பதிவு செய்த நாள்
12
ஜூன்
2023
12:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தேவாரப்பாடல் இடம் பெற்ற ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. சுவடிகளை நூலாக்க திட்டப்பணிக்குழுவினர்ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் நூலகம் இருந்தது. இந்தநூலகத்தில் ஏற்கனவேஅரிய ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த ஓலைச்சுவடிகளை அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்க திட்டப்பணிக்குழுவினர் கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வில், ‘நெல்லையப்பர் கோயிலில் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திட்டபணியின் ஒருங்கிணைப்பாளர்தாமரைப்பாண்டியன் கூறுகையில், ‘நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்பு பட்டயங்களைஆய்வு செய்தோம். கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீசக்கர பிரதிஷ்டாவிதி, அபஸ்தம்பஅமரம், ஸ்ரீசக்ரபூஜை, சைவ சன்னியாசி விஷயம், வேணுவநாத லீலா, வைசாகபுராணம், சங்காபிஷேக விதி, நித்யபூஜாவிதி, அபிஷேகவிதிகள், சகஸ்தநபணம் ஆகிய 12 ஓலைச்சுவடிகட்டுகள் கிடைத்தன. கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகளும் கிடைத்துள்ளன. திருஞான சம்பந்தர் அருளிச்செய்த முதல் 3திருமுறைகள் அடங்கிய தேவாரப்பாடல்கள் இருந்தன. சுவடியின் துவக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது. சுவடியில் சுவடியைபிரதி செய்யப்பட்டகாலம், பிரதி செய்தவர்பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. இந்த பிரதி 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என அறிய முடிகிறது. சுவடிகள் நல்லநிலையில் உள்ளன. சுவடியை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞான சம்பந்தரின் பாடல்களை ஒப்புநோக்கி பாடபேதம் நீக்கி செம்பதிப்பு நூல் கொண்டு வர துணைசெய்யும். நெல்லையப்பர் கோயிலில் கண்டறியப்பட்ட பட்டயங்களை ஆராயும் பணி நடந்து வருகிறது. கோயிலில் உள்ள சுவடிகளை பராமரித்து அட்டவணைப்படுத்தும் பணியும் துவங்கப்பட்டுள்ளது’என்றார்.