அன்னூர்; அச்சம்பாளையம், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னூர் அருகே அச்சம்பாளையத்தில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவில் பல்வேறு குலத்தினருக்கு குலதெய்வமாக உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து விட்டதால், அதே இடத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீரமாத்தியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு கோவில் கட்டி திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 24ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதலும், இரவு முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கணபதி மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.