பதிவு செய்த நாள்
13
ஜூன்
2023
06:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே விஜய விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பிகை திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு வீராசாமி நகரில், விஜய விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், இம்மாதம் ஒன்னாம் தேதி நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான இன்று கோவிலில் காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்பிகைக்கும், திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, பெண் பக்தர்கள் அரச மர விநாயகர் கோவிலில் இருந்து, சீர்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சிறுமுகை மூலத்துறையைச் சேர்ந்த குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கல்ய சரடும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பிகை திருமண கோலத்தில், வீராசாமி நகரில் உள்ள, முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.