* அகவல் பாடிய அவ்வையாரை துதிக்கையால் எடுத்த விநாயகப்பெருமான் கயிலாயத்தில் கொண்டு சேர்த்த நிகழ்வினை அடிக்கடி சொற்பொழிவு செய்வார் காஞ்சிமஹாபெரியவர். * திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய நுாலை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைக்க, அங்கிருந்த கல்யானை அந்த ஏட்டுச்சுவடியை எடுத்து நடராஜரின் பாதத்தில் வைத்தது. அதனால் அந்நுால் திருக்களிற்றுப்படியார் என போற்றப்பட்டுகிறது. * சிதம்பரத்தில் நகராத தேர் நகர நடராஜர் வாக்குப்படி சேந்தனார் திருப்பல்லாண்டு பாடிய போது தேர் நகர ஆரம்பித்தது. * ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றம் செய்த போது அழகிய சிங்கப்பெருமாள் தலையசைத்து விண் அதிர சிரித்து அருள் செய்தார். * ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடும் போது மீனாட்சி அம்பாள் சிறுமி வடிவில் வந்து திருமலை நாயக்க மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை கழற்றி பரிசாக அளித்தாள். * திருமலை நாயக்க மன்னரின் அமைச்சரான நீலகண்ட தீட்ஷதர் மீனாட்சி அம்பாள் மீது ஆனந்த ஸாகர ஸ்தவம் என்னும் பாமாலையை பாடி இழந்த கண்களை மீண்டும் பெற்றார். * திருக்கடையூர் அபிராமி பட்டர் அந்தாதி பாடும் போது பராசக்தியே வானில் தோன்றி காதில் அணிந்திருந்த தோட்டினை கழட்டி வீச அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டினாள். * திருநெல்வேலி பாபநாசம் முக்களாலிங்கர் கோயில் உலகம்மை மீது நமச்சிவாயக்கவிராயர் அந்தாதி பாடிய போது அம்பாள் கையில் இருந்த பூச்செண்டினை கிளி ஒன்று எடுத்து கவிராயர் கையில் கொடுத்து அம்பாள் அற்புதம் நிகழ்த்தினாள். * விருதுநகர் மாவட்டம் தேவதானம் கோயிலில் புராண அரங்கேற்றம் செய்தார் புலவர் ஒருவர். அப்போது வானில் இருந்து பொன்மழை பொழிந்து கவிராயர் திறமை உலகறிய வைத்தார் சிவபெருமான். அன்றில் இருந்து அவர் பொன்னாயிரங்கவிராயர் என்றே அழைக்கப்பட்டார்.