திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 67 ஆண்டுக்கு பின் நடந்த உதயாஸ்தமன பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 03:06
திருவட்டார்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த பாரம்பரியம் மிக்க உதயாஸ்தமன பூஜையில் திருவிதாங்கூர் மன்னர் மற்றும் பொன்பாண்டிய தேவர் வம்சத்தினர் பாரம்பரிய ஆயுதங்களை சமர்ப்பித்து வணங்கினர்.
திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் 1739ம் ஆண்டு குளச்சலில் டச்சு படையுடனான போர் துவங்கப்பட்டது. 1740ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா நேரடியாக போர்களத்தில் இறங்கும்முன் திருநெல்வேலியை சேர்ந்த குறுநில மன்னரான பொன்பாண்டிய தேவர் மற்றும் தங்கள் படைகளுடன் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இறைவன் முன் போர் ஆயுதங்களை சமர்ப்பித்து பூஜை செய்தபின் போருக்கு புறப்பட்டு வெற்றி கண்டனர் என்பது வரலாறு. 67 ஆண்டுகளுக்கு பின்.. இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக 1956ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் மன்னர் வம்சாவளியினர் முன்னிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உதயாஸ்மன பூஜை நடந்து வந்துள்ளது. பின்னர் திருவட்டார் கோவில் த மிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து இந்த பூஜை நடத்தப்படவில்லை. இதை அடுத்து 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருவிதாங்கூர் மற்றும் பொன்பாண்டிய தேவரின் வம்சாவளியினர் சார்பில் நேற்று மாலை உதயாஸ்தமன பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் முன்பு உள்ள உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் தந்திரி மாத்துார்மடம் சங்கரநாராயணரு திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் தற்போதைய வம்சாவளியான திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனை ஸ்ரீஅஸ்வதி திருநாள் தம்புராட்டியிடம் போர் ஆயுதங்களை ஒப்படைத்தார் . மன்னர் பரம்பரையிடம் இருந்து அவற்றை பொன்பாண்டிய தேவர் வம்சாவளியினர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தந்திரிமணலிக்கரை மடம் சஜித் நாராயணரு, பொன்பாண்டிய தேவர் வம்சாவளியை சேர்ந்த கண்ணன், துரை பாண்டியன், பெரியசாமி, திருவட்டார் கோவில் மேலாளர் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.