குவிந்த குப்பை ; ஆன்மீக தலத்தை அசுத்தம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 03:05
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில் பக்தர்கள் தங்களது உடலில் அணிந்திருந்த மாலைகளை கோயில் கோபுரத்தின் மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலைகளில் சில வளாகத்தில் விழுந்து தண்ணீரில் அழுகி துர்நாற்றம் வீசியது. இதனால் ஆன்மீக பக்தர்கள் கோயில் பிரகாரத்தை மூக்கை மூடிக்கொண்டு சுற்றி வர திணறினர். இதையடுத்து இன்று அதிகாலை பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ் தலைமையில் துப்பரவு பணியாளர்கள் மாலை கழிவுகளையும், வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பையையும் அகற்றி தூய்மை படுத்தினர். நிர்வாகத்தினர் மைக்செட்டில் தொடர்ந்து அறிவுறுத்தியும் பக்தர்கள் கேட்கவில்லை. ஆலய தூய்மை மனத்தூய்மைக்கு வழி கொடுக்கும். ஆனால் இக்கோயிலில் பக்தர்களே அசுத்தத்தை மேற்கொள்வது முகஞ்சுளிக்கச் செய்கிறது. இதேபோல் வைகையாற்றிலும் பக்தர்கள் பிளாஸ்டிக், பழைய துணிகள் உள்ளிட்ட மக்காத குப்பையை குவித்து சென்றனர். இதனால் வைகை அசுத்தமாகி உள்ளது. இனிவரும் திருவிழாவின் போதாவது இச்செயல்களை கட்டுப்படுத்தவும், கோயில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்று ஆன்மீகவாதிகள் கேள்வி எழுப்பினர்.