பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
04:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி 15 தினங்களுக்கு முன் காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. மே 25 காளியம்மன், பகவதி அம்மன் கரகம் ஜோடிக்கு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. மே 26 காலை பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பூஜை நடந்தது. மாலை அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மறுநாள் காளியம்மன், பகவதி அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. மே 30 சாமி ஆட்டத்துடன் நகை பெட்டி எடுத்தல், முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலம் மற்றும் கண் திறப்பு நடந்தது. மே 31 படுகளம் போடுதல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், அக்கினி சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று எண்ணை தடவப்பட்ட கழுகு மரம் ஊன்றப்பட்டது. அதில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர். கழுகு மரம் ஏறி முடித்தவுடன் முத்தாலம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், ஊராட்சி தலைவர் தேவி ராஜா சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.