பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
10:06
அன்னூர்: கதவுகரை பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். கதவுகரையில், பல நூறு ஆண்டுகள் பழமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக, முன் மண்டபம், மடப்பள்ளி, அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டு முழுமையாக வர்ணம் தீட்டப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. கடந்த 3 ம் தேதி காப்பு கட்டுதல், மற்றும் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 4ம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இரவு திருப்பூர் பவளக்கொடி குழுவின் கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு பகவதி அம்மன், செல்வ விநாயகர், சென்னி ஆண்டவர், காசி விசுவநாத பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகள், செஞ்சேரிமலை முத்து சிவராமசாமி அடிகள் ஆகியோர் அருளுரை வழங்கினர். பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மோளபாளையம் குழுவின் காவடியாட்டம் பக்தர்களை அசத்தியது. இதையடுத்து அச்சம் பாளையம் குழுவின் பஜனை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.