பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
வடபழனி முருகன் கோவிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட, மூன்று வெள்ளி கட்டிகள் மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை, வடபழனி முருகனுக்கு கோவிலில் பக்தர்கள் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக வழங்கும் நகைகளில் விலை உயர்ந்தவற்றை கோவில் துணை கமிஷனரும், மற்றவற்றை அர்ச்சகர்களும் பராமரித்து வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக வடபழனி கோவில் நகைகளை சரிபார்க்கும் பணி நடந்து வந்தது. அப்போது, மூன்று வெள்ளி கட்டிகள் கறுத்து போன நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
முலாம் பூச்சு: பரிசோதனையில், அவை வெள்ளி முலாம் பூசப்பட்டவை என, தெரியவந்தது. காணிக்கையாக செலுத்திய பக்தரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர், குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையின் எடைக்கு நிகராக, 500 கிராம் எடை கொண்ட ஏழு வெள்ளிகட்டிகளை காணிக்கையாக்கியதாக தெரிவித்தார். இந்த வெள்ளி கட்டிகள் அர்ச்சகர் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.நகைகளை சரிபார்க்கும் பணி நேற்றும் நடந்து கொண்டிருந்தது. இந்த பிரச்னை தொடர்பாக அறநிலையத் துறையின், இணை கமிஷனர் திருமகள், அர்ச்சகர்களிடம் விசாரித்தார்.
முடியும் போது தெரியும்: இது குறித்து, வடபழனி கோவில் துணை கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ""நகைகளை சரிபார்த்து ஒப்படைக்கும் பணி கோவிலில் நடைபெற்று வருகிறது. அந்த பணி முடியும் போது தான், வெள்ளி கட்டிகள் தொடர்பான விவரம் தெரியவரும் என்றார். மூன்று வெள்ளி கட்டிகள் காணாமல் போனதாகவும், பின்னர் அவற்றை கண்டுபிடித்து விட்டதாகவும், கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் சங்கரலிங்கம், கோவிலுக்கு சென்று வெள்ளி கட்டிகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.