மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 10:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று (மே-23) காலமானார் . அவருக்கு வயது 70.
கருமுத்து தியாகராஜா ராதா தம்பதியினரின் ஒரே மகன் . மதுரையில் பிரபலமான தியாகராஜர் கல்லூரி, தியாகராஜர் மில்ஸ் மற்றும் பல நிறுவனங்கள் நடத்தி வந்தவர். 18ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக இருந்து வந்துள்ளார். இவரது காலத்தில் கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளார். இவரது காலத்தில் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன. சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். திரளானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவிட் காலத்தில் பெரும் உதவி: கோவிட் பாதிப்பு காலத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் ஆலைக்கு ஏற்பாடு செய்து உதவி செய்தவர். கோவிட் முதல்வர் நிவாரணநிதிக்கு ஒரு கோடி வழங்கினார். பல்வேறு சமூக நலப்பணிகள் செய்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் சமீபத்திய மீனாட்சி கல்யாணம் வைபவம் மற்றும் பட்டாபிஷேகத்திற்கும் வர முடியாமல் போனது. அவரது உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ( மே.24) இறுதிச்சடங்கு நடக்கிறது.