பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
புதுச்சேரி: திருக்காமீஸ்வரர் கோவிலில், ஆதிவார பவுர்ணமி விழா, நாளை மறுநாள் நடக்கிறது. வில்லியனூரில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 7ம் ஆண்டு, ஆதிவார பவுர்ணமி விழா, நாளை மறுநாள்(30ம் தேதி) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு, கோவிலில் அமைந்துள்ள திருக்குளத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், காலை 6 மணிக்கு, 1 கோடிமுறை பஞ்சாட்சர மந்திரம் ஓதும் நிகழ்ச்சி துவங்கி, இரவு 8.30 மணி வரை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு, சுவாமிக்கு, 1008 லிட்டர் பன்னீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவசிந்தனை நடைபயணம்: ஆதிவார பவுர்ணமியை முன்னிட்டு, சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபையினர், வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சிவ சிந்தனையில் நடைபயணம் மேற்கொள்கின்றனர். கோவிலில், பஞ்சாட்சர மந்திரம் ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மனோகரன், சிவாச்சாரியார்கள் மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர். வில்லைப் புராணம் ஆதிவார பவுர்ணமி என்பது ஞாயிற்றுக் கிழமையில் வரும் பவுர்ணமியாகும். பிரம்ம தேவர், வில்லியனூரில் திருக்குளம் அமைத்து, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு கோடி முறை, "நமசிவாய எனற சிவபஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். அவரது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஆதிவார பவுர்ணமியன்று காட்சியளித்தார் என, வில்லைப் புராணம் கூறுகிறது. இந்த திருக்குளத்தில் நீராடிய மன்மதன் மீண்டும் அழகு வர பெற்றார் என்றும், தனது நரசிங்க அவதாரத்தில் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த திருக்குளத்தில் திருமால் நீராடினார் என்றும் திருக்காமீஸ்வரர் கோவில் திருக்குளத்தின் பெருமைகளை வில்லைப் புராணம் விவரிக்கிறது.
பாவம் நீங்கும்: பிரம்மருக்கு சிவபெருமான் காட்சியளித்த தினமே, ஆதிவார பவுர்ணமி விழாவாக திருக்காமீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், இக்குளத்தில் புனித நீராடினால், திருமணம் கைகூடும், சந்தான பாக்கியம் கிட்டும், வழக்குகள் தீரும், சரும நோய்கள் நீங்கும், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், பாவம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.