பதிவு செய்த நாள்
12
ஜூன்
2023
01:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசக்குடியில், ஞானாம்பிகை உடனாகிய காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் சுவாமி, அம்பாள் ஞானத்தின் பிறப்பிடமாக இருப்பதாலும், பிரகாரத்தில் கல்விக் கடவுளான ஞான சரஸ்வதி தனி சன்னதி கொண்டிருப்பதாலும், கல்வி பயிலும் மாணவ, மாணவியர் கோவிலில் வழிபாடு செய்து, தல விருட்சமான புரச மரத்தை சுற்றி வந்து வணங்கி, புதிய கல்வி ஆண்டை துவங்கும் போது அவர்களது கல்விப் பயணம் வெற்றிகரமாக அமையும் என்பது ஐதீகம். இந்நிலையில், ஞானத்தின் துவக்கம் என்பதால், கோவிலில் புதிய கல்வி ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடந்தது. தேவார திருமுறைகள், சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி மற்றும் சரஸ்வதி தோத்திரங்கள் பாடப்பட்டது. ஓம் நமசிவாய, சிவாய நம என்கின்ற பஞ்சாட்சரங்களை சொல்லிக்கொண்டு மாணவ மாணவியர் தல விருட்சமான புரசமரத்தை பக்தியுடன் வலம் வந்து வழிபாடு செய்தனர். நிறைவாக மாணவ, மாணவியருக்கு நோட்டு மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. வழிபாட்டில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கினார். சுவாமி,அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.