பதிவு செய்த நாள்
12
ஜூன்
2023
11:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தொடர் துர்மரணங்களால் ஊரை காலி செய்த கிராம மக்கள், ஆற்றங்கரையோரம் சமைத்து சாப்பிட்டு, ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கூளியம் பஞ்., ஒப்பலகட்டு கிராமத்தில், தொடர் துர்மரணங்களால் மக்கள் நிலைகுலைந்தனர். ஊரிலுள்ள அமானுஷ்ய சக்திகளே இதற்கு காரணம் என கருதினர். இவற்றை விரட்ட ஊரை காலி செய்து, பகல் பொழுது முழுவதும், பிற பகுதியில் குடியேற முடிவு செய்தனர். இதன்படி நேற்று அதிகாலை, கிராம மக்கள் ஊரை காலி செய்தனர். குழந்தைகள் மற்றும் சமையலுக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் கால்நடைகள், கிராம தேவதை சிலைகளை சுமந்தபடி, தென்பெண்ணை ஆற்றில் இறங்கி, ஊர் எல்லையை கடந்தனர். ஆற்றங்கரையோரம் தங்கிய மக்கள், கிராமத்தில் இருந்து அமானுஷ்ய சக்திகள் வெளியேற பிரார்த்தித்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதே பகுதியில் தங்கி சமைத்து சாப்பிட்டனர். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, கிராம தெய்வத்து சிலைகள் முன் செல்ல, குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்துக்கு திரும்பினர். முன்னதாக ஊர் எல்லையில் ஆடுகளை பலியிட்டு பூஜை செய்தனர். பின் வீடுகளின் முன், கற்பூரம் ஏற்றி உள்ளே புகுந்தனர்.