மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 04:06
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல இடங்களில் உள்ளன. ஹிந்து அறநிலைத்துறை உத்தரவின் பெயரில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பட்டி வருவாய் கிராமத்தில் ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோடு அருகே 737 ஏ என்ற சர்வே எண்ணில் கோயிலுக்கு சொந்தமான 42 ஆயிரத்து 124 ச. அடி (97 சென்ட்) இடம் நேற்று கையகப்படுத்தப்பட்டது. உதவி ஆணையர் கலைவாணன் தலைமையில் கோயில் நிலங்களுக்கான தனி தாசில்தார் யசோதா, ஹிந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், சர்வேயர்கள் சரவணன், அன்னகிருஷ்ணன் வி.ஏ.ஓ., அன்பழகன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டது. பொது ஏலம் மூலம் இந்த இடங்கள் குத்தகைக்கு விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயிலுக்கு சொந்தமான இடத்தை யாரும் சொந்தம் கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.