கும்மிடிப்பூண்டி: கும்மிடிபூண்டி அருகே கோவில் குளத்தை துார்வாரும் போது, ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிலை கிடைத்த தகவலை மறைத்த, கிராம மக்களிடம் இருந்து, அதை வருவாய் துறையினர் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ளது பெரியகரும்பூர் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் குளத்தை துார்வாரும் பணி, கிராம மக்களின் முயற்சியால் நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன், ஜே.சி.பி., இயந்திரத்தால் குளத்தை துார்வாரிய போது, 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்துள்ளது. அந்தச் சிலையை கிராம மக்கள், அங்குள்ள பொன்னியம்மன் கோவிலில் வைத்து பூட்டினர். சிலை கிடைத்த விபரத்தை வெளியே தெரிவிக்கவில்லை. இருப்பினும் தகவல் அறிந்த வருவாய் துறையினரும், போலீசாரும் சிலையை மீட்க நேற்று பெரியகரும்பூர் கிராமத்திற்கு சென்றனர். அப்போது சிலையை ஒப்படைக்க கிராம மக்கள் மறுத்தனர். அதிகாரிகள் மக்களிடம் சமாதானம் பேசினர். பின், வருவாய் துறையினரிடம் ஐம்பொன் சிலையை பொதுமக்கள் ஒப்படைத்தனர். சிலை, 21 கிலோ எடை இருந்தது. பொன்னேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.