பதிவு செய்த நாள்
12
ஜூன்
2023
06:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள, முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
சிறுமுகை பெரியூரில், நூறாண்டு பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, இம்மாதம் ஆறாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜை அடுத்து கம்பம் நடப்பட்டது. அன்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 11ம் தேதி அம்மனுக்கு பூவோடு எடுத்து வந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்று இரவு விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகம் அழைத்து வந்தனர். இன்று காலை சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் கோவிலில் இருந்து, அலங்காரம் செய்த உச்சவர் அம்மன் சுவாமியை, சப்பரத்தில் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மாலையில் மாவிளக்கு மற்றும் பூவோடு ஊர்வலம் நடைபெற்றது. இரவு கம்பம் அகற்றும் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காளையன், ஊர் கவுடர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.