பதிவு செய்த நாள்
28
மே
2023
10:05
புதுடில்லி: இன்று (மே 28) காலை டில்லியில் நடந்த புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் தமிழக பாரம்பரியத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. நாதஸ்வர இசையுடன் பூஜை துவங்கியது. தமிழக ஆதினங்கள் வழங்கிய செங்கோலை பார்லி., சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி வைத்தார். தேவார பாடல்கள் பாடப்பட்டது.
இன்றைய பூஜையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். தமிழக ஆதினங்கள் 21 பேர் பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கினர். மதுரை ஆதினம் ஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரியா சுவாமிகள் , குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல சுவாமிகள், பேரூர் சாருங்க ஆதினம், செங்கோல் ஆதினம், தொடாவூர் ஆதினம், சூரிய னார் கோயில் மகா பண்டாரசுவாமிகள் , மகிலம் பொம்மபுரம் ஞானபிரகாச சுவாமிகள், ரவீந்திர சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், , அவினாசி காமாட்சி சுவாமிகள், சபாபதி தம்பிரான் சுவாமிகள் , சிந்தாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், என ஒவ்வொரு ஆதினமாக பெயர் அழைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் பிரதமருக்கு தனித்தனியாக ஆசி வழங்கினர். இவர்கள் அளித்த செங்கோலை பெற்று சபாநாயாகர் இருக்கை அருகே வைத்தார். முன்னதாக செங்கோலை நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து பிரதமர் வணங்கினார். நிகழ்ச்சிகள் தமிழிலும், இந்தியிலும் தொகுப்பாளர்கள் வழங்கினர்.
நாதஸ்வரத்தில் வந்தே மாதரம் !; புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது, ஹிந்து , கிறிஸ்டின், இஸ்லாம், புத்தம் சீக்கியம், உள்ளிட்ட 12 மத தலைவர்கள் தங்கள் வழிப்படும் கடவுளை நினைத்து அவரவர் பாணியில் சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவில் தமிழக தேவார பாடல்கள் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது.இதனை பிரதமர் ரசித்து கேட்டார், கலைஞர்களையும் பாராட்டினார்.