பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
04:06
சிவகாசி: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் இரண்டாம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக செங்கல், கருங்கல் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரையில் 13 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட ஆறு குழிகளில் சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம் கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், உள்ளிட்ட 1964 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் முன்னோர்கள் கட்டடங்களில் வசிப்பதற்கான அடையாளமாக செங்கல், கருங்கல் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் முழுமையான செங்கல் கிடைத்துள்ளது. ஆனால் முழுமையான கட்டடம் கிடைக்கவில்லை.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இரண்டாம் கட்ட அகழாய்வில் ஒரே இடத்தில் செங்கல், கருங்கல் குவியல்கள் கிடைத்துள்ளது. இதில் கிடைத்துள்ள செங்கல், 36 செ.மீ., நீளம், 16 செ.மீ., அகலம், 6 செ.மீ., தடிமன் கொண்டுள்ளது. இது தற்போது நாம் பயன்படுத்துகின்ற செங்கலை விட நீளம் அகலம் என அளவீடுகள் கூடுதலாக உள்ளது. கற்கள் கிடைத்தாலும் முழுமையான கட்டடம் கிடைக்கவில்லை. ஆனால் முன்னோர்கள் இங்கு வசித்ததற்கான முழு அடையாளம் கிடைத்துள்ளது என்றார்.