குற்றாலத்தில் சித்ராநதி தீப ஆரத்தி பெருவிழா ஜூலை 21ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 11:06
குற்றாலம்: குற்றாலம் சித்ரா நதி தீப ஆரத்தி பெருவிழா ஜூலை 21ம் தேதி துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அகத்திய மலையில் இருந்து வரும் தண்ணீர் குற்றாலம் அருவியாக (சித்ரா நதி) விழுகிறது. தொடர்ந்து தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சிற்றாறாக பாய்கிறது. தொடர்ந்து, வங்க கடலில் கலக்கிறது. குற்றாலம் நதியின் சிறப்பை மக்களிடம் எடுத்து கூறும் வகையில், அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் முண்டகக்கன்னி அம்மன் அறக்கட்டளை இணைந்து சித்ரா நதி தீப ஆரத்தி விழாவை நடத்துகிறது. வரும் ஜூலை 21ம் தேதி சித்ரா நதி (சிற்றாறு) தீப ஆரத்தி விழா துவங்குகிறது. ஜூலை 22ம் தேதி வைணவ ஜீயர்கள் பங்கேற்கின்றனர். 23ம் தேதி காசி முதல் தென்காசி தெய்வீக தமிழ்சங்க மாநாடு மற்றும் மாத்ரு சக்தி மாநாடு நடக்கிறது. இந்த மூன்று நாட்களும், காலை 6 மணி முதல் 8 மணி வரை குற்றால நதியின் புனித நீர் கலசங்களுக்கும் வேள்வி, வழிபாடுகள், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை குற்றால அருவிக்கு மகா ஆரத்தி நடக்கிறது. சிறப்பு பூஜைகளாக குற்றாலம் மெயினருவி, சித்ரா நதி படித்துறை மற்றும் தென்காசி யானைப்பாலம் படித்துறை ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சாதுக்கள், சான்றோர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.