பதிவு செய்த நாள்
26
மே
2023
05:05
சிங்கம்புணரி: பிரான்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்காததால் கூடுதல் வசதிகள் கிடைக்காமல் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
பாரி ஆண்ட பறம்புமலை என்றழைக்கப்படும் பிரான்மலை சங்க இலக்கியத்தில் பாடல்பெற்ற தலமாக உள்ளது. இம்மலை அடிவாரத்தில் பாண்டிய நாட்டு 16 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரிய திருக்கொடுங்குன்ற நாதர் கோயில் உள்ளது. மலை உச்சியில் முருகன், விநாயகர் சன்னதிகளும், தர்காவும் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தங்கும் விடுதி, கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிரான்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்காததால் இப்பகுதியை மேம்படுத்தி இங்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை. சுற்றுலா தளமாக அறிவித்தால் அத்துறை சார்ந்த கூடுதல் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். செந்தில்குமார், பா.ஜ., ஒன்றிய பொதுச்செயலாளர், சிங்கம்புணரி: திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட புனித தலமாக உள்ள பிரான்மலை உள்ள நிலையில் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் அதிகளவில் மலை உச்சிக்கு செல்கின்றனர். ஆனால் அடிவாரத்திலும் மலையிலும் பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக தங்கும் விடுதி, கழிப்பறை போதுமானதாக இல்லை. எனவே மாநில அரசு பிரான்மலையை அதிகாரப்பூர்வமாக சுற்றுலாத்தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.