிப் பலகணிகளைத் திறவாது விட்டனர் என்பது கருத்து.
கூதிர்ப்பருவத்து நுகர்ச்சி
64-66 : கல்லென் ........................ ஆர
பொருள் : கல்லென் துவலை தூவலின் - கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறு துவலையை வாடைக்காற்று எங்கும் பரப்புகையினாலே யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் - இளைஞரும் முதியவருமாகிய எல்லோரும் குவிந்த வாயையுடைய குடத்தின்கண்ணுள்ள குளிர்ந்த நீரைக் குடியாராய், பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர -பகுத்தாற்போன்ற வாயையுடைய இந்தளத்திலிட்ட சிவந்த நெருப்பின் வெம்மையை நுகராநிற்ப.
கருத்துரை : கல்லென்னும் ஓசையினையுடைய சிறிய மழைத் துளியை வாடைக்காற்று எங்கும் பரப்புகையாலே இளைஞரும் முதியருமாகிய எப்பருவத்து மக்களும் குவிந்த வாயையுடைய குடத்தின் நீரைக் குடியாது ஒழிந்து அகன்ற வாயையுடைய இந்தளத்தின் மூட்டிய சிவந்த நெருப்பின் வெம்மையை விரும்பி நுகராநிற்ப, என்பதாம்.
அகலவுரை : ஈண்டு நக்கீரர் காலத்திலே அவராற் கூறப்பட்ட கூதிர்ப்பருவம் இக்காலத்தே நன்கு இந்நாட்டில் நிகழ்வதாகத் தோன்றவில்லை. நாடு முழுதும் வானுற வோங்கிய காடுகள் அடர்ந்து கிடந்தன பண்டைக்காலத்தில், அக்காடுகள் உண்மை காரணமாக இடையறாது இரவும் பகலும் விளிவிடன் அறியாவகை மழை பெய்ததுபோலும். இக் காலத்தில் மழைவளத்திற்குக் காரணமாய் அமைத்த காடுகளை மாந்தர் அழித்து ஒழித்தமையால் மழைமறுத்து யாண்டும் வற்கடமே நிலவுகின்றது. மழைவளம் பெற்று நாடு வசியும் வளனும் சுரந்து இன்புற்றமர்ந்து வாழவேண்டுமேல் மீண்டும் இந்நாடு முழுவதும் முயன்று சோலைகள் உண்டாக்குதல் வேண்டும். பூம்பொழில்களினூடே வாழும் வாழ்க்கை கற்பகக்காவில் வாழும்வானவர் வாழ்க்கைக்கு நிகராய இன்பமுடைத்து இந்நலம் நம் முன்னோர்க்கு இயற்கையிலேயே வாய்ந்திருந்தது. இவ்வாய்ப்பைத் தாமே அழித்துவிட்ட இக்கால மாந்தர் அளியரோ! அளியர்!!
கல்லென் : ஒலிக்குறிப்பு. இளைஞரும் முதியருமாகிய எப்பருவத்தாரும் என்பார் யாவரும் என்றார். தொகுவாய்-குவிந்தவாய், கன்னல்-நீர்க்குடம். மிகையாகக் குளிர்ந்திருத்தலால் தண்ணீர் என்றார். தொகுவாய், பகுவாய் என்பதன்கண் முரண்டோன்றி இன்பம் விளைத்தல் காண்க. தண்ணீர் என்றதற்கேற்பச் செந்நெருப்பு என்றமை காண்க. மக்கள் தண்ணீரை வெறுத்துச் செந்நெருப்பை விரும்பி யுண்ண எனக் கூதிரின் குளிர்க் கொடுமையைத் தெரித்தோதியவாறு காண்க. செந்நெருப்புக் காய எனத் தகுதியாய வினையாற் கூறாது ஆர, என வேறுவினை கொடுத்தோதினார் மாந்தர்க்கு வெம்மையின் கண்ணுள்ள விருப்பம் தோன்றுமாறு.
ஆடன் மகளிரின் இசை வேட்கையும் செயலும்
67-70 : ஆடன் மகளிரின் .................. நிறுப்ப
பொருள் : ஆடன் மகளிர் பாடல் கொளப் புணர்மார் - ஆடற்றொழிலையுடைய மகளிர் தாம் பாடுகின்ற பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூட்டுதற்கு, தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ- குளிர்ச்சியாலே தன் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பைப் பெரிய வாய் எழுகின்ற தம் முலையின் வெப்பத்தே தடவி, கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப - கரிய தண்டினையுடைய சிறிய யாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த;
கருத்துரை : ஆடற்றொழிலையுடைய விறலியர் தம் பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூதிர்ப்பருவத்துக் குளிர்ச்சியாலே தன் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பைப் பரியவாய் எழுகின்ற தம் முலையின் வெப்பத்தே தடவிக் கரிய தண்டினை யுடைய சிறிய யாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த என்பதாம்.
அகலவுரை : ஆடன் மகளிர் என்றது, ஆடுதற்றொழிலில் வல்ல விறலியர் என்றவாறு; அவராவார், இருவகைத்தாகிய அகக்கூத்தின் இலக்கணங்களை அறிந்து, பலவகைப்பட்ட புறநடங்களையும் அறிந்து, விலக்குறுப்புக்களைச் சேரப் புணர்க்கவும் வல்லராய், அல்லியம் முதல் கொடுகொட்டி ஈறாகக்கிடந்த பதினொரு கூத்துக்களும், அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களும், அவற்றிற்கு அடைத்த இசைக்கருவிகளின் கூறுகளும் நூல்களில் விதித்த வழியே தெரிந்து, கூத்தும் பாட்டும் தாளங்களும், தாளங்களின் வழிவந்த தூக்குக்களும், தம்மிற் கூடின நெறியையுடைய அகப்புறக் கூத்துக்களை நிகழ்த்தவல்ல மகளிர் என்க.
பாடல் கொள என்றது, தாம் பாடும் பாட்டை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என்றவாறு. புணர்மார் - கூட்டுதற்கு. தண்மையிற் றிரிந்த குளிர்ச்சியாலே தளர்ச்சியடைந்த, நரம்புகள் தளர்தற்கு வாடைக்குளிர் ஏதுவென்க. இன்குரல்-இனிய குரலாகிய நரம்பு. ஈண்டுக் குரல் என்றது ஆகுபெயராய்க்குரல் முதலிய ஏழிசையையும் குறிக்கும். இனியஇன் குரல் தீந்தொடை என இயைத்து இனிய குரல் முதலாகத் தொடுத்த இனிய நரம்புகள் எனினுமாம். தொடை : நரம்பிற்கு ஆகுபெயர். நரம்பை வெப்பமேற்றித் தளர்ச்சி நீக்குதற்பொருட்டுத் தம்முலையிற்றடவினர் என்க. மாதர் முலை வேனிற்காலத்துக் குளிர்ந்தும், குளிர் காலத்து வெப்பமுடைத்தாயும் இருக்கும் என்ப.
யானை வெண்கோ டழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ணாகமும்
எய்கணை கிழித்த பகட்டெழி லகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்
மைம்மலர் உண்கண் மடந்தைய ரடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ (சிலப். 28: 11-16)
எனச் சிலப்பதிகாரத்தும்,
தடமுலை வேதுகொண் டொற்றியும் (கலிங்.கடை: 13)
எனக் கலிங்கத்துப் பரணியினும் வருதல் காண்க. தடைஇ-தடவி. கருங்கோடு - கரிய நிறமுடைய யாழின் தண்டு. பேரியாழும் உண்மையின், இதனைச் சீறியாழ் என்றார். பண்ணுமுறை - பண் நிற்கும் முறை. பண்ணுமுறை நிறுத்துதலை,
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண் வகையால் இசை யெழீஇப்
பண்வகையாற் பரிவு தீர்ந்து
........ ........... ............. ...........
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்ட லள்ளல்
ஏருடைப் பட்டடையென இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்ட வகைதன் செவியின் ஓர்த்து
எனவரும் சிலப்பதிகாரப் பகுதியானும் (7:5-16) அதன் உரையானும் உணர்க.
71-73 : காதலர் ...................... போதே
பொருள் : காதலர்ப் பிரிந்தோர் புலம்ப - கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தாநிற்ப, பெயல் கனைந்து - காலமழை செறிந்து, கூதிர் நின்றன்றால் - கூதிர்க்காலமாய் நிலைபெற்றது, போதே அக்காலம்;
கருத்துரை : தம் கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தாநிற்ப இங்ஙனம் காலமழை செறிந்து கூதிர்க்காலமாய் நிலைபெற்றது அக்காலம் என்பதாம்.
அகலவுரை : புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சி ஒழுக்கத்திற்குரிய பெரும்பொழுது கூதிர்ப்பொழுதாகலின் ஈண்டு நக்கீரர் காதலர்ப் பிரிந்தோர் என்றது, பூம்பொழிலிடத்தே பால்வரை தெய்வம் கூட்டக் கூடிப் பின்னர் இற்செறிக்கப்பட்டமையாற் காதலரைப் பிரிந்த காரிகையாரையும், கற்புக் காலத்தே வினைவயிற்பிரிந்து கூதிர்ப்பாசறையிற் றம்மை நினையாது தங்கேள்வர் தங்கினராக இப்பாட்டிற் பின்னர்க் கூறப்படும் கோப்பெருந்தேவியார் போன்ற மகளிரையும் என இரு வகையாரையும் குறித்தென்க. இப் பருவத்தே ஆடவர் மகளிர் என்னும் இருபாலாருடைய உடற்கண் உள்ள ஒவ்வோர் அணுவும் இணைவிழைச்சினைப் பெரிதும் விரும்புமாகலின் இப்பருவம் பிரிந்துறைவார்க்குப் பெரிதும் பிழை தருமியல்பிற் றென்க. இக் கூதிர்ப்பருவத்தே வீசும் வாடையின் கொடுமையை,
அழுங்குறு மகளிர்தம் அன்பர்த் தீர்ந்தவர்
புழுங்குறு புணர்முலை கொதிப்பப் புக்குலாய்க்
கொழுங்குறைத் தசையென ஈர்ந்து கொண்டது
விழுங்குறு பேய்என வாடை வீங்கிற்றே (கார்காலம்-13)
எனக் கம்பநாடர் கூறுமாற்றானும் உணர்க. இனி, 1. வையகம் என்பது தொடங்கி, 72. கூதிர் நின்றன்றாற் போதே என்னுந் துணையும் தொடர்ந்த இத்தொடரின் பொருளை :
வையகம் பனிப்ப ஏர்பு வளைஇ வானம் பொழிந்தென, ஆர்கலி முனைஇய கோவலர் நிரை வேறு புலம் பரப்பிக் கலங்கிக் கலாவ நலிய நடுங்க, மா மறப்ப, மந்தி கூர, பறவை வீழ, கறவை வீச, கூதிர்ப்பானாள் முசுண்டை பீரமொடு மலர, கொக்கின் தொழுதி நாரையொடு கவருமாறு கயல் எதிர, வெண்மழை கற்ப கதிர் வணங்க, காய் முற்ற, துளி தூங்க, மூதூர்த் தெருவில் மாக்கள் மாந்திப் பேணார் திரிதர, மகளிர் பொழுதறிந்து கொளீஇத் தூஉய்த் தொழுது அயர, புறவின் சேவல் உண்ணாது இருப்ப, தொழுவர், கூட்டு மறுக. வட்டம் சாந்தொடு துறப்ப, மகளிர்கோதைபுனையார் சின்மலர் பெய்ம்மார் நெருப்பமைத்துப் புகைப்ப; செங்கேழ்வட்டம் தூங்க, கட்டளை தாழொடு துறப்ப. துவலை தூவலின் யாவரும் தண்ணீர் உண்ணார் நெருப்பு ஆர ஆடன் மகளிர் புணர்மார் முலை வெம்மையிற் றடைஇ பண்ணுமுறை நிறுப்ப, பிரிந்தோர் கலங்க, பெயல் கனைந்து கூதிர் நின்றது அப்போது என அணுகக்கொண்டு காண்க. இனி 72-மாதிரம் என்பது தொடங்கி 100 - கோயில் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் பண்டைக்காலத்து அரண்மனையின் சிறப்பனைத்தும் காணலாம்.
அரண்மனை அமைப்பு
கணித மாந்தர்
72-79 : மாதிரம் .................... வரைப்பில்
பொருள் : மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் - திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிற்றுமண்டிலம், இருகோல் குறிநிலை வழுக்காது - இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்தும் சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக் கொள்ளும் தன்மை தப்பாதபடி, குடக்கு ஏர்பு ஒரு திறம் சாரா அமயத்து அரைநாள் - மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத்திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதொரு நாளில் பதினைந்தா நாழிகையிலே, நூலறிபுலவர் நுண்ணிதில் கயிறிட்டு - சிற்ப நூலை யறிந்த தச்சர் கூரிதாக நூலை நேரே பிடித்து, தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி - திசைகளைக் குறித்துக் கொண்டு அத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து, பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து - பெரிய பெயரினையுடைய அரசர்க்கு ஒப்ப மனைகளையும் வாயில்களையும் மண்டபங்கள் முதலியவற்றையும் கூறுபடுத்தி, ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின் - ஒரு சேர இவ்விடங்களை யெல்லாம் வளைத்து உயர்ந்த நிலையினையுடைய மதில் அகத்தே;
கருத்துரை : திசைகளிலே விரிந்த கதிர் பரப்பும் அகன்ற ஞாயிற்று மண்டிலம் நிலத்தே இரண்டிடத்து நாட்டப்பெற்ற இரு கோல்களின் நிழலும் சாயாதபடி தாரைபோக ஓடுகின்ற இயக்கம் நிகழ்வதாகிய சித்திரைத் திங்கள் பத்து நாட்களின் மேலும் இருபதாம் நாளினுள்ளும் அமைந்த யாதாமொரு நாளின் பதினைந்து நாழிகையளவிலே சிற்பநூல் அறிந்த தச்சர் கூரிதாக நூலை நேரேபிடித்துத் திசைகளைக் குறித்துக் கொண்டு திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப் பார்த்து அரசர்கள் வாழ்தற்கு ஏற்ப மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பிறவற்றையும் கூறுபடுத்தி இவையிற்றை ஒரு சேர அகப்பட வளைத்தெடுத்த உயர்ந்து நிற்றலையுடையமதிலின் அகத்தே என்பதாம்.
அகலவுரை : மதிலகத்தே, 100-நளிமலைச் சிலம்பில் சிலம்பு கோயில் என இயையும்.
சித்திரைத் திங்கள் பத்தாநாள் தொடங்கி, இருபதா நாள் முடிய நிகழும் நாட்களில், யாதாமொரு நாள் பகல்பதினைந்து நாழிகையளவில் ஞாயிற்று மண்டிலம் நிலத்தின் நடுவண் இயங்கு மென்றும், அங்ஙனம் இயங்குதலை நிலத்தை அண்மையவாய் இரண்டு செவ்விய கோல்களை நட்டு அக்கோல்களின் நிழல் வடக்கினாதல், தெற்கினாதல் சாய்தலின்றி அக்கோல்களிலேயே பதினைந்து நாழிகையில் அடங்கி நிற்றலை ஆராய்ந்து அங்ஙனம் நின்ற நாளிலே அரண்மனைக்குத் திருமுளைச் சார்த்துச் செய்வர் என்றும் இதனால் அறியற்பாற்று. மாதிரம்-திசை, வானமுமாம். ஞாயிற்று மண்டிலம் ஏனை மண்டிலங்களினும் பெரிதும் விரிவுடையதாதல் பற்றி வியல் வாய் மண்டிலம் என்றார். வியல்வாய் - அகன்ற இடம். நிலத்தின்கண் ஈரிடத்தும் நடப்பட்ட கோல் அவ்வியக்கத்தை அளந்தறிந்து குறித்துக் கோடற் பொருட்டாகலின், இரு கோற் குறிநிலை என்றார். வழுக்குதல் - நிழல் சாய்தல். குடக்கு - மேற்றிசை. ஏர்பு - எழுந்து. மேற்றிசையிற் சேறற்கெழுந்தென்க. அரைநாள் - பகலில் பாதியாகிய உச்சிப்பொழுது. நூல் - ஈண்டுச் சிற்ப நூல்; வான நூலுமாம். அந் நூலினைக் கசடறக் கற்றோர் என்பார், புலவர் என்றார்.
மனைக்கு நூலிடுவோர் கணிதத்திற்குத் தவறு வாராமல் இட வேண்டுதலின் நுண்ணிதிற் கயிறிட்டு என்றார். தேஎம் - திசை; இடமுமாம். தெய்வம் - அம்மனையிடுமிடத்தே முன்னரே உறையும் சிறு தெய்வங்கள். இனி அரண்மனையாகலின் அம்மனைக்கண் கொற்றவை முதலிய தெய்வங்களை அமைத்தற்குரிய இடங்களைக் குறித்துக்கொண்டு எனினுமாம். இனி, திருமுளைச்சார்த்து இடுங்கால் தெய்வங்கட்குச் சிறப்புச்செய்து எனினுமாம். பெரும் பெயர் மன்னர் என்றது, முடியரசரை. ஈண்டு மன்னர் மன்னனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையையே கூறுகின்றாராகலின் பேரரசர் இருந்து வாழ்தற்கு ஒப்ப மனைவகுத்து என்றார். பேரரசர் மனை இன்னின்ன பகுதிகளையுடைத்தாதல் வேண்டும் என்பது சிற்பநூலிற் கூறப்படும் ஆதலின் சிற்ப நூலிற் கூறப்பட்டவாறு முடிமன்னர்க்குப் பொருந்துவதாக மனைகோலி என்றவாறு. மனையும், மன்றமும், நாளோலக்க மண்டபமும், படை வீடும், கருவூலமும், இன்னோரன்ன பிறவும் ஆகிய பலவற்றையும் முன்னர்க் கூறுபடுத்திக் குறித்துத் திருமுளைச் சார்த்துச் செய்துகொண்டு இப் பகுதிகள் அனைத்தும் அகப்பட வளைத்து உயர்த்திய மதில் என்க.
அரண்மனை நெடுநிலை
80-84 : பருவிரும்பு ............... நெடுநிலை
பொருள் : பரு இரும்பு பிணித்து - ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி, செவ்வாக்கு உரீஇ - சாதிலிங்கம் வழித்து, துணைமாண் கதவம் பொருத்தி - இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்தி, இணை மாண்டு நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து - இணைதல் மாட்சிமைப்பட்டு உத்தரமென்னும் நாளின் பெயர்பெற்ற செருகுதலமைந்த சிறந்த உத்தரக்கற்கவியிலே, போதவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து - போதாய் விரிந்த குவளைப் பூவோடே புதிய பிடிகளையும் பொருத்தி, தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில் -தாழோடே சேரப்பண்ணின பொருத்துவாய் அமைந்த கூட்டத்தினையுடையவாய், கைவல் கம்மியன் முடுக்கலில் - கைத் தொழில் வல்ல தச்சன் கடாவுகையினாலே, புரைதீர்ந்து - வெளியற்று, ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை - வெண் சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய;
கருத்துரை : ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டிச் சாதிலிங்கம் வழித்து, இரண்டாய் மாட்சிமைப்பட்ட செருகுதல் அமைந்த உத்தரக் கற்கவியிலே, குவளை மலர் உருக்களையும், புதிய பிடிகளையும் பொருத்தி, தாழக்கோலோடே சேரப்பண்ணின பொருத்துவாய் அமைந்த கூட்டத்தினையுடையவாய்த் தொழில் வல்ல தச்சன் கடாவுகையினாலே, இடைவெளி சிறிதும் இல்லாமல், வெண் சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினை உடைய என்பதாம்.
அகலவுரை : நெடுநிலைமாடக் கதவுகளாகலின், பருவிரும்பு வேண்டிற்று. இரும்பு - இரும்பாலாகிய ஆணி பட்டம் முதலியன என்க. பிணித்தல் - சேரத் தைத்தல். செவ்வரக்கு - சாதிலிங்கம். உரீஇ - வழித்து. மரத்தாலாய பொருள்களுக்கு நிறமூட்டுதற் பொருட்டுச் செவ்வரக்கு வழித்தல் வழக்கம். இதனை,
உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழினடைப் பாகரொடு (256-8)
எனவரும் சிறுபாணாற்றுப் படையானும் உணர்க.
இரட்டையாய் மாட்சிமைப்பட்ட கதவு என்பார் துணைமாண் கதவம் என்றார். மாணுதல் - மாட்சிமைப்படுதல்; அஃதாவது அழகிய தொழிற்றிறத்தானும், திண்மையானும் சிறத்தல் என்க. பொருத்துதல் - நிலையொடு சேர்த்தல். பல்வேறு உறுப்புக்களையும் ஒன்றனோடொன்று இணைக்குங்கால் இணைத்த இடம் தோன்றாமல் ஒரே மரத்திற் செய்தாற் போன்று தோன்றுதலால் இணை மாண்டு என்றார். இஃது அக்காலத்தே தச்சர் தொழில் சிறந்தமை காட்டும்.
நாள் - ஈண்டு உத்தரம் என்னும் விண்மீன். அவ்விண்மீனின் பெயர் பெற்ற விழுமரம் என்றது. உத்தரக் கற்கவி என்னும் உறுப்பினை. நாளொடு பெயரிய நவையிலா மரம் (வாயு-பார்ப்பதி திருமணம்-9) என்றார் பிறரும். விழுமரம் - சீரிய மரம்; ஆச்சா, கருங்காலி முதலிய மரங்கள் போன்ற சிறந்த மரம் என்க. மலர்ந்த செங்கழுநீர் மலர் போன்ற உருச் செதுக்கிக் கதவுகளில் அமைத்தல் மரபு. புதுப்பிடி என்றது புதுமை தோன்றச் செய்த கைப்பிடிகள் என்க. இவை கதவைச் சாத்தற்கும், திறத்தற்கும் வேண்டியவை. இத்தொடர்க்கு அவிழ்ந்த குவளைப் பூவோடே பிடி - யானை)களையும் தன்னிடத்தே பண்ணி எனப் பொருள் கூறி, என்றது நடுவே திருவும் (திருமகள்) இரண்டு புறத்தும் இரண்டு செங்கழு நீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் கற்கவீ என விளக்கமும் கூறினர் நச்சினார்க்கினியர். எனவே, இரண்டு மருங்கும் யானைகளால் நீராட்டப்பட்டு விளங்கும் திருமகள் படிமம் என்பது அவர் கருத்தாம். திருமகள் படிவத்தையே ஆசிரியர் நக்கீரர் கூறினார் என்பதற்கு, திருமகளைக் குறிக்கும் சொல்லில்லாமையும், திருமகள் உவந்து வீற்றிருக்கும் தாமரை மலர் குறிக்கப்படாமையும், இடந்தாராமை உணர்க. வரி நுதல் எழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப் புரிநெகிழ் தாமரைமலரங்கண் வீறெய்தித் திரு நயந்திருந்தன்ன எனக் கலியில் அத் திருமகள் படிவம் விளக்கமாக ஓதப்பட்டிருத்தல் காண்க.
தாழ் - தாழக்கோல். போரமை புணர்ப்பு - பொருத்துவாய் நன்கு பொருந்துமாறு சேர்த்திய இணைப்பு. மிகப் பெரிய அரண்மனை வாயிலிற் கதவுகளை இணை மாண்புபடப் புணர்த்துதல் அரிதாகலின் கைவல் கம்மியன் முடுக்கலின் எனவேண்டிற்று. முடுக்கல் - கடாவுதல். புரை - இடைவெளி. ஐயவி - வெண்சிறு கடுகு. ஐயவியும் நெய்யும் ஆண்டுறையும் தெய்வத்திற்கு அணியப்பட்டன என்க. நிலையின்கண் தெய்வம் உறையும் என்பதும், அதற்கு ஐயவிநெய் முதலியன அணிதல் வழக்கம் என்பதும்,
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக் : 353-5)
என்பதனானும்,
நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (நற்றி : 370: 3-4)
என்பதனானும் உணரப்படும்.
அரண்மனை முன்றில்
87-100 : வென்றெழு .................. கோயில்
பொருள் : வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக - வெற்றி குறித்து உயர்த்திய கொடியோடே யானைகள் சென்று புகுதும்படி உயர்ந்த, குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில் - மலையை நடுவே வெளியாகத் திறந்தாற்போன்ற கோபுர வாயில்களையும், திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின் - திருமகள் நிலைபெற்ற குற்றமற்ற தலைமையினையுடைய, தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து - கொண்டுவந்து பரப்பிய மணல் பரந்த அழகிய அரண்மனை முன்றிலையும், நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை - நெடிய மயிரினையுடைய கவரிமாவில் தூய நிறத்தையுடைய ஏற்றை குறிய காலினையுடைய அன்னத்தோடே தாவித் திரியும் வாயின் முன்பினையும் உடைத்தாய், பணை நிலை முனைஇய பல்லுளைப் புரவி புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு - பந்தியிலே நிற்றலை வெறுத்த பலவாகிய பிடரிமயிரையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குதட்டும் தன்மை தோற்றுவிக்கின்ற குரலோடே, நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து - நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலா முற்றத்திலுள்ள, கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய - மகரவாய் போன்று பகுக்கப்பட்ட வாயினையுடைய நீர்ப்பத்தல் நிறைகையினாலே, கலிழ்ந்துவீழ் அருவிப் பாடு விறந்து - கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை செறிந்து, அயல ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் களிமயில் அகவும் வயிர் மருள் இன் இசை - அதற்கு அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும் கொம்பென்று மருளும் இனிய ஓசை, நளிமலைச் சிலம்பில் சிலம்புங் கோயில் செறிந்த மலையின் ஆரவாரம்போல் ஆரவாரிக்கும் அரண்மனை யகத்தே;
கருத்துரை : வெற்றி குறித்து உயர்த்திய கொடியோடே யானைகள் சென்று புகுதும்படி உயர்ந்தனவும், மலையை நடுவே வெளியாகத் திறந்தாற் போன்றனவுமாகிய கோபுரவாயில்களையும், திருமகள் நிலைபெற்ற குற்றமற்ற தலைமையினையுடைய கொண்டுவந்து பரப்பிய மணல்பரந்த அழகிய அரண்மனை முன்றிலையும், நெடிய மயிரையுடைய கவரிமாவினேற்றை குறிய கால்களையுடைய அன்னத்தோடே தாவித் திரியும் வாயில் முன்னிடங்களையும் உடையதாய், பந்தியிலே நிற்றலை வெறுத்த பலவாகிய பிடரிமயிரையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைத் தெவிட்டும் தனிமை தோற்றுவிக்கின்ற குரலோடே, நிலாவின் பயனை அரசன் கொள்ளும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்தின்கண்ணே உள்ள மகரவாய் போன்று பகுக்கப்பட்ட வாயையுடைய நீர்ப்பத்தல் நிறைகையாலே கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை செறிந்து, அதற்கு அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும் கொம்போசை போன்ற இனிய ஓசை செறிந்த மலையின் ஆரம்வாரம்போல ஆரவாரிக்கும் கோயில் என்பதாம்.
அகலவுரை : உயர்ந்த களிற்றியானையின் பிடரிலே நாட்டி உயர்த்திய கொடியோடே அவ்வியானை புகுதற்குத் தகுந்த உயரமுடையதாக அரண்மனைக் கோபுரவாயில் அமைக்கப்பட்டிருந்தது என்பது கருத்து. வெற்றிக் கொடியை யானைமீது உயர்த்தி ஊர்வலஞ் செய்தல் மரபு. இதனை, கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து (பதிற்றுப்- 52 :1.) என்றும், மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரை மிசையருவியின் வயின் வயினுடங்க (பதிற்றுப்-691-2.) என்றும், உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும்பாசறை, (பதிற்றுப். 8817) என்றும், கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும், (புற-9:7) என்றும், வருவனவற்றானும் அறிக. குன்று குயின்றன்ன - மலையை உள்வெளியாகக் குடைந்தாற் போன்று; குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் என்றார், மதுரைக்காஞ்சியினும். ஓங்கு நிலை - ஓங்கி நிற்றலையுடைய கோபுரம்: ஆகுபெயர், உயர்ந்த நிலையினையுடைய வாயிலுமாம்.
எவ்வகைப் பொருளும் வந்துகுவியும் இடமாகலின் திருநிலைபெற்ற தீது தீர் சிறப்பின் திருநகர் முற்றம் என்றார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் திருநகர் முற்றத்தே திருநிலை பெறுதலை,
இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை
மைபடு பெருந்தோண் மழவர் ஓட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக்
காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த வாயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கைப் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழெய்திய பெரும்பெயர் மதுரை
எனவரும் மதுரைக்காஞ்சியானும் உணர்க.
தருமணல் - கொண்டு வந்து பரப்பிய மணல். முன்றிலில் மணல் கொணர்ந்து பரப்புதலைத் தருமணன் முற்றத்து அரிஞிமி றார்ப்ப என்றும் (மதுரைக்காஞ்சி - 6-84) விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணன் மாற்றுமின் புதுமணற் பரப்புமின் (மணி. 1:51) என்றும், வரும் பிறர் கூற்றானும் உணர்க. எகினம் - கவரிமா. அன்னத்திற்கும் எகினம் என்னும் பெயருண்மையான் நெடுமயிர் எகினம் என்றார். ஏற்றை கவரிமாவில் ஆண். ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப என்பதோத்தாகலான் எகினவேற்றை என்றார். தூநிறம்-வெள்ளை நிறம். அம்பணம்-நீர்ப்பத்தல். இனி அம்பணம் என்பது, அளவு கருவியுமாகலின் மழைநீரை அளத்தற் பொருட்டு வைத்த கருவி எனினுமாம். கலிழ்ந்து - கலங்கி, புல்லுணா புல்லாகிய உணவு. ஆண்குதிரை பெண்குதிரையை நினைத்துக் கனைத்தலின் புலம்பு விடு குரல் என்றார். புலம்பு - தனிமை.
நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலாமுற்றத்து என்னும் சிலப்பதிகாரத்து அந்திமாலைச் சிறப்புச் செய் காதையின் அடிக்கு அடியாரக்கு நல்லார் நிலவுப் பயன் கொள்ளுமென இடக்கரடக்கிக் கூறினார் என்பர். வெண்ணிலவின் பயன் றுய்த்தும் (பட்டினப்-114) என்றும், சுடர்வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட மிசை நீண் முற்றம் (பெருங்- 133: 61-2) என்றும், பிறரும் கூறுதல் காண்க. மயிலகவும் ஓசை கொம்பின் ஓசை போலும் என்க. நளி-செறிவு. சிலம்பு -மலை. சிலம்பும் - ஒலிக்கும், எதிரொலி செய்யும் எனினுமாம். இனி 72-மாதிரம் என்பது தொடங்கி 100 கோயில் என்னும் துணையும் தொடர்ந்த பொருளை : மண்டிலம் குடக்கேர்பு ஒருதிறம் சாரா அமயத்துப்புலவர் கயிறிட்டுக் கொண்டு நோக்கி வகுத்து வளைஇ ஓங்குநிலை வரைப்பில், பிணித்து உரீஇப் பொருத்தி அமைத்துக் கம்மியன் முடுக்கலில், புரைதீர்ந்து அப்பிய நெடுநிலையோடே வேழம்புக ஓங்குநிலை வாயில் புரவிக் குரலொடு முற்றத்து முன்கடை அருவிப் பாடு விறந்து மயிலகவும் இன்னிசை சிலம்பும் கோயில் என இயைத்துக் கொள்க. இனி, 101-யவனர், என்பது தொடங்கி, 114-நல்லில் என்னுந் துணையும், ஒருதொடர்; இதன்கண் கோப்பெருந்தேவியார் வதியும் கருப்பக் கிருகத்தின் தன்மை கூறப்படும்.
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு
101-107 : யவனர் ........................... வரைப்பின்
பொருள் : யவனர் இயற்றிய வினைமாண் பாவை கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து -சோனகர் பண்ணின் தொழில் மாட்சிமைப்பட்ட பாவை தன் கையிலே ஏந்தியிருக்கின்ற வியப்பையுடைய தகளி நிறையும்படி நெய் பெய்யப்பட்டு, பரூஉத் திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி - பருந்திரிகளைப் பந்தங்களிலே கொளுத்திவைத்த நிறத்தையுடைத்தாகிய தலையினையுடைய மேனோக்கி எரிகின்ற விளக்கை, அறு அறு காலைதோறு அமைவரப் பண்ணி - நெய் வற்றின காலந்தோறும் ஒளி மருங்கின காலந்தோறும் நெய்வார்த்துத் தூண்டி, பல்வேறு பள்ளிதோறும் பாய் இருள் நீங்க - பலவாய் வேறுபட்ட இடங்கள் தோறும் பரந்த இருள் நீங்கும்படி, பீடுகெழு சிறப்பின் பெருந்தகையல்லது -பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லது, ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் - சிறு குறுந்தொழில் செய்யும் ஆண்மக்களும் அணுக வாராத அரிய காவலையுடைய கட்டுக்களின்;
கருத்துரை : சோனகராற் பண்ணப்பட்ட தொழில் மாண்புடைய பாவை தன் கையில் ஏந்தியிருக்கின்ற வியப்பையுடைய தகளி நிறையும்படி நெய் பெய்யப்பட்டு, பெரிய திரிகளைப் பந்தங்களிலே கொளுத்திவைத்த நிறமுடைய தலையினையுடைய மேனோக்கி எரிகின்ற விளக்கை நெய்வற்றின காலந்தோறும் நெய்வார்த்தும், ஒளிமழுங்கின காலந்தோறும் தூண்டியும், பலவாய் வேறுபட்ட இடங்கள்தோறும் பரந்த இருள் நீங்கும்படி பெருமைபொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லது சிறு குறுந்தொழில் செய்யும் ஆண்மக்களும் அணுக வாராத அரிய காவலையுடைய கட்டுக்களின் என்பதாம்.
அகலவுரை : யவனர் - யவன தேசத்தில் வாழ்வோர்; துருக்கர்; மிலேச்சர் என்றுங் கூறுப. பாவை விளக்கிற் பரூஉச் சுடர் அழல என்றார் (85) முல்லைப்பாட்டினும். வினை மாண்பாவை - தொழிற்றிறத்தால் மாட்சிமைப்பட்ட பாவை, ஒருமகள் தன் கையில் தகளியை ஏந்தி நின்றாற் போன்று இயற்றப்பட்ட பாவை என்க. அப் பாவையின் கையகத்துள்ள தகளியும், காண்பார் கண்கவரும் எழிலுடைமையால் இறும்பூது பயக்கும் என்பார், ஐ அகல் என்றார். ஐ-வியப்பு, ஐவியப் பாகும் (உரி-87) என்பர் தொல்காப்பியனார். நெய் - ஆனெய் என்க. பரூஉத்திரி - பருத்த திரி.
விளக்கின்கண் நெய்யற்றுப்போதலும், திரி அற்றுப்போதலும் உண்மையின் அவ்விரண்டும் அறும்போதெல்லாம் என்பார் அறு அறு காலை என்றார். அமைவரப் பண்ணுதலாவது, மீண்டும் நெய் பெய்தும் திரியிட்டுத் தூண்டியும் திருத்துதல். ஆனெய் பெய்த விளக்குப் புகையின்றிச் செழுஞ்சுடர்விட்டு எரிதலின் நிறமுடைய தலையினையுடைய நிமிர் எரி என்றார். நிறம் - ஈண்டுப் பொன்னிறம் என்க. நிமிர்தல் - மேனோக்குதல். எரி - விளக்கு. அவ்வரண்மனையகத்தே பற்பல - மண்டபங்களிடத்தும் என்பார், பல்வேறு பள்ளி என்றார்; பள்ளி - இடம்.
வேண்டிடந் தோறும் தூண்டுதிரிக் கொளீஇ
கைவயிற் கொண்ட நெய்யகற் சொரியும்
யவனப் பாவை அணிவிளக் கழல (1. 47: 173-5)
என்றார் பெருங்கதையினும்.
பாய் இருள் - பரவிய இருள். பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை என்றது, பல்வேறு சிறப்புகட்கும் உறைவிடமாய்த்திகழும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்க. அச் சிறப்புக்களாவன : செற்றவர் அரசு பெயர்த்தலும், நட்டவர் குடியுயர்த்தலும் அரியவெல்லாம் எளிதினிற்கொண்டு உரியவெல்லாம் ஓம்பாது வீசலும் இருபெரு வேந்தரொடு வேளிர்சாய முரசு கொண்டு களம் வேட்டலும், அரசியல் பிழையாது அறநெறி காட்டலும், உயர் நிலையுலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேணீங்கி வாய் நட்டலும், விழுமியோர் வரினும் பணிந்தொழுகாமையும், விழுநிதிபெறினும் பழி நமக்கெழுக என்னாமையும், ஈதல் உள்ளமொடு இசை வேட்டலும், வியன்கண் முதுபொழின் மண்டிலம் முழுவதும் முற்றலும் பிறவுமாம். இவை மதுரைக் காஞ்சியிற் கண்டவை. ஆடவர் என்றது, ஈண்டுக் குற்றேவல் செய்யும் ஆடவரை. குற்றேவல் செய்வாரும் குறுகா வரைப்பு என்றவாறு. அரசர் உரிமையில் ஆடவர் அணுகார் (23:55) என்பது மணிமேகலை. இதனை அந்தப்புரம் என்ப வடநூலோர்.
கருப்பக் கிருகம்
108-114 : வரை ............... நல்லில்
பொருள் : வரை கண்டன்ன தோன்றல - மலைகளைக் கண்டாற் போன்ற உயர்ச்சியை உடையவாய், வரை சேர்பு வில்கிடந்தன்ன கொடிய - மலைகளைச் சேர்ந்து இந்திரவில் கிடந்தாற் போன்ற பலநிறமாய் வீழ்ந்துகிடந்த கொடிகளையுடையவாய், பல்வயின் வெள்ளியன்ன விளங்கும் சுதை உரீஇ - பலவிடங்களினும் வெள்ளியை ஒத்த விளங்குகின்ற சாந்தை வாரி, மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ் - நீலமணியைக் கண்டாற் போன்ற கருமையினையும் திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்களை யுடையவாய், செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் - செம்பினாலே பண்ணிலாலொத்த தொழில்கள் செய்தலுற்ற நெடிய சுவரிலே, உருவப் பல்பூ ஒரு கொடி வளைஇ - வடிவழகினை யுடையவாகிய பல பூக்களையுடைய ஒப்பில்லாத பூங்கொடியை ஓவியமாக எழுதி, கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் -கருவோடே பெயர் பெற்ற காட்சிக்கு இனிய நன்றாகிய இல்லின்கண்:
கருத்துரை : மலைகளைக் கண்டாற் போன்ற உயர்ச்சியை உடையவாய், அம் மலைகளைச் சேர்ந்து இந்திரவில் கிடந்தாற்போன்று வீழ்ந்து கிடக்கும் பன்னிறக் கொடிகளையுடையவாய் வெள்ளியைப்போன்று விளங்கும் சுதை தீற்றப்பட்டனவாய், நீலமணி போன்ற நிறமுடையனவும் திரட்சியை உடையனவுமாகிய திண்ணிய தூண்களையுடையவாய், செம்பினாலே பண்ணிலாலொத்த தொழிற்றிறமமைந்தநெடிய சுவரிலே அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியம் பொறிக்கப் பெற்ற கருவின் பெயரையுடைய காட்சிக்கினியநன்றாகிய இல்லின்கண் என்பதாம்.
அகலவுரை : இப்பகுதியால் பண்டைத் தமிழகத்தே இல்லங்கள் அமைத்திருந்த சிறப்பு நன்கு கண்கூடாகத் தோன்றுதலுணர்க. மலையை ஒத்த பெரிய இல்லங்கள் எடுத்துத் தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதனை இதனானும்,
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மாண் நல்லில் (501-2)
என்னும் மதுரைக் காஞ்சியானும்,
குறுந்தொடை நெடும்படிக்கால்
கொடுந்திண்ணை பஃறகைப்பில்
புழைவாயில் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்து (142-4)
என்னும் பட்டினப்பாலையானும்,
பிறாண்டுஞ் சான்றோர் கூறுமாற்றானும் காணலாம். மலை போன்றுயர்ந்த மாடங்களின் மிசைக்கிடக்கும் பன்னிறக் கொடிகட்கும் இந்திரவில் மலைமேற் கிடத்தல் உவமை என்க. வெள்ளி - வெண்பொன்; வெள்ளிக்கோள் எனினுமாம். இது சுதையின் நிறத்திற்கு உவமை.
திங்களுங் கரிதென வெண்மை தீற்றிய
சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை (இராமா - நகரம் -27)
என்றார் கம்பநாடரும். மணி - நீலமணி; தூணின் நிறத்திற்குவமை. மா - கருமை. திரள் - திரட்சி. திண்காழ் - திண்ணிய தூண். செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் புனைந்து (485) என்னும் மதுரைக் காஞ்சி அடியினை ஒப்புக்காண்க. செய்வு - செய்தல்; தொழிற்றிற னமைந்த நெடிய சுவர் என்றவாறு. இச் செஞ்சுவரில் பல பூக்களையுமுடையதாய், ஒப்பற்ற பூங்கொடி ஓவியம் புனைந்து என்க. துகிற்கொடி யன்றென்றற்குக் கொடி என்ற சொல்லிற்கு வல்லிசாதியாகிய கொடி என்று நச்சினார்க்கினியர் வரைந்துள்ளார். கருவொடு பெயரிய இல் என்றது கருப்பக்கிருகம் என்றவாறு. காண்பு - காட்சி. கலைகை யற்ற காண்பின் நெடுவரை (325) என்றார் மலைபடுகடாத்தினும். இனி 101-யவனர் இயற்றிய என்பது தொடங்கி 114 - நல்லில் என்னுந்துணையும் கிடந்த இத்தொடரை. யவனர் இயற்றிய பாவை ஏந்து அகல் நிறையச் சொரிந்து கொளீஇய எரி, அறுவறு காலை அமைவரப் பண்ணி இருள் நீங்க, பெருந்தகை அல்லது ஆடவர்குறுகா வரைப்பில், வரைகண்டன்ன தோன்றல, கொடிய, சுதை யுரீஇச் செய்வுறு சுவர் கொடி வளைஇக் காண்பு இன் இல் என இயைத்துக் கொள்க. இனி, 115-தசநான்கு, என்பது தொடங்கி, 135-சேக்கை, என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண், கோப்பெருந் தேவியார் எழுந்தருளியிருக்கும் பாண்டில் என்னும் கட்டிற் சிறப்புக் கூறப்படும்.
பெரும்பெயர்ப் பாண்டில்
115-123 : தசநான்கு ................. பாண்டில்
பொருள் : தசம் நான்கு எய்திய - பத்துக்கள் நான்கு நிரம்பப்பெற்ற அகவையையுடைய, பணை மருள் நோன்றாள் - முரசென்று மருளும் வலிய கால்களையும், இகல் மீக்கூறும் ஏந்தெழில் வரி நுதல் பொருதொழி நாகம் - போரில் மேலாகச் சொல்லும் உயர்ந்த அழகினையும் புகர் நிறைந்த நெற்றியினையும் உடைய பொருதுபட்ட யானையினுடைய, ஒழி எயிறு அருகு எறிந்து - தாமே வீழ்ந்த கொம்பை இரண்டு புறத்தையும் செத்தி, சீரும் செம்மையும் ஒப்ப - நிறையும் நேர்மையும் பொருந்துமாறு, வல்லோன் - தொழில் வன்மையுடைய தச்சன், கூர் உணிக் குயின்ற - கூரிய சிற்றுளியாலே செய்த, ஈரிலை இடை இடுபு - பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு, தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப - சூல்முற்றி அசைந்த இயல்பினையுடையராகிய மகளிரது பால்கட்டி வீங்கின முலையை ஒப்ப, புடை திரண்டு இருந்த குடத்த - பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், இடைதிரண்டு உள்ளி நோன்முதல் பொருத்தி - கட்டிற்கும் குடத்திற்கும் நடுவாகிய இடம் ஒழுக மெல்லியதாய்த் திரண்டு உள்ளியின் வலிய முதல் போலும் உறுப்புக்களையும் அமைத்து, அடியமைத்து - கால்களைத் தன்னிடத்தே தைக்கப்பெற்று, பேரளவு எய்திய பெரும்பெயர்ப் பாண்டில் - பெரிய எல்லையைப் பெற்ற கச்சுக் கட்டில் என்னும் பெயரையுடைய பாண்டில்;
கருத்துரை : நாற்பதியாண்டகவை நிரம்பியதும் முரசம் போன்ற கால்களையுடையதும், போர்த்தொழிலிலே புகழப்பட்டதும், உயர்ந்த அழகினையும், புகர் நிறைந்த நெற்றியினையும் உடையதும், போரின்கண் விழுப்புண் பட்டிறந்ததுமாகிய களிற்றின்கட் டாமே வீழ்ந்த மருப்புக்களைப் பக்கங்களைச் செத்தி, சீரும் செம்மையும் பொருந்தக்கைத்தொழில் வல்ல தச்சன் கூரிய உளியால் செய்த பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு சூல்முற்றி அசையும் இயல்பினையுடைய மகளிரின் பால்கட்டி வீங்கின முலையை ஒப்பப் புடைதிரண்டிருந்த குடத்தையுடையனவும், குடத்திற்கும் கட்டிற்கும் இடையிட்ட பகுதி மெல்லிதாய் ஒழுகித் திரண்டனவும், உச்சியின் முதல் போன்ற உறுப்புக்களையுடையனவும், ஆகிய கால்களைத் தன்னிடத்தே தைக்கப் பெற்றுப் பெரிய எல்லையைப் பெற்ற கச்சுக் கட்டில் என்னும் பெயரையுடைய பாண்டில் என்பதாம்.
அகலவுரை : தசம் - பத்து; வடசொல். தசநான்கு எய்திய என்றது நாற்பது எய்திய என்றவாறு. நாற்பதியாண்டு நிறைந்த யானை என்க. நாற்பது யாண்டு யானைக்குச் சிறந்த இளமைப் பருவம் என்க. பணை-முரசம். நோன்றாள் - வலியுடைய கால், இகன் மீக்கூறுதல் போர்த்தொழிலில் சிறந்த யானை எனப் புகழப்படுதல், ஏந்து எழில் - உயர்ந்த அழகு. வரி யானையின் நெற்றியிலமைந்த கோடுகள். பொருதொழி நாகம் - போரின்கண் புறங்கொடாதே நின்று விழுப்புண்பட்டிறந்த மறக்களிறு. அத்தகைய யானையின் உடல் அழிந்த பின்னர்த் தாமே வீழ்ந்த முழுமருப் பென்பார், ஒழியெயிறு என்றார், தந்தம் என்னும் வழக்குண்மையின் எயிறு என்றார். அருகெறிதல் - பக்கங்களைச் சீரும் செம்மையும் படச் செதுக்குதல். நிறையும் நேர்மையும் பொருந்த என்பார், சீரும் செம்மையும் ஒப்ப என்றார். சீர் நிறையின் மேனின்றது. செம்மை - நீட்டலளவை குறித்து நின்றது. குயின்ற - குடைந்த. ஈரிலை - பெரிய இலைத்தொழிற் சிற்பம். இனி இரட்டையாக அமைந்த இலைச் சிற்பம் எனினுமாம். கருப்பம் முதிர்ந்து அசையும் இயல்புடைய மகளிரின் பால் கட்டிப் பக்கங்கள் பருத்த முலை, கட்டிற் கால்களின்கண் கடைந்த குடத்திற்கு உவமை. கடுப்பு : உவமவுருபு. குடத்த - குடத்தை உடையனவாய், உள்ளி நோன் முதல் - உள்ளிப்பூண்டின் கிழங்கு. நோன்மை : ஈண்டுப் பருமையின் மேற்று. உள்ளி விடமுள்ளியுமாம். இதுவும் காலின்கண் கடைந்த உருவம் என்க. இடை - கட்டிற்கும் காலிற் குடத்திற்கும் நடுவிலுள்ள பகுதி. அடி-கால்கள். அமைத்தல்-கட்டிலோடு பொருந்தத் தைத்தல். பேரளவு - கட்டிலிற் கமைந்த அளவின் உயர்ந்த எல்லை. பெரும் பெயர்-கச்சுக்கட்டில் என்னும் புகழ்ந்து கூறப்பட்ட பெயர். பாண்டில் - கட்டில் : வட்டக் கட்டிலுமாம்.
கட்டில் ஒப்பனைத்திறம்
124-131 : மடை .................... மேம்பட
பொருள் : மடைமாண் நுண் இழை பொலியத் தொடை மாண்டு - மூட்டுவாய் மாட்சிமைப்பட்டு நுண்ணிய நூல் அழகு பெறும்படி தொடுத்தற்றொழிலாற் சிறந்து, முத்துடைச் சாலேகம் நாற்றி - முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர் மாலைகளைத் தூங்கவிட்டு, குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடு கண்புதையக் கொளீஇ - குத்துதல் பொருந்திப் புலியினது வரியைத் தன்னிடத்தே கொண்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளால் நடுவு வெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, துகள் தீர்ந்து -தொழிற் குற்றஞ் சிறிதுமின்றி, ஊட்டுறு பன் மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து - பல நிறங்களும் ஊட்டப்பட்ட பலவாகிய மயிர்களை உள்ளே வைத்துப் போர்த்த போர்வையின் மேலே அரிமா வேட்டையாடுதல் போன்ற உருப்பொறித்து, வியன்கட் கானகத்து - அகன்ற இடத்தையுடைய காட்டிடத்தே மலர்ந்த, முல்லைப் பல்போது உறழப் பூ நிரைத்து - முல்லை முதலிய பல வேறுபட்ட பூக்களின் உருவங்களையும் நிரம்பப் பொறித்து, மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட - மென்மையாகப் போர்த்த போர்வைக்கு மேலாக;
கருத்துரை : மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட மெல்லிய நூல் அழகுறும்படி, தொடுத்தற் றொழிலாற் சிறந்து மாண்புடைய முத்துக்களான் இயன்ற தொடர்மாலையைச் சாலேகம் போன்று நாலவிட்டு, உருக்குத்துதற்றொழிலாலே, புலியின் வரிகள் குத்தப்பட்ட அழகிய தட்டம் போன்ற தகடுகளால் அக்கட்டிலின் உள்ளிடத்தே வெளிமறைய வேய்ந்து, குற்றமற்றதாய், நிற மூட்டப்பட்ட பன்னிற மயிரையும், உள்ளே அடக்கி, அதன்மேல், அரிமா வேட்டையாடுதல் போன்றும், காட்டில் மலரும் பல்வேறு மலர்கள் போன்றும், ஓவியம் வரையப்பெற்ற மெல்லிய போர்வையைப் போர்த்து, அப்போர்வையின் மேல் என்பதாம்.
அகலவுரை : மரை - மூட்டுவாய்; ஈண்டு முத்துமாலைகளைக் கட்டிலோடே மூட்டும் இடம் என்க. தொடைமாண்டு - தொடுத்தற்றொழிலால் மாட்சிமைப்பட்டு முத்துமாலைகளை நிரலே தூங்கவிடுதலால் அது முத்தால் இயற்றிய சாலேகம் போறலின், முத்துடைச் சாலேகம் என்றார். சாலேகம்-பலகணி; காலதர். உலோகத் தகடாகலின் உருக்குத்தப்பட்டு என்பார் குத்துறுத்து என்றார். புலிப்பொறிக் கொண்ட என்றதற்குப் புலியின் உருவம் பொறிக்கப்பட்ட எனினுமாம். தகட்டின்கண் புலியுருக் குத்தப்பட்டு என்றவாறு. இத் தகடு கட்டிலின் மேல் வேயப்பட்டதென்க. கண்-இடம். புதைய-மறையும்படி - கொளீஇ-கோத்து. துகள் - ஈண்டுத் தொழிற்குற்றம். ஊட்டுறு பன்மயிர் - நிறமூட்டப்பட்ட பலவாகிய மயிர். வயமான்-அரிமா. காட்டின் கண் அரிமாவை வேட்டையாடுதல் போன்றும் முல்லை முதலிய மலர்கள் போன்றும் ஓவியம் வரைப்பட்ட போர்வையால் அம்மயிரை அடங்கப் போர்க்கப்பட்டென்க. அகத்தே மயிர் நிரைத்துப் போர்க்கப்பட்டமையால் மெல்லிதின் விரிந்த சேக்கையாயிற்றென்க. இனி, இதன் மேற் செய்யும் செயல்களைக் கூறுகின்றார்.
மெல்லணை
132-135 : துணைபுணர் ............... சேக்கை
பொருள் : துணைபுணர் அன்னத் தூநிறத்தூவி இணையணை - காதற்றுணைகளாய்த் தம்முட் புணர்ந்த அன்னத்தின் வெள்ளிய மயிராலே இணைத்த அணையை, மேம்படப் பாய்-மேன்மையுண்டாக விரித்து அதன்மேல அணையிட்டு-அணைகளையும் இட்டு, காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு அமை தூமடி விரித்த சேக்கை - கஞ்சியைத் தன்னிடத்தே கொண்ட கழுவுதலுற்ற துகிலின் மலரிதழ்கள் வைத்து மணமூட்டப்பட்ட தூய மடியினை விரித்த படுக்கையின்கண்;
கருத்துரை : காதற் றுணைகளாய்த் தம்முட் புணர்ந்த அன்னப் பறவைகளின் வெள்ளிய மயிரை இணைத்து இயற்றிய அணையை மேன்மையுண்டாகுமாறு விரித்து, அதன் மேல் தலையணை, சாயணை முதலிய அணைகளையும் இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடியினை விரிக்கப்பட்ட படுக்கையின் மேல் என்பதாம்.
அகலவுரை : துணை -காதற்றுணைகள். காதற்றுணைகளாய்ப் புணரும் அன்னங்கள் என ஆண் பெண் அன்னம் இரண்டற்கும் ஏற்பக் கூறுக. என்னை? காதல் மிக்குப் புணருங்கால் இரண்டும் உளமுருகி மயிர் உதிர்த்தல் உண்மையின். துணைபுணர் அன்னம் என்ற தொடர்க்குத் தன் பேட்டைப் புணர்ந்த அன்னச் சேவல் என்று சேவல் ஒன்றனையே கூறினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தூநிறத்தூவி இணையணை என்க.
துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணையணை மேம்படத் திருந்து துயில்
என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். இவ்வடிகட்கு, தன் சேவலோடுபுணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகி உதிர்த்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்த பல்வகையணை மீதே என அடியார்க்கு நல்லார் உரைவிரித்தனர். இணையணை என்றதற்குப் பலவான அணை எனப் பொருள்கூறி, ஐந்துமூன் றடுத்த செல்வத்தமளி (செய்-838) என்னும் சீவக சிந்தாமணியையும் எடுத்துக்காட்டினர். ஈண்டுக் கூறிய ஐந்தாவன : சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சேக்கை யோரைந்து என்பனவாம்.
இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
டுணைபுணர் அன்னத்தின் தூவிமெல் அணைஅசைஇ (கலி-72: 1-5)
என்றும், இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணையணைப் பள்ளி (சிலப் 27 : 208-9) என்றும் பிறரும் ஓதுதல் காண்க. பாய்-பரப்பி. காடி - கஞ்சி. கலிங்கம்-ஆடை. கழுவிய கலிங்கத்தில் மலரின் இதழ்களை வைத்து மணமேற்றிய தூமடி என்பார், கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி என்றார், தோடமை என்பதனைப் பிரித்துச் சேக்கையோடியைத்து, செங்கழுநீர் முதலியவற்றின் இதழ்கள் அமைந்த படுக்கை, என்றார் நச்சினார்க்கினியர். 115- தசநான்கெய்திய என்பது தொடங்கி 135-சேக்கை என்னுந் துணையும் கிடந்த இத்தொடரின் பொருளை, நாகம் ஒழி எயிறு எறிந்து, ஈரிலை இடையிடுபு, அடியமைத்துப் பேரளவெய்திய பாண்டிலிடத்தே சாலேக நாற்றித் தகடு கொளீஇப் பன்மயிர் விரைஇப் பொறித்து நிரைத்து விரிந்த சேக்கை மேலாக அன்னத்தூவி அணை பாய்த் தூமடி விரித்த சேக்கையின்கண் என இயைத்துக் கொள்க. இனி, 136 ஆரந்தாங்கிய, என்பது தொடங்கி, 166 - புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு, என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் துணைதுறந்து வதியும் கோப்பெருந் தேவியின் தன்மையும், அத் தேவியார்க்குச் செவிலி, தோழி முதலியோர் கூறும் முகமனும், தேவியார் ஓவியங்கண்டு உளங்கலங்கலும் பிறவும் கூறப்படும்.
துணைதுறந்திருக்கும் கோப்பெருந்தேவியார் தன்மை
136-147 : ஆரந்தாங்கிய ................. கடுப்ப
பொருள் : ஆரந்தாங்கிய அலர்முலை ஆகத்துப் பின் அமை நெடுவீழ் தாழ-முன்னர் முத்தாற் செய்த கச்சுச் சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்றுமே தூங்காநிற்ப, துணை துறந்து - தன் கணவன் பிரிந்தமையாலே, நன்னுதல் உலறிய சின் மெல் ஓதி - நன்றாகிய நுதலிடத்தே கைசெய்யாமல் உலறிக்கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும், நெடுநீர் வார் குழை களைந்தெனக் குறுங்கண் வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் - பெரிய ஒளியொழுகின மகரக் குழையை வாங்கிற்றாகக் குறுகிய இடத்தையுடைய அக் குழையின் வாய் உறைந்து அழுத்தின வடுவுடைய சிறிதே தாழ்ந்த காதினையும், பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து - முன்னர்ப் பொன்னாற் செய்த தொடி கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக் கிடந்த முன் கையிலே வலம்புரியை அறுத்துப் பண்ணின வளையை இட்டுக் காப்புநாணைக் கட்டி, வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்து - வாளையினது பகுத்த வாயை ஒப்ப முடக்கத்தை யுண்டாக்கிச் சிவந்த விரலிடத்தே இட்ட சிவந்த நிறத்தையுடைய முடக்கென்னும் மோதிரத்தையும், பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு - முன்னர்ப் பூத்தொழிலையுடைய துகில் கிடந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் இக்காலத்தே உடுத்த அழகிய மாசேறிய விளங்குகின்ற நூலாற் செய்த புடைவையுடனே, புனையா ஓவியம் கடுப்ப - வண்ணங்களைக்கொண் டெழுதாத வடிவைக் கோட்டின ஓவியத்தை ஒப்ப;
கருத்துரை : முன்னர் முத்தாற் செய்த கச்சுச் சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே, இப்பொழுது குத்துதல் அமைந்த தாலியையுடைய மங்கலநாண் ஒன்றுமேதூங்க, தன்கணவனைப் பிரிந்தமையாலே அந்நாள் தொடங்கிக் கை செய்யப்படாமல் உலறிக் கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும், மிக்க ஒளி ஒழுகிய மகரக்குழை களையப்பட்டமையால், அக் குழை கிடந்து அழுத்திய தழும்பிருந்த சிறிதே தாழ்ந்த காதினையும், முன்னர்ப் பொன்னாற் செய்த தொடி கிடந்தழுத்திய தழும்பு கிடந்த மயிர் ஒழுங்கையுடைய முன்கையிடத்தே, இப்பொழுது வலம்புரியை அறுத்தியற்றிய வளையல் ஒன்றுமே இட்டுக் காப்பு நாண் கட்டப்பெற்று வாளை மீனின் பகுத்த வாயை ஒப்ப முடக்கத்தையுண்டாக்கிச் சிவந்த விரலிடத்தேயிட்ட சிவந்த நிறத்தையுடைய முடக்கென்னும் மோதிரத்தையும், முன்பு பூத்தொழிலையுடைய துகில் கிடந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலிடத்தே இப்பொழுது மாசேறிய அழகிய நூற் புடைவையையும் உடையளாய், வடிவம் மட்டும் வரைந்து வண்ணங்களைக் கொண்டு எழுதாத ஓவியத்தைப் போன்று என்பதாம்.
அகலவுரை : இப் பகுதியில் காதற்றுணை துறந்திருக்கும் ஓர் ஒப்பற்ற பெண்மையின் சொல்லோவியத்தைக் காணலாம்.
பண்டு துணையோடிருந்தவழிக் கோப்பெருந்தேவியார் இருந்த நிலையினையும் உடன் கூறுவார், ஆரந்தாங்கிய அலர்முலை ஆகம், பொலந்தொடி தின்ற மயிர்வார் முன் கை என்றும், பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல் என்றும் கூறினார். ஆரம் - முத்துமாலை முதலியன. தாங்கிய என்னுஞ் சொல் அவ்வாரங்களின் மிகுதி குறித்து நின்றது. பின்னமை நெடுவீழ் என்றதற்குக் குத்துதல் அமைந்த நெடிய தாலிநாண் என நச்சினார்க்கினியர் உரை கூறினர். பின்னுதலமைந்த நெடிய மயிர் எனப் பொருள் கூறுவாருமுளர் என்பர். ஈண்டுப் பின்னுதல் கை செய்யாமல் கூந்தலிற்சிக்குண்டாதல் என்க. இங்ஙனமே கம்பநாடரும் தம் காவியத்தே துணை துறந்திருந்த சானகியின் நிலையினைக் கூறுங்கால் குமையுறத் திரண்டு ஒரு சடையாகிய குழலாள் எனல் காண்க. வீழ்-தாலி நாண் எனின் ஆகுபெயர் என்க. துணை - தன் உயிர்த்துணைவனாகிய மன்னன். இனித் துணை துறந்து என்றதற்கு கூடிக் கிடந்த தன்மை நீங்கிய எனப் பொருள் கூறி ஓதிக்கேற்றி உரைப்பாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். உலறிய ஓதி என்றது. கை செய்யாமல் உலறிக் கிடந்த கூந்தல் என்றவாறு. உலறுதல்-நெய்ப்பறுதல் என்க.
நெடுநீர் - பெரிய ஒளி; ஈண்டு நெடுமை, பெருமைமேனின்றது, நீர்மை தன்மை என்னும் பொருட்டாய்க்குழையின் ஒளிகுறித்துநின்றது. நீர் வார்ந்த குழை என்க. குழை -காதணி, களைந்தென - களையப்பட்டதாக. வறிது -சிறிது. குழை களையப்பட்டமையால் காது சிறிதே தாழ்ந்ததென்க. வறிது சிறிதாகும் (உரி-38) என்பர் தொல்காப்பியனார். பொலம் - பொன். சங்கினால் இயன்ற தொடிகளும் உண்மையின், பொலம் தொடி என்றார். வாயுறை - தாளுருவி என்னும் அணி. அது சிறிதாகலின் குறுங்கண் வாயுறை என்றார். இனி மகரக்குழை காதின்கண் உறையும் பகுதி சிறிதாகலின் குறுங்கண் வாயுறை என்றதற்குக் குறுகிய இடத்தையுடைய மகரக் குழையின் உறையுமிடம் எனினுமாம். வாயுறவென்று பாடமாயின் கடுக்கனை வாயுறும்படி யழுத்தின காதென்க என்பர் நச்சினார்க்கினியர். வலம்புரி -வளை சங்கினத்தில் உயர்ந்த வலம்புரிச் சங்கினாலியற்றிய வளையல். இது மங்கலங் கருதி அணியப்பட்டதென்க. கடிகை நூல் - காப்பு நாண். வளையொடு காப்புநாண் கட்டி என்றவிடத்து வளையலுக்கு, கட்டுதல் வினையின்றாகலின் வளையலையிட்டு நாணைக் கட்டி என்க. வாளைப் பகுவாய் கடுப்ப என்றது, வாளை மீனின் திறந்த வாயை ஒத்த என்றவாறு. இது மோதிரத்திற்கு வடிவுவமை. விளக்கம் - மோதிரம். பொலஞ் செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் (719) என்புழி மதுரைக் காஞ்சியினும் விளக்கம் மோதிரம் என்னும் பொருட்டாதல் காண்க.
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6-95) என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். இதற்கு முடக்கு மோதிரம் என்று அரும்பதவுரையாசிரியரும், நெளி என்று அடியார்க்கு நல்லாரும் உரை கூறுவர். நெளியென்னும் இவ் வாளைப்பகுவாய் வணக்குறு மோதிரம் இன்றும் தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் காணப்படுகின்றது. இம் மோதிரத்தை நெளியென்றே இப்போதும் வழங்குகின்றனர்.
கொளீஇய -செருகிய. செங்கேழ் - சிவந்த நிறம். கிளிச்சிறை என்னும் பொன்னாற் செய்த மோதிரம் என்பார் செங்கேழ் விளக்கம் என்றார். பூந்துகில் - பூத்தொழிலையுடைய புடைவை. ஈண்டுத் துகில் என்றது ஒருவகை ஆடையினை என்க. துணை துறந்தமையால் நீராடுதலும் இலளாய் இருந்ததனை மாசூர்ந்த அவிர்நூற் கலிங்கமுடைமையால் விளக்கினார். அக்கலிங்கத்தின்கண் ஏறிய மாசு அவளகத்துறையும் பேரன்பை எடுத்துக்காட்டி அவள் அகத்தழகை மிகுவித்தலால் அவட்கு அணியாகிற் றென்பார். அம்மாசு என்றார். அம்மாசு - அழகிய அழுக்கு. இங்ஙனம் அழுக்கினும் அழகுடைமை காட்டவல்லார் நல்லிசைப்புலவர்.
அழகுணர்ச்சி மிக்க கம்பநாடரும், அரக்கன் சிறையிடைக்கிடந்த சீதை ஆண்டிருந்த பிரிவாற்றாமை நிலையினைக்கண்ட மாருதி அந்நிலையே அந் நங்கையின் அகத்தழகின் மெய்ப்பாடாகலின், அவ்வழகினை இராமன் காணமாட்டாமைக்கு இரங்குவானாய், மாண நோற்று ஈண்டு இவன் இருந்த வாறெல்லாம், காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால் என இயம்பினான் என்றமை காண்க. புனையாவோவியம்-வடிவமட்டும் வரைந்து, வண்ணம் தீட்டப் பெறாத நிலையில் உள்ளவோவியம். இவ்வோவியத்தையே கம்பநாடர் தம் காவியத்தே அமைத்து அப்புனையாவோவியத்தின்மேற் புகையும் ஊட்டிச் சீதைக்கு உவமையாக்கினர் போலும். சீதையின் பிரிவாற்றாமை இன்னும் கொடிதாகலின் புகையூட்ட வேண்டிற்று.
தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த
ஓவியம் புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள் (காட்சிப்-11)
என்பதும் கம்பராமாயணம். இப்புனையாவோவியம் தண்டமிழ் ஆசான் சாத்தனாரானும்,
மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா வோவியம் போல நிற்றலும் (மணி. 16-130-1)
என்றும்,
புனையா வோவியம் புறம்போந் தன்ன
மனையகம் நீங்கி வாணுதல் விசாகை
என்றும் மணிமேகலையிற் கூறப்படுதல் காண்க.
தோழியர் செயல்
147-151 : புனைவில் ...................... வருட
பொருள் : புனைவு இல் நல்லடி - ஒப்பனை செய்யப்படாத நல்ல அடியை, தளிரேர்மேனி - மாந்தளிரை ஒத்த நிறத்தினையும், தாய சுணங்கின் - பரந்த சுணங்கினையும், அம்பணைத் தடைஇய மென்தோள் - அழகிய மூங்கில்போலத் திரண்ட மெல்லிய தோளினையும், வம்பு விசித்து யாத்த முகிழ்முலை - கச்சை வலித்துக் கட்டின தாமரை முகைபோலும் முலையினையும், வாங்குசாய் நுசுப்பின் - வளைவுடைய நுடங்குமிடையினையும் உடைய, மெல்லியல் மகளிர் வருட - மெத்தென்ற தன்மையினை யுடைய சிலதியர் துயில் உண்டாகுமோ என்று தடவா நிற்ப;
கருத்துரை : தளிர்போன்ற மேனியினையும், பரந்த சுணங்கினையும், அழகிய மூங்கில் போலும் தோளினையும், தாமரை முகைபோன்ற முலையினையும், நுடங்கும் இடையினையுமுடைய மெத்தென்ற தன்மையை யுடைய சிலதியர், அக்கோப்பெருந்தேவியார்க்கு உறக்கம் உண்டாகுமோ! என்று, அடியை வருடாநிற்ப என்பதாம்.
அகலவுரை : புனைவில் என்பதனை நல்லடிக்கேற்றுக. புனைவில் நல்லடி என்றது, கழுவிச் செம்பஞ்சிட்டுப் பூண்களணியப்பெறாத நல்ல அடி என்றவாறு. நல்லடி என்றார், இயற்கையிலேயே இளைப்புறு ஞமலி நலத்தகுநாவில் செம்மையும் மென்மையும் சிறந்துவனப்பெய்திய அடிகள் என்றதற்கு. தளிர்-ஈண்டு மாந்தளிர். இது மகளிர் மேனிக்கு நிறவுவமை. தளிர்ஏர் அன்ன மேனித் தளிர்ப்புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் (707-8) என்றார் மதுரைக் காஞ்சியினும். தாய-பரந்த சுணங்கு-தேமல். அம்பணை - அழகிய மூங்கில். தடைஇய - திரண்ட. வம்பு-கச்சு. விசித்துயாத்த - இறுக்கிக் கட்டப்பட்ட. வம்பு விசித்தியாத்த முகிழ்முலை என மாறுக. முகிழ்-மொட்டு. ஈண்டுத் தாமரை மொட்டென்க. இனி முகிழ்முலை : வினைத்தொகை யெனக்கொண்டு தோன்றிய முலை எனினுமாம். முகிழ்த்தல்-தோன்றுதல். வாங்குசாய் - வளைந்து நுடங்கும். நுசுப்பு - இடை. வருடுதல் - தடவுதல். துயிலுதற்கு அடிவருடல் மரபென்க. கோப்பெருந்தேவி துயிலாமையின் தோழியர் துயிலுண்டாதற் பொருட்டு அடிவருடா நிற்ப என்க.
செவிலியரின் தேற்றவுரைகள்
152-156 : நரைவிராவுற்ற ....................... மொழியவும்
பொருள் : நரை விராவுற்ற நறுமென் கூந்தல் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ - நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் இவள் ஆற்றாவொழுக்க மிகுகையினாலே திரண்டு, குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி - குறுகியனவும் நீண்டனவுமாகிய மொழிகள் பலவற்றையும் பலகாற் சொல்லி, இன்னே வருகுவர் இன்றுணையோர் என - இப்பொழுதே வருகுவர் நினக்கு இனிய துணையாந் தன்மையுடையோர் என்று, உகத்தவை மொழியவும் - அவள் மனத்திற்கினிய மொழிகளைக் கூறாநிற்பவும்;
கருத்துரை : நரை கலந்த கூந்தலையுடையாரும், சிவந்த முகத்தை யுடையாருமாகிய செவிலித்தாயர் கோப்பெருந்தேவியார் ஆற்றாமை மிகுதலாலே பலரும் திரண்டு அளவில் குறுகியனவும் நீண்டனவுமாகிய மொழிகள் பலவற்றையும் பலகாற் சொல்லி இப்பொழுதே நினக்கினிய கேள்வர் வருவர் வருந்தாதேகொள் என அவள் மனத்திற்கினியன தேர்ந்து கூறித் தேற்றாநிற்பவும் என்பதாம்.
அகலவுரை : மொழியவும் ஒல்லாள் என முடியும். செவிலித்தாயர் அகவையான் முதிர்ந்தோராதலின் நரைவிராவுற்ற நறுமென் கூந்தல் என்றார். பெரும் பின்னிட்ட வானரைக் கூந்தலர் நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் (408-9) என்றார், மதுரைக் காஞ்சியினும். நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன (மணி-22:130) என்றும், நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர் (பெருங்-1. 41:99) என்றும், நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற், செம்முது செவிலியர் பல பாராட்ட, (அகம்-254: 1.2) என்றும் பிறரும் கூறுதல் காண்க. கை-ஒழுக்கம்; ஈண்டு ஆற்றாவொழுக்கம் என்க. குழீஇ - திரண்டு.
குறிய - அளவாற் குறுகிய மொழி; நெடிய - அளவின் நீண்டமொழி-சிறிய மொழிகளும் பெரிய மொழிகளும் என்றவாறு. அவையாவன கோப்பெருந்தேவியின் மனத்தை வேறு வழியிற் றிருப்புதற்பொருட்டுக் கூறும், பொருளொடு புணராப் பொய்ம் மொழியும், பொருளொடு புணர்ந்த நகைமொழியும் பிறவுமாம். இதனை, ஒரு யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன வென்று அவற்றுக்கியையாப் பொருள்படக் கூறுவனவும், சிறு குரீஇ உரையும், தந்திரவாக்கியமும் போல்வன (தொல்-செய். 173) எனவரும் பேராசிரியர் கூற்றானும் உணர்க. இக்கருத்தானே ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறியவும் நெடியவும் என்ற தொடர்க்கு பொருளொடு புணராப் பொய்ம்மொழியும் மெய்ம்மொழியுமாகிய பலவற்றையும் எனப் பொருள் வரைவாராயினர். இனி, இவ்வாறு செவிலியர் பொருண்மரபில்லாப் பொய்ம்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் அவ்வாற்றாற் பயன் கொள்ளுங்கால் தலைவியைத் தேற்றும் உரிமையுடையார் என்பதனை,
ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே (175)
என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தானும் அதற்குப் பேராசிரியர், தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது இதன் கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற சான்றோரும்,
செம்முது செவிலியர் பொய்ந்நொடி பகர
என்றார் என்பது; பிறவும் அன்ன எனக் கூறுமாற்றானும் உணர்க. இன்னே வருகுவர் என்றது தேவியின் ஆற்றாமைமிகுதியைக் குறிப்பாற் காட்டி நின்றது. கணவனிற் சிறந்த கேளிர் இலராகலின் இன்றுணையோர் என்றார். உகத்தவை-மனத்திற்கினிய மொழி. மகளிர் அடி வருடவும், செவிலியர் மொழியவும் என உம்மையை இறந்தது தழீஇய எச்சவும்மையாகக் கொள்க.
கோப்பெருந்தேவியின் ஆற்றாவொழுக்கம்
156-166 : ஒல்லாள் .................. அரிவைக்கு
பொருள் : ஒல்லாள் - அத்தேற்றரவினும் அமையாளாய், மிகக் கலுழ்ந்து - மிகக் கலங்கி, நுண் சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால் - நுண்ணிதாகிய சாதிலிங்கம் பூசின வலிய நிலையினையுடைய மேற்கட்டியின் திரண்ட கால்களை, ஊறா வறுமுலை கொளீஇய கால் திருத்தி - குடங்களைக் கடைந்தமைத்த கட்டிற் கால்கட்கு அருகாக நிற்கும்படி பண்ணி அவற்றினிடத்தே கட்டி , புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை-புதிதாகப் பண்ணப்பட்ட மெழுகு வழித்த மேற்கட்டியின்மேல், திண்நிலை மருப்பின் ஆடுதலையாக விண் ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளில் வானிடத்தே சென்று திரிதலைச் செய்யும், வீங்கு செலல் மண்டிலத்து முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய - மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு பிரிவின்றி நிலைத்தலையுடைய, உரோகிணி நினைவனள் நோக்கி - உரோகிணியை இவள் போன்று யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமே என்று நினைத்தனளாய்ப் பார்த்து, நெடிது உயிரா - நெட்டுயிர்ப்புக்கொண்டு, மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி - சிறந்த இமைகளால் தாங்கப்பட்டனவாய் மிக்கு வீழாநின்ற ஐதாகிய கண்ணீர்த் துளியில், செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியா - சிவந்த விரலைக் கடைக்கண்ணிடத்தே சேர்த்திச் சிலவற்றைத் தெறித்து, புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு - தனிமையோடு கிடக்கும் அன்புமிகுகின்ற அரிவைக்கு;
கருத்துரை : (சிலதியர் அடிவருடவும் செவிலியர் உகத்தவை மொழியவும்) அவையிற்றால் ஆறுதல் கொள்ளாளாய் மிகவும் கலங்கி, நுண்ணிய சாதிலிங்கம் பூசின வலிய நிலையினையுடைய திரண்ட மேற்கட்டியின் கால்களைக் குடமமைந்த கட்டிற் காலருகே நிறுத்தி, அவற்றின்மேற் கட்டிய மெழுகு வழித்த புதிய மேற்கட்டியாகிய கிழியின்மேல் எழுதப்பட்டதும், ஞாயிற்றோடே மிகவும் மாறுபாடுடையதுமாகிய திங்களின் ஓவியத்தோடே நிலைத்துள்ள உரோகிணியின் ஓவியத்தை, யாமும் இவள் போன்று காதலரோடு பிரிவின்றி உடனுறையப் பெற்றிலேமே என்று கருதினளாய் நெடிது நோக்கி, அவ்வழித் தன்கண் இமைகளிலே தேங்கித் துளிக்கும் கண்ணீரைத் தன் விரலைக் கடைக்கண்ணிடத்தே சேர்த்திச் தெறித்து, நெட்டுயிர்ப்புக் கொண்டு தனிமையோடே கிடக்கின்ற அன்புமிக்க இக் கோப்பெருந்தேவிக்கு என்பதாம்.
அகலவுரை : ஒல்லாள் - பொருந்தாளாய். கலுழ்ந்து - கலங்கி. நுண்சேறு - நுண்ணிய சாதிலிங்கக் குழம்பு. இது மேற்கட்டியின் கால்களுக்கு வழிக்கப்பட்டதென்க. வழித்தல்-பூசுதல். நோன் நிலை வலிய நிலைமை. திரள்கால் - உருட்சியுடையகால். ஊறாவறுமுலை என்றது குடத்திற்கு வெளிப்படை கூறியவாறு. குடம் முலைபோறலின் முலை என்றார்; புதுவதியன்ற -புதிதாக இயற்றப்பட்ட. மெழுகு செய்படம் - மெழுகு வழித்த துணி; மேற்கட்டி. அக் கிழியின்மேல் ஓவியம் வரையப்பட்டிருந்ததென்க. ஆடு-மேடராசி. இராசிகளை மேட முதலாக எண்ணுதலுண்மையின் ஆடுதலையாக என்றார். வீங்கு செலல் மண்டிலம் -மிக்க செலவினையுடைய ஞாயிறு. திங்கண் மண்டிலத்தினும் ஞாயிற்று மண்டிலம் மிக்க செலவினையுடைமையால் வீங்குசெலன் மண்டிலம் எனப்பட்டது. ஈண்டு ஞாயிற்று மண்டிலம் ஓவியத்தில் வரையப்பட்ட திங்கண்மண்டிலத்திற்கு அடையாக நின்றது (ஓவியத்தில் வரையப்பட்டதன்று.)
பல்லாற்றானும் ஞாயிற்று மண்டிலத்திற்கும் திங்கண் மண்டிலத்திற்கும் வேற்றுமையுண்மையின் ஞாயிற்று மண்டிலத்தோடு முரண்மிகு செல்வன் எனத் திங்கள்மண்டிலத்தைக் குறிப்பிட்டார். ஈண்டுத் திங்கள்மண்டிலமாகிய வட்டத்துள்ள திங்களை ஆடவனாகவும் உரோகிணியை அவன் மருங்கமைந்த மடந்தையாகவும் ஓவியம் வரையப்பட்ட தென்க. உறுவு கொள் உரோகிணியோடு உடனிலை புரிந்த மறுவுதை மண்டிலக் கடவுளை, (2-9: 167-8) யெனப் பெருங்கதையினும் கூறப்பட்டமை காண்க. முரண்-மாறுபாடு. உரோகிணி - நாண்மீன் இருபத்தேழனுள் ஒன்று. இந் நாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இம்மகளிர்க்குத் திங்கள் கணவன் என்றும் இம்மகளிரில் உரோகிணி என்பாள் தன் குணத்தானும், எழிலானும் திங்களஞ் செல்வனைப் பெரிதும் தன் வயப்படுத்தமையால், அவன் ஏனையோரை வெறுத்து அவ்வுரோகிணியோடே உறைவான் ஆயினான் என்றும், வடவர் கூறும் கதையை மேற்கொண்டு இவ்வோவியம் வரையப்பட்டதென்க. எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் பிரிந்தார் செயலாகலின் ஈண்டுத் தேவியார், திங்களையும் உரோகிணியையும், தலைவனோடும் தன்னோடும் ஒப்புமை கொண்டு அவர்கள் போன்று உடனுறையப் பெறாமைக்கு வருந்தி நெட்டுயிர்ப்புக் கொண்டனர் என்க.
கணைகழி கல்லாத கற்பிறங் காரிடைப்
பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப்
பிணையுங் காணிரோ பிரியுமோ அவையே (20)
என எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலைக் கலியினுள்ளும் காண்க. திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேனே என்னும் என்பதுமது. மாஇதழ்-சிறந்த இமை; பெரிய இமையுமாம். அரிப்பனி-அரித்து வீழும் கண்ணீர். புலம்பு-தனிமை. ஈண்டுத் தோழியரோடும் செவிலியரோடும் வதியும் அரிவையைத் தனிமையின் வதியும் என்றது, அவர்களிடையே இருந்தும் தன் ஆருயிர்த்துணைவனையின்றித் தனித்துறையும் தனிமை எண்ணமே மிக்குத் தனித்துறைவாள் போறலின் என்க. என்னை? துணையொடு கழியப் பெறாமையின் புல்லென்றழிந்த நெஞ்சினளாய் எல்லாச் சுற்றத்தார்க்கும் இடை நின்றேயும் தனியள் ஆவள் என்பதனையே புலம்பித் தோன்றல் (தொல் மெய்ப்- 17.) எனத் தொல்காப்பியரும் கூறினர் ஆதலின் என்க. இனி 136-ஆரந்தாங்கிய, என்பது தொடங்கி, 166 அரிவைக்கு என்னுந்துணையும் தொடர்ந்த இத்தொடரின் பொருளை, ஆகத்து வீழ்தாழத் துணை துறந்து கடிகை நூல் யாத்து மாசூர்ந்த கலிங்கமொடு, புனையா ஓவியம் கடுப்ப, மகளிர் அடிவருட, செவிலியர் குழீ இப்பயிற்றி மொழியவும் ஒல்லாள் கலுழ்ந்து படமிசைச் செல்வனொடு நிலைஇய உரோகிணி நோக்கி உயிரா, விரல் கண் சேர்த்தித் தெறியா, புலம்பொடு வதியும் அரிவைக்கென அணுகக் கொண்டு காண்க. இனி 167 - இன்னா என்பது தொடங்கி 188-பாசறைத் தொழிலே என்னும் துணையும் ஒரு தொடர். இதன்கண், அரிவைக்கு அரும்படர் தீரப் பாசறைத் தொழில் முடிவதாக எனக் கொற்றவையைப் பரவுதல் கூறப்படும்.
கொற்றவையை வெற்றிவேண்டல்
167-168 : இன்னா .................. அம்ம
பொருள் : இன்னா அரும்படர் தீர - தீதாயிருக்கின்ற ஆற்றுதற்கரிய நினைவு தீரும்படி, விறல் தந்து - வெற்றியைக் கொடுத்து, இன்னே முடிகதில் அம்ம - இப்பொழுது முடிவதாக இஃது எம் விருப்பம் கொற்றவாய். என் வேண்டுகோளைக் கேட்டருள்க!
கருத்துரை : (புலம்பொடு வதியும் அரிவைக்கு) தீதாயிருக்கின்ற ஆற்றுதற்கரிய நினைவு தீரும்படி வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக பலரொடு முரணிய பாசறைத் தொழில் என (188-இறுதியிற் சென்று முடியும்) இஃது என் விருப்பம் இதனைக் கேட்டருள்க கொற்றவையன்னாய்! என்பதாம்.
அகலவுரை : இது வெற்றிப் பொருட்டுக் கொற்றவையைப் பரவுவாள் ஒருத்தியின் கூற்றாகக் கூறப்பட்டது. வேந்தன் போர்த்தொழில் முடித்து வந்தாலொழிய அரிவைக்குப் படர்தீராதாதலின், அதன் பொருட்டுப் பாசறைத்தொழில் முடிக! என வேண்டினாள். முடிக என்றது வேண்டுகோட் பொருண்மைக்கண் வந்த வியங்கோள். தில்-இஃது எனக்கு விருப்பம் என்னும் விழைவின்கண் வந்தது; என்னை?
விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே (சொல்-இடை-5)
என்பது தொல்காப்பியம் அம்ம கேட்பாயாக! என்னும் பொருளில் வந்த இடைச்சொல். அம்ம கேட்பிக்கும் என்பது தொல்காப்பியம். இனி, முடிக என்னும் வேண்டுகோள்பற்றி எது என அவாய் நிலையான் எழுந்த வினாவிற்கு விடையாகவரும் பாசறைத்தொழிலின் தன்மை கூறப்படுகின்றது.
போர்க்களத்தே விழுப்புண்பட்ட வீரர்
168-172 : மின்னவிர் .................. புறம்போந்து
பொருள் : மின் அவிர் ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை - ஒளி விளங்குகின்ற பட்டத்தோடே பொலிவுபெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையினுடைய, நீள் திரள் தடக்கை நிலமிசைப் புரள- நீண்டு திரண்ட பெரிய கை அற்று நிலத்தின்கண் புரளும்படி, களிறு களம்படுத்த பெருஞ்செய் ஆடவர் - அவ்வியானையை முன்னர்க் கொன்ற பெரிய மறச்செயலை உடைய மறவர்களுடைய, ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து - விளங்கும் வாளினாற் போழ்ந்த சீரிய புண்ணைக் கண்டு பரிகரித்தற் பொருட்டு, தன் இருக்கையினின்றும் புறத்தே போந்து;
கருத்துரை : ஒளி விளங்கும் முகபடாத்தோடே பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையினுடைய நீண்டு திரண்ட பெரிய கைகள் அற்று நிலத்தே வீழ்ந்து புரளும்படி, அவ் வியானைகளை முன்னர்க்கொன்று, பின்னர்ப் பகைவருடைய ஒளியுடைய வாள் போழ்தலானே, சீரிய புண்பட்டவராகிய வீரருடைய புண்ணைப் பரிகரித்தற் பொருட்டுப், புறத்தே போந்து, என்பதாம். (திரிதரும் வேந்தன் என 187 ஆம் அடிக்கட் சென்றியையும்)
அகலவுரை : மின் - ஒளி. அவிர்தல்-விளங்குதல். ஓடை - முகபடாம்; பட்டம். வினை-ஈண்டுப் போர்த்தொழில். நவிலுதல்-பயிலுதல். தாரொடு பொலிந்த வினை நவில் யானை (மலைபடு-227) செல்சமந் தொலைத்த தாரொடு வினைநவில் யானை (பதிற் 82-4) வினை நவில் யானை (புறம்-317) எனப் பிறாண்டும் வருதல் காண்க. நீள் திரள் தடக்கை என்னுந் தொடர் யானைக்கையின் சொல்லோவியமாய்த் திகழ்தல் அறிக.
அம்புசென் றிறுத்த அரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர் (புறம் 19-9-12)
என்னும், ஆசிரியர் குடபுலவியனார் இப்பாண்டியன் போர்க்களத்தையே மூதிற் பெண்டிர் கூற்றாக வைத்துப் பாடிய பகுதியை இப்பகுதியோடு ஒப்புக் காண்க. களம்படுத்தல்-போர்க்களத்தே கொன்று வீழ்த்துதல். ஒளிறு வாள் - விளங்கும் வாள். இது பகைவருடைய வாள் என்க. இனம் பற்றி வேல் அம்பு முதலியனவும் கொள்க.
விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண். இதனை,
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து (776)
என்னுந் திருக்குறளானும் அதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானும் உணர்க. மறவர்க்கு விழுப்புண்படும் நாளே சிறந்தநாள் என்னும் மறச்சிறப்பும் உணர்க. புண்காணிய - புண்பட்டாரைக் கண்டு பரிகரித்தற் பொருட்டென்க. அரசன் அன்புடனே சென்று முகனமர்ந்து நோக்கும் நோக்கமே விழுப்புண்பட்ட வீரர்க்கு மருந்து போல்வ தென்பதனை,
தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்
பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற்
சொல்லிய சொல்லே மருந்தாகத் தீர்ந்தன
புல்லணலார் வெய்துயிர்க்கும் புண் (தொல்-புறத்-8. நச். மேற்கோள்)
எனவரும் பழம் பாட்டானும் உணர்க; பாசறைக்கண் அரசன் வதிதற் பொருட்டுச் சிறப்பாக இடம் அமைக்கப்பட்டிருக்குமாதலான் அச்சிறந்த இருக்கையினின்றும் புறத்தே போந்து என்றவாறாம். இங்ஙனம் பாசறைக்கண் அரசற்குச் சிறப்பாகப் பள்ளி உண்டென்பதனை முல்லைப்பாட்டினுள்,
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
.......................................
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
எனவரும் 43 ஆம் அடி தொடங்கி 64 ஆம் அடிவரையில் உள்ள பகுதியில் விளங்கக் காணலாம்.
வடந்தைத் தண்வளி
173-175 : வடந்தை ........................ அழல
பொருள் : வடந்தைத் தண் வளி எறிதொறும் - வடதிசைக் கண்ணதாகிய குளிர்ந்த காற்று வீசுந்தோறும் நுடங்கித் தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நற்பல பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல-அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தலையினையுடையவாய் நல்ல பலவாகிய தகளியில் எரிகின்ற பருத்த கொழுந்து எரியா நிற்ப;
கருத்துரை : வாடைக் காற்று வீசுந்தோறும், பாண்டிலின்கண் எரியும் விளக்கின் பருத்த சுடர்கள் அசைந்து தெற்கு நோக்கிய தலையினை உடைவாய்ச் சாய்ந்து எரியா நிற்ப என்பதாம்.
அகலவுரை : வடந்தைத் தண்வளி - வடதிசைக்கண்ணின்று வீசும் குளிர்ந்த காற்று. இக் காற்று மிகையான குளிர் உடையதாகலின் இதன்கட் புறம்போதல் அரிதென்பதனைக் குறிப்பான் விளக்குவார் அதன் தன்மையை விதந்து தண்வளி என்றார். கொண்டல், தென்றல், கோடை, வடந்தை (வாடை) என்பன நிரலே கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்னும் திசைகளினின்றும் வீசும் காற்றுகளுக்குப் பெயராம். வடந்தையை வாடை என்றுங் கூறுப. இவ் வடந்தைத் தண்வளியின் பெயரே நெடுநல் வாடை என இப் பாட்டிற்குப் பெயராக அமைந்தமை அறிக. புறம் போதற்கும் அருமையுடைய இவ் வடந்தைத் தண்வளி வீசும் கூதிர் நள்ளியாமத்தும் தன் காதலியின் தோள் நசைஇ உள்ளாதே முற்றெரிபோற் பொங்கிப் பகையொடு பாசறையுளான் என்பதே பாண்டிய மன்னனுக்கு வெற்றியாய் இது வாகையாயிற்றென்க.
நுடங்கி-அசைந்து, இறைஞ்சி-சாய்ந்து. தலைய-தலையினை உடையவாய். ஏர்பு-எழுந்து; இது வலனேர்பென முன்னும் வந்தமை காண்க. பாண்டில்-ஈண்டு அகல். வடந்தை வளியால் அவிந்து விடாதே எரியும் பொருட்டுப் பருத்த திரியிட்டு நிரம்ப நெய்பெய்திருத்தல் தோன்ற, விளக்கிற் பரூஉச்சுடர் என்றார். சுடரும் பாண்டிற்றிருநாறு விளக்கத்து (பதிற்-52: 13) என்றும், பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல, (பதிற்று-47:6) என்றும், உள்ளிழு துறீஇய வெள்ளடர்ப் பாண்டில், (பெருங்-1. 33:93) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. இது புறம் போக இயலாத அமயத்தும் புறம்போந்து திரியும் சிறப்புக் கூறியவாறு. இனிப், போதற்கரிய இடத்தும் போந்தமை கூறுகின்றார்.
விழுப்புண் காட்டல்
176-180 : வேம்பு ....................... விதிர்ப்ப
பொருள் : வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறை முறை காட்ட - வேப்பந்தாரைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்னர்ச் செல்கின்ற படைத்தலைவன் புண்பட்ட மறவரை அடைவே அடைவேகாட்டிச் செல்ல, பின்னர் மணி புறத்திட்ட மாத்தாள் பிடியொடு பருமம் களையாப் பாய்பரிக்கலிமா - பின்னாக மணிகளைத் தம்மேலே இடப்பட்ட பெரிய கால்களையுடைய யானைகளோடே பக்கரை வாங்காத பாய்ந்து செல்லும் செலவினையுடைய செருக்கினை யுடைய குதிரைகள், இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப-கரிய சேற்றையுடைய தெருவின் எறியப்பட்ட துளிகளைச் சிதறா நிற்ப;
கருத்துரை : வேப்பந்தாரைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே, முன்னர்ச்செல்கின்ற படைத்தலைவன் புண்பட்ட மறவர்களை அடைவே காட்டிச் செல்லா நிற்ப, மணிகளைப் புறத்தேயிடப்பட்ட பெரிய தாள்களையுடைய யானைகளும், பருமம் களையப்படாத விரைந்த செலவினையுடைய குதிரைகளும் கரிய சேற்றையுடைய தெருவின்கண் துளிகளைத் தன் மேலே சிதறவும் என்பதாம்.
அகலவுரை : வேம்பு-வேப்பந்தார்; இது பாண்டிய மன்னர்க்குரிய அடையாளப் பூவாகும்; இதனை,
வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப்
போந்தை வேம்பே யாரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க. இவற்றுள் போந்தை சேரனுக்கும், வேம்பு பாண்டியனுக்கும், ஆர் சோழனுக்கும் அடையாளப் பூவாம் என்க. ஆசிரியர் இளங்கோவடிகளாரும்,
வானவர் கோனாரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்
எனப் பாண்டிய மன்னர்க்குரிய அடையாளப் பூ ஓதினமை காண்க. இனி, ஆசிரியர் நக்கீரர் இந் நெடுநல்வாடை என்னும் தீஞ்சுவைப் பாடலை,
மக்க ணுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் (அகத்திணை - 54)
என்னும் தொல்காப்பிய விதி பிறழாது அகப் பொருளாமாறே பாடினரேனும், இதன்கண், தாம் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வெற்றியைச் சிறப்பித்தே பாடுங் கருத்தைக் குறிப்பான் அறிவித்தற் பொருட்டே அப்பாண்டியனுக்குரிய அடையாளப் பூவாகிய வேம்பினை ஈண்டு விழுப்புண் காட்டும் படைத்தலைவன் வேனுதியிற் சுட்டிக் காட்டுவாராயினர் என்க. இதனால் இப்பாட்டு அகமாகாது புறத்திணையின்பாற் பட்டதென்க.
நோன் காழ் - வலிய காம்பு. எஃகம் - வேல். முன்னோன் என்பதனை முன் செல்பவன் என்றும், படைத்தலைவன் என்றும் இரட்டுற மொழிந்து கொள்க. பெரும்புண்பட்டோரை முன்னரும், சிறுபுண்பட்டோரைப் பின்னரும் காட்டும் முறைபற்றிக் காட்டினான் என்பார் முறை முறை காட்ட என்றார். மணிபுறத்திட்ட மாத்தாட் பிடியொடு என்ற தொடர்க்கு, மணிகளைத் தன்னிடத்தே யிட்ட பெருமையுடைய தாளினையுடைய குசையோடே எனப் பொருள் கூறிக் குதிரைக்கேற்றினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். அவர், விதிர்ப்ப என்பதற்கு உதற எனப் பொருள் கூறுதல் கருதி, உதறுந்தொழில் குதிரைக்கன்றி யானைக்குப் பொருந்தாதென்னுங் கருத்தால் அங்ஙனம் கூறனர் போலும். பாசறையில் குதிரையும் யானையும் இருத்தலுண்மையின் அவ்விலங்கினப் படைகட்கு ஊடே செல்லுங்கால் எறிதுளியாற் சேறுபட்ட அத் தெருவின்கண் உள்ள சேற்றை இவ் விலங்குகள் துவைத்தலானும், விதிர்த்தலானும் சேற்றுத் துளி மன்னன் மேற்படவும், அதனைப் பொருட்படுத்தாது, விழுப்புண் பரிகரித்தலையே பொருளாகக் கொண்டு அப் படையினூடும் திரிதரும் எனக் கூறலே ஆசிரியர் கருத்தாகலின் பிடி என்பதற்கு யானை என்றே பொருள் கூறுதல் சிறப்பாம். பிடி என்பது ஈண்டுப் பெண்யானையைக் குறிக்காமல் பொதுவில் யானை என்னும் பொருட்டாய் நின்ற தென்க. பருமம் - பக்கரை. யானைக்கு மணி களையாமையும், குதிரைக்குப் பக்கரை களையாமையும், பின்னரும் போருண்மையை அறிவிக்கும் குறிப்பேதுக்களாம் என்க. இருஞ்சேறு - கரிய சேறு; பெருஞ்சேறுமாம். இஃது இயங்கலாகா நெறியினும் இயங்கி விழுப்புண் காண்டலின் சிறப் புரைத்தவாறாம்.
விழுப்புண் காணும் வேந்தன் நிலைமை
181-188 : புடை ............................ தொழிலே
பொருள் : புடைவீழ் அந்துகில் இடவயிற் றழீஇ - இடத்தோளினின்றும் நழுவி வீழ்ந்த அழகினையுடைய மேலாடையை இடப்பக்கத்தே அணைத்துக்கொண்டு, வாள் தோள் கோத்த வன்கண் காளைச் சுவல்மிசை அமைத்த கையன் - வாளைத் தோளிலே கோத்த தறுகண்மையுடைய வாளெடுப்பான் தோளிலே வைத்த வலக்கையை உடையனாய், முகன் அமர்ந்து - புண்பட்ட வீரர்க்கு அகமலர்ச்சி தோன்ற முகம் பொருந்தி, நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தா தூளி மறைப்ப - நூலாலே சட்டத்தே கட்டின முத்துமாலையினையுடைய கொற்றக்குடை தவ்வென்னும் ஓசைபட்டு அசைந்து பரக்கின்ற துளியைக் கரவாநிற்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் - நள்ளென்னும் ஓசையையுடைய நடுவியாமத்தும் பள்ளிகொள்ளானாய், சிலரொடு திரிதரும் வேந்தன் - சில வீரரோடே புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யும் அரசன், பலரொடு முரணிய பாசறைத் தொழில் - பகைமன்னர் பலரோடும் தான் ஒருவனேயாகி மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்திருந்து செய்யும் போர்த் தொழில்;
கருத்துரை : இடத்தோளினின்றும் நழுவி வீழ்ந்த மேலாடையை இடப்பக்கத்தே ஒரு கையாலணைத்துக்கொண்டு, வாளேந்துவானாகிய வன்கட் காளையின் தோளிலே வைத்த வலக்கையினை உடையவனாய், விழுப்புண்பட்ட வீரரைத் தன் செய்ந்நன்றியறிதலும், அன்பும்தோன்ற முகத்தானே பொருந்த நோக்கிப் பரிகரித்து, முத்துமாலை கட்டிய கொற்ற வெண்குடை தவ்வென்னும் ஒலிபட்டசைந்து மழைத்துளியை மறையா நிற்ப, நள்ளென்னும் நடுவியாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சில மறவர் தன்னைச் சூழ்ந்துவரத் திரிதருகின்ற அரசன் பாசறையிடத்தே இருந்து செய்கின்ற போர்த்தொழில் என்பதாம்.
அகலவுரை : புடை -பக்கம்; அரசன் மேலாடை என்னும் சிறப்புத் தோன்ற அந்துகில் என்றார். அந்துகில்-அழகிய ஆடை. இடவயின் - இடப்பக்கத்தே. தழீஇ-தழுவிக்கொண்டு. வாள்தோள் கோத்த காளை - வாளேந்துவான் என்னும் ஏவலன்; மெய்காப்பாளனுமாம். சுவல்-தோள். முகன் அமர்ந்து - முகம் பொருந்த இனிது நோக்கி; என்றது, அம் மறவர்பால் தனக்குரிய அன்பின் மெய்ப்பாடு முகத்தே தோன்றுமாறு இனிதின் ஆர்வத்தோடு நோக்கி என்றவாறு. இவ்வார்வநோக்கு விழுப்புண்பட்ட வீரர்க்கு மனமகிழ்ச்சியை நிரம்ப உண்டாக்கி அவர் புண்ணையும் விரைவின் ஆற்றவல்லதென்ப. இக்காலத்தும் நோயாளர்க்கு மனத்தின்கண் உவகையுண்டாக்கின் அவர் நோய் விரைவில் தீரும் என, மருத்துவ நூலோர் கூறுதல் காண்க. வள்ளுவனாரும் இவ்வார்வ நோக்கினை,
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
என்றும்,
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
என்றும்,
முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
என்றும், எழுந்த திருக்குறளின்கண் முகத்தானமர்ந்தென்றே பயில வழங்குதல் காண்க. தவ்வென்று : ஓசைக்குறிப்பு. வாடைக்காற்று வீசுதலான் நனைந்த குடை தவ்தவ் வென்றொலித்தல் இயல்பென்க. தா துளி: வினைத்தொகை கழுதும் துஞ்சுதற்குரிய யாமத்தும் துஞ்சானாய் என்றது, திரிதருதற் கேலாத காலத்தும் திரிந்து எனச் சிறப்பித்தவாறு, வேந்தர்கள் திரியுங்கால் பலரோடும் திரிதலே மரபாகவும், ஈண்டுக் குடைபிடிப்பான், வாளேந்துவான், காட்டுவான் முதலிய இன்றியமையாத சிலரோடன்றி ஏனையோரை யாமத்தே வருத்தற்கு நினைகிலனாய் என்பது தோன்றச் சிலரொடு திரிதரும் என்றார். பலரொடு முரணிய என்றமையால் தான் ஒருவனேயாகி என வருவித்துரைக்கப்பட்டது. ஈண்டுப் பலர் என்ற குறிப்பால் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தே ஆற்றிய போரையே இச்செய்யுள் கூறுகின்றதென்பது உணரப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தே பலரொடு முரணிய செய்தியை,
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய் (புறம்-19)
என்னும் குடபுலவியனார் கூற்றானும்,
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே (புறம்-76)
என்றும் இடைக்குன்றூர்கிழார் கூற்றானும்,
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி
நாரரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயறேர்ப் பொருநனென்(று)
எழுவர் நல்வல மடங்க ஒருபகல்
முரைசொடு வெண்குடை யகப்படுத்து (36)
எனவரும் அகத்தானும் உணர்க. பாசறையின்கண் இருந்து செய்யும் தொழிலாகலின் போர்த்தொழிலை ஒற்றுமை நயங்கருதிப் பாசறைத் தொழில் என்றார். புலம்பொடு வதியும் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறல் தந்து இன்னே முடிகதில் அம்ம பாசறைத்தொழில் என அணுகக் கூட்டுக. இனி அரிவைக்குப் படர் தீர விறல் தந்து இன்னே முடிக, அது யாதெனில் பெருஞ்செய் ஆடவர் விழுப்புண் காணிய புறம்போந்து, சுடர் அழல, துளிவிதிர்ப்பத் துகில் தழீஇ, காளை சுவன்மிசை யமைத்த கையனாய் முகன் அமர்ந்து குடை துளி மறைப்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சிலரொடு திரிதரும் வேந்தன் பாசறைத் தொழில் என அணுக இயைத்துக்கொள்க. இனி, இந்நூலின்கண், 1-வையகம் பனிப்ப, என்பது தொடங்கி, 188-பாசறைத் தொழிலே என்னுந் துணையும் விரிந்துகிடந்த பொருளை, வானம் கார்காலத்து மழை பெய்ததாகப் பின்னர்க் கூதிர்க்காலம் நிலைபெற்றது; அக் கூதிர்க்காலத்து நடுவியாமத்தே வாயிலினையும், முன் கடையினையும், முற்றத்தினையும் சிறப்பினையுமுடைய கோயில் வரைப்பில் நல்லில்லில் பாண்டிலில், சேக்கையிலே வதியும் அரிவைக்குப் படர் தீரும்படி இன்னேமுடிக வேந்தன் பாசறைத்தொழில் என இயைபு காண்க.
தனிப் பாடல்
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல் கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?
நெடுநல்வாடை முற்றிற்று.
நெடுநல்வாடைக்குப் பெருமழைப் புலவர், பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றும்..