‘வார்த்தை’ எனும் தலைப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். அப்போது மாணவன் ஒருவன், ‘‘சார். நல்ல வார்த்தைகளை பேசினால், அது என்னைப் புனிதப்படுத்தும். தவறான வார்த்தைகளை பேசினால் அது என்னைப் பாவியாக்கும் என்கிறீர்கள்? இது எப்படி சரி’’ எனக் கேட்டான். உடனே அவர், ‘‘முட்டாளே, உட்கார்!’’ என கோபப்பட்டார். இதைக் கேட்ட மாணவனுக்கு சுர்ரென கோபம் வந்தது. பின் அமைதியானவர் போல் பாவனை செய்த ஆசிரியர், ‘‘மன்னித்துவிடு. உன் மனதைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். நீ மன்னித்தால்தான் என் மனம் நிம்மதி அடையும்’’ என உடைந்த குரலில் சொன்னார். அந்த நிமிடமே அவனும், தன்னை மன்னிக்கும்படி பணிவுடன் வேண்டினான். ‘‘பார்த்தாயா. உனது கேள்விக்கு நீயே விடையானாய். முதலில் நான் சொன்ன வார்த்தை உன்னை கோபப்படுத்தியது. பின்னர் சொன்ன வார்த்தை உன்னைச் அமைதிப்படுத்தியது. இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உள்ளது’’ என அறிவுரை கூறினார்.