பதிவு செய்த நாள்
26
மே
2023
01:05
கீழடி: கீழடி அருகே கட்டமன்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சுந்தர சாஸ்தா அய்யப்பன் கோயில் கும்பாபிஷேக விழா கேரள மாநில ஆச்சார்யார்களை வைத்து கேரள பாணியில் நடத்தப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் கோயில்கள் சடாதார பிரதிஷ்டை முறையில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்டது. கட்டமன்கோட்டை கிராமத்தில் ஸ்ரீசுந்தர சாஸ்தா அய்யப்பன் கோயில் திருப்பணிகள் கடந்த ஒராண்டாக நடந்து வந்தது. திருப்பணி வேலைகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பணிகள் கேரள ஆச்சார்யார் ருக்மாங்கதன் திருமேனி தலைமையில் தொடங்கியது. தினசரி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு பள்ளி உணர்தல், கனி காண்பித்தல், கலசதிங்கள் உஷ பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. காலை 10:30 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் தீபாராதனைகள் காட்டப்ப்டடு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கும்பாபிஷேகத்திற்கு பயன்படுததப்பட்ட கலசங்கள், தீபங்கள், மேளதாளங்கள், பொருட்கள் அனைத்துமே கேரள மாநில பாணியில் இருந்ததை பொதுமக்கள் வித்தியாசமாக கண்டனர். விளக்குகள், தீபாராதனை தட்டுகள், சாஸ்தா கோயிலின் வடிவங்களும் கேரளமாநில பாணியிலேயே இருந்தன.கோயிலில் உண்டியல்கள் ஏதும் வைக்கப்படவில்லை. அதற்கு பதில் ஆன்லைனில் காணிக்கை செலுத்த க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல கோயிலில் தரிசனம் செய்ய கேரள மாநில பாணியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் முதன் முதலாக ராஜ ராஜ சோழன் காத்திற்கு பின் நடந்த சடாதார பிரதிஷ்டை இங்குதான் என கூறப்படுகிறது. கீழடி அகழாய்வு தளத்தில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் ஸ்ரீசுந்தர சாஸ்தா டிரஸ்ட் மூலமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.