அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்கள் பாதுகாப்பில் கேள்விக்குறி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2023 03:06
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தேர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதாக பக்தர்கள் கண்ணீர். அலுவலர்கள் அலட்சியம்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானது அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சிறப்பு வாய்ந்ததாகும். மிகவும் தொன்மையான புராதான மிக்க சிற்பங்கள் கல்வெட்டுகள் உடைய இக்கோவிலின் தேர் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேராக போற்றப்படுகிறது. கடந்த மாதம் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்கள் நிலையில் நிறுத்தப்பட்டு அதனைச் சுற்றிலும் தகர சீட்டுகளால் மூடப்பட்டுள்ளது.தற்போது மூடப்பட்டுள்ள தகர சீட்டுகள் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருவதுடன் வெயில் மற்றும் மழையில் நனைந்து துருப்பிடித்து, உடைந்தும் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் தேர்கள் மூடப்பட்டுள்ள தகர சீட்டுகளின் உயரத்தின் அளவுகள் குறைந்துள்ளது. தேர்களை சுற்றிலும் கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ள தகர சீட்டுகள் இடைவெளி உள்ளதால் சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழைந்து சேதம் விளைவிக்ககூடும் என பக்தர்கள் அஞ்சுகின்றனர். கோவில் தேர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டிய புதுப்பாளையத்தை சேர்ந்த சிவதொன்டர் பொன்னுசாமி கூறும் போது, கடந்த 1990ம் ஆண்டு மர்ம நபர்களால் அப்போதைய தேருக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.அதேபோல 2003ம் ஆண்டு அம்மன் சன்னதியின் கருவறைக்குள் நுழைந்த மர்ம நபர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். கோவில் குளத்தில் ஒரு நபர் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதனை போல தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் தொன்மைக்கும்,பெருமைக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பல்வேறு பாதுகாப்பற்ற நிலையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இப்போது தேர்கள் பாதுகாப்பிற்காக மூடப்பட்டுள்ள தகர சீட்டுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.இதனை பலமுறை கோவில் செயல் அலுவலருக்கும் அங்குள்ள ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளோம்.ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.பல ஆண்டு காலமாக உபயோகத்தில் உள்ள தகர சீட்டுகள் துருப்பிடித்து உடைந்துள்ளது.இதனால் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து தேரின் மேல் பகுதியில் உள்ள மரபலகைகள் சேதம் அடைந்துள்ளது. மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தடினமான,துருப்பிடிக்காத வகையில் உள்ள தகர சீட்டுகளை கொண்டு தேர்களை சுற்றிலும் வேயப்பட வேண்டும் என்றார்.