பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
11:06
காஞ்சிபுரம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிந்த கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவத்தில் நேற்று வரதர், வேணுகோபாலன் திருக்கோலத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை 3:30 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் 76 அடி உயர தேரில் 4:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்த கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து கோவில் அலுவலர்கள், பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் கூறியதாவது: தேர்த் திருவிழா பாதுகாப்பு பணியில் என் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 டி.எஸ்.பி.,க்கள், 16 காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஊர்காவல் படையினர் என, 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேர் செல்லும் முக்கிய வழியில் ஏழு இடங்களில் குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணிக்க கண்காணிப்பு டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் வரை ஏற்கனவே அறிவித்தது போல் புதிய ரயில் நிலையம், பழைய ரயில் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஓரிக்கை, பெரியார் நகர், ஒலிமுகமதுபேட்டை ஆகிய ஆறு இடங்களில் இருந்து தற்காலிக பேருந்த நிறுத்தம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.