பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
04:06
குளித்தலை: குளித்தலை அருகே, கோவிலுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றிட வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா மேலப்பகுதி பஞ்., வீரணம்பட்டியில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த, 6ல், காளியம்மன், பகவதியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு திருவிழா தொடங்கப்பட்டது. 7ல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் தொடங்க இருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் நுழைய, குறிப்பிட்ட பிரிவினர் அனுமதி மறுத்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடவூர் தாசில்தார் முனிராஜ், குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதர் ஆகியோர் இரு பிரிவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டபடாததால், அன்று இரவு கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,மோகன், டி.எஸ்.பி.,ஸ்ரீதர், கடவூர் தாசில்தார் முனிராஜ் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் கோவிலுக்கு ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி சீல் வைத்தார்.
இதை கண்டித்து ஒரு பிரிவினர், ஆர்.டி.ஓ., வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ.,வாகனம் செல்லும் போது பவதாரணி, 17 என்ற சிறுமியின் மீது மோதியது. இதில் காயமடைந்த சிறுமி மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் வீரணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு பிரிவினர், காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்ட சீல் அகற்ற வேண்டும், சிறுமி மீது காரை ஏற்றிய ஆர்.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி பாளையம் மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில், விராலிப்பட்டி பிரிவு ரோடு ஆகிய இரு இடங்களில் சாலைகளில் அடுப்பு மற்றும் பாத்திரங்களை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதையேற்று ஊர் முக்கியஸ்தர்கள் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அவர்கள் வரும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி, சாலையில் அமர்ந்துள்ளனர். இதனால், திருச்சி பாளையம் மெயின் ரோட்டில் நேற்று காலை, 10:00 மணி முதல் மாற்று பாதையில் வாகனங்கள் சென்றன.