பதிவு செய்த நாள்
22
மே
2023
05:05
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மே 27 ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்க உள்ளது. ஆனால் கோயிலில் சிலைகள் தூசி படிந்து கிடக்கிறது. ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு நினைவு கூறும் வகையில், இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறும். அதன்படி மே 27ல் விழா துவங்குகிறது. அன்று மாலை ஸ்ரீராமர் கோயிலில் இருந்து புறப்பாடாகி ராவணனை வதம் செய்தல், மே 28ல் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம், மே 29ல் திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவும் நடக்க உள்ளது.
நடைசாத்தல் : மே 28ல் விபீஷணர் பட்டாபிஷேகம் யொட்டி கோயிலில் இருந்து ஸ்ரீராமர் புறப்பாடாகி கோதண்டராமர் கோயிலுக்கு சென்று திரும்புவார். இதனால் அன்று அதிகாலை 2:30 மணிக்கு கோயில் நடை திறந்து, 3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைதொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடக்கும். இச்சமயத்தில் பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கோயில் நடை சாத்தப்படும். பின் மாலை 5 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் கோயிலுக்குள் செல்லலாம் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.
தூசி படிந்து : கோயில் 3ம் பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் சீதை, சுவாமி தரிசனம் செய்யும் ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகள் பலர் நிற்கும் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சிலைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், தூசி படிந்தும் பூ கழிவுகள் குவிந்து கிடப்பதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.