பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
12:06
திருப்பூர்: தேர்த்திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று, காலபைரவருக்கு நன்றி செலுத்தும், விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 12ம் நாளான நேற்று, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், யாகசாலையில், 24 காலபூஜை நடத்தி, வழிபடப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீரை கொண்டு, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சோமாஸ்கந்தர், விநாயகர், சூலதேவர், விசாலாட்சியம்மன்; ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவமூர்த்திகள், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவம்ச சமூகநல அறக்கட்டளை சார்பில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த, 12 நாட்களாக, 23 முறை, திருவீதியுலா சென்று அருள்பாலித்த உற்சவமூர்த்திகள், நேற்று கனகசபை மண்டபத்துக்கு திரும்பினர். திருவிழா நிறைவாக, காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நன்றி கூறும் நிகழ்ச்சியாக, விடையாற்றி உற்சவம் நடைபெறும். அதன்படி, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் இன்று மாலை, 7:00 மணிக்கு, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் வடைமாலை அலங்கார பூஜை நடக்க உள்ளது.