பதிவு செய்த நாள்
29
செப்
2012
10:09
கோவை: மாதா அமிர்தானந்தமயியின் 59வது பிறந்த நாள் விழா, அமிர்தபுரியில் கொண்டாடப்பட்டது; பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கேரள மாநிலம், அமிர்தபுரியில், கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், பாரம்பரிய முறைப்படி பஞ்சவாத்தியம் மற்றும் மோகனியாட்ட நடனங்களை, மாணவர்கள் நிகழ்த்தினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை, ஐ.என்.டி.யு.சி., தேசிய துணைத் தலைவர் அசோக் சிங் வாசித்தார். தொடர்ந்து பல தலைவர்களின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன. இந்தாண்டுக்கான, "அமிர்த கீர்த்தி விருது, இந்திய கலாசார இலக்கிய பங்களிப்புக்காக, ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. கேரளாவில், வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு, 500 இலவச வீடுகள் கட்டும் திட்டத்தை, மத்திய உணவு துறை அமைச்சர் தாமஸ் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், நாடு முழுவதும், ஏற்கனவே 45, 000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாதா அமிர்தானந்தமயியின் பிறந்த நாளை முன்னிட்டு, அமிர்தா மருத்துவமனையில், 200 இலவச இதய அறுவைச் சிகிச்சைகள், 50 இலவச சிறுநீரக மாற்று அறுவைச் சகிச்சைகள் செய்யும் திட்டங்களை, சத்தீஸ்கர் கவர்னர் சேகர் தத் துவக்கி வைத்தார். சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின், குடும்பங்களுக்கு ஒரு லட்சம், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 59 ஜோடிகளுக்கு, இலவச திருமணத்தை, மாதா அமிர்தானந்தமயி நடத்தி வைத்தார்.