பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
05:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே தலையாரிபட்டியில் 30 ஆண்டுக்குப் பின் நடந்த சந்தன கருப்பணசாமி கோவில் திருவிழாவில்-ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத நள்ளிரவு கறி விருந்து விழாவில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தலையாரிபட்டியில் பிரசித்தி பெற்ற சந்தன கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு திருவிழா நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நேர்த்திக்கடன் உள்ளவர்கள் கிடாய்களை காணிக்கையாக வழங்கினர். நேற்று இரவு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான ஆண்கள் கோவிலில் குவிந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. சந்தன கருப்புசாமிக்கு பக்தர்கள் வழங்கிய கிடாய்கள் வெட்டப்பட்டு அதை ஆண்கள் மட்டுமே பெரிய அண்டாக்களில் சோறு, கறிக் குழம்பு தயார் செய்தனர். இந்தநிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கறிவிருந்து தொடங்கியது. அப்போது திருவிழாவில் கலந்துகொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தார்கள்.அவர்களுக்கு வாழை இலையில் சாதம்,கறிக்குழம்பு உள்ளிட்டவைகளை ஆண்களே பரிமாறினர். இதில் இராமராஜபுரம், தலையாரிபட்டி, திம்மணநல்லூர், கோபால்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, ஜோத்தாம்பட்டி, வடுகபட்டி, செடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன், அ.தி.மு.க., ஜெ.பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.