மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் நீர்வரத்து குறைவால் பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2023 04:05
ஆண்டிபட்டி: கோடை மழை பெய்தும் மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் குறைவான நீர் வரத்தால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாற்று வேலப்பர் கோயில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம் சமீபத்தில் முடிந்தது. மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் தனிச்சிறப்பு. சுனையில் நீராடி வேலைப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் வேலப்பர் மற்றும் கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பல்வேறு கிராமங்களில் இருந்தும் அன்றாடம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் அடுத்தடுத்து கோடை மழை பெய்து வருவதால் கோயில் வளாகத்தில் குளுமையான சூழல் உள்ளது. மழை பெய்தும் சுனையில் நீர் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுனை நீரில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.