பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
11:06
ஜம்மு; அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, பீட்சா, பர்கர், தோசை, அல்வா, ஜிலேபி, பூரி போன்ற உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என, அமர்நாத் யாத்திரை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசைவ உணவு: இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த யாத்திரையின் போது, உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால், 42 பக்தர்கள் இறந்தனர். இதையடுத்து, இந்தாண்டு யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை அமர்நாத் யாத்திரை வாரியம் பிறப்பித்துள்ளது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது: யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவ உணவு சாப்பிடக் கூடாது. மது, புகையிலை பயன்படுத்தக் கூடாது. இதேபோல், யாத்திரை பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், அன்னதானம் வழங்குவோரும் குறிப்பிட்ட சில உணவுகளை விற்பனை செய்வதற்கும், வழங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, ப்ரைடு ரைஸ், பீட்சா, பர்கர் மற்றும் தோசை, அல்வா, பூரி, குளிர்பானங்கள், ஜிலேபி, குளோப் ஜாமூன், இனிப்பு கலந்த சென்னா மசாலா ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது. வழக்கமான அரிசி சாதம், ஊத்தப்பம், இட்லி, பழரசம் ஆகியவற்றை சாப்பிடுவதற்கோ, விற்பனை செய்வதற்கோ எந்த தடையும் இல்லை. பக்தர்களின் உடல்நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமித் ஷா ஆய்வு; அமர்நாத் யாத்திரை அடுத்த மாதம் துவங்கி, 62 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு நடத்தினார். இதில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, வடக்கு பிராந்திய ராணுவ அதிகாரி உபேந்திர திவிவேதி, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் தபன் தேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.