பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
10:06
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் சக்தி கணபதிக்கு, 840 கேரட் கொண்ட மிகப்பெரிய வைடூரிய பதக்கத்தை, சிறப்பு பூஜை செய்து சக்தி அம்மா சமர்ப்பித்தார். வேலுார் அடுத்த அரியூரில் கடந்த, 2007-ம் ஆண்டில், 1,500 கிலோ சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தகடுகளால், ஸ்ரீபுரம் தங்கக்கோவில் உருவாக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலின் உட்புற விமானத்திலுள்ள, 750 கிலோ தங்க அளவைவிட, இரு மடங்கு அதிக தங்கத்தால் இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கோவிலில், 1,700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதி சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு, உலகிலேயே மிகப்பெரிய அளவிலான, 840 கேரட் கொண்ட ஒரே கல்லால் ஆன, கேது கிரகத்திற்குரிய வைடூரிய கல் பதக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பதக்கத்துக்கு, சக்தி அம்மா சிறப்பு பூஜை செய்து, சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். இந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.