சூலூர்: காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நடந்த ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, கும்பாபிஷேகம் முடிந்து முதலாம் ஆண்டு விழா இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் ஆண்டு விழா துவங்கியது. கலச பூஜை, 108 திரவிய ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு ஸ்ரீ சென்னியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் புனிதநீர் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திரு வீதி உலா வந்தார். சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.