பதிவு செய்த நாள்
29
செப்
2012
10:09
வத்திராயிருப்பு: சதுரகிரி தாணிப்பாறையில் அரசு இடங்களில் நிற்கும் வாகனங்களிலும், தனியார் வாகன காப்பக ஏலதாரர்கள் நுளைந்து, அடாவடியாக கட்டணம் வசூலிப்பதால், பக்தர்கள் அதிருப்தியடைகின்றனர். சதுரகிரி மலையில் ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், தமிழகம் முழுவதுமிருந்து, ஏராளமான பக்தர்கள், டூரிஸ்ட் பஸ், லாரி, வேன், கார், டூவிலர் என, பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். தாங்களது வாகனங்களை அடிவாரமான தாணிப்பாறை கோயில் இடம், வனத்துறைக்கு சொந்தமான இடம், தனியார் வாகன காப்பகத்தில் நிறுத்துகின்றனர். கோயில் இடத்தில் நிற்கும் வாகனங்களுக்கு, கோயில் நிர்வாகம் , கடந்தஆண்டுமுன்பு வரை, காப்பக ஏலம் நடத்தியது. இந்த ஆண்டு அங்கு சர்வே பணிகள் நடைபெறவுள்ளதால் ,பலமாதங்களாக காப்பக ஏலம் விடவில்லை. இதை பயன்படுத்தி, அருகில் உள்ள தனியார் வாகன காப்பகங்களை சேர்ந்தவர்கள், கோயில், வனத்துறை இடங்களில் நிற்கும் வாகனங்களுக்கும், அடாவடியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். 24 மணி நேரத்திற்கு பஸ்களுக்கு 100, வேன்களுக்கு 80, கார், ஜீப்களுக்கு 50, இதர வாகனங்களுக்கு 10ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். 24 மணி நேரத்தை தாண்டி, ஒருமணி நேரம் கூடுதலானலும், அதற்கும் சேர்த்து, அரைநாள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த அடாவடி வசூலால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், "இது அரசு காப்பகம் என நினைத்து தான் டிக்கட்டை வாங்கினோம். ஆனால் ரசீதை பார்த்த பிறகுதான், தனியார் காப்பகம் என தெரிந்து கொண்டோம். ஒருமணி நேரம் கூடுதலானதற்கு ,அரைநாள் கட்டணம் போட்டு, எங்களிடம் தகராறு செய்து வசூலித்தனர். எத்தனையோ இடங்களுக்கு
சுற்றுலா சென்றுள்ளோம் இதுபோல் எங்கும் கட்டணம் வசூலித்ததில்லை, என்றனர். நிர்வாக அதிகாரி குருஜோதியிடம் கேட்டபோது,""இதுவரை புகார் வரவில்லை, விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.