பதிவு செய்த நாள்
01
அக்
2012
10:10
கும்பகோணம்: நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம், புரட்டாசி மாத, இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சங்கல்பம் செய்து வழிபட்டனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக, நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரம் திகழ்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை, பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து, எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் புரட்டாசி மாத, இரண்டாவது சனிக்கிழமை என்பதால், காலை, 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரமும், தீபாரதனையும் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஜெகந்நாதப் பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.