பதிவு செய்த நாள்
30
மே
2023
01:05
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா துவங்கியது.
காரமடை அருகே, குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம், ஜுன் ஒன்னாம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, ஆறு கால யாக பூஜைகள் நடைபெற உள்ளன. இதை அடுத்து, கோவில் வளாகத்தில் அரண்மனை வடிவிலான யாகசாலை அமைக்கப்பட்டது. இதில், 32 யாக குண்டங்கள், 12 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை மங்கள இசை, கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. பின்பு காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாளிகை, தீர்த்த குடங்களை, கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் பாரம்பரிய தாரை, தப்பட்டை மற்றும் செண்டை மேளம், தெய்யம் மங்கல இசையுடன் ஊர்வலம் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, யாகசாலையில் முதல் கால யாக பூஜை துவங்கியது. பூரணாகுதி தீபாராதனை முடிந்த பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. யாகசாலை நிகழ்வுகள் பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறுகிறது. நேற்று துவங்கி, ஜூன் 1ம் தேதி அதிகாலை வரை, ஆறாம் கால யாக பூஜைகள் நடை பெற உள்ளன. அன்று காலை, 6:30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராஜகோபுரம், மூலவர், பரிவார் தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 7:45 மணிக்கு துவங்கும் கும்பாபிஷேக நிகழ்வுகள், 8:45 மணிக்கு நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், அபிஷேக பூஜையும் நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் மிராசுதாரர்கள், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.