பதிவு செய்த நாள்
26
மே
2023
01:05
திசையன்விளை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா வரும் ஜூன் 1 ல் துவங்குகிறது. திசையன்விளை அருகேயுள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், கடற்கரையில் அமைந்திருப்பதும் சிறப்பாகும்.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழாவாகும். நடப்பாண்டு விசாகத் திருவிழா வரும் ஜூன் 1 ம் தேதி துவங்கி இரு நாட்கள் நடக்கின்றன. விழாவில் முதலாவது நாளான ஜூன் 1 ல் அதிகாலை, மதியம், மாலை, இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாலை 05:00 மணிக்கு அம்பை மணி முருகனின் தென்னாடுடைய சிவன், ஜோதி ராமலிங்கத்தின் முழு முதற்கடவுள் ஆகிய சமய சொற்பொழிவுகளும், இரவு 10:00 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நாடார் மடம் நிர்வாக சங்கம் சார்பில், சுண்டபற்றிவிளை, தர்மலிங்கம் குழு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு வில்லிசையும், நள்ளிரவு 01:00 மணிக்கு இளவரசி, நாகராஜன், தினேஷ் ஆகியோர் பங்கேற்கும், தமிழன் கலைக்கூடம், வசந்தகுமார் வழங்கும், மனிதன் நிம்மதியாக வாழ்ந்தது அந்த காலமா, இந்த காலமா நகைச்சுவை திரை இசைபட்டி மன்றம் நடக்கிறது.
விழாவின் சிகர நாளான வரும் 2ம் தேதி விசாக திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பு, 05:0 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜை, காலை 09:00 மணி முதல் திசையன்விளை எஸ்.ஆர்.டி. பாரதி ஸ்டீல் சார்பில், வெள்ளிமலை, ஹிந்து தர்ம வித்யா பீடம், இருளப்பபுரம் சிவஆனந்த ரமேஷ், பெரியபுராணம் சிந்தனை அரங்க திருக்கூட்டம் நடத்தும், திருவாசகம் முற்றோதுதல், காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு உச்சிக்கால சிறப்புபூஜை, மாலை 05:00 மணிக்கு தென்தாமரைகுளம் மணிகண்டன் நாதஸ்வரம், மாலை 06:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை சிறப்புபூஜை, இரவு 7 மணி முதல் செய்க தவம் என்ற தலைப்பில் அம்பை மணிமுருகன், சிவனே தெய்வம் என்ற தலைப்பில் ஜோதிராமலிங்கம், ஆகியோர்களின் சமய சொற்பொழிவுகள், இரவு 8.30 மணிக்கு ராக்காலபூஜை, 11 மணிக்கு எஸ்.ஆர். சந்திரன் ஸ்டார் நைட்குழு பக்தி மெல்லிசை, நள்ளிரவு 01:00 மணிக்கு சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வானவேடிக்கை முழங்க வீதி உலாவந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றார். விழாவிற்காக உவரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.