அன்னூர்: வடக்கலூரில் 200 ஆண்டு பழமையான கருப்பராயர் கோயில் பூச்சாட்டு திருவிழாவில் இன்று பொங்கல் வைத்தல் நடக்கிறது. வடக்கலூரில் 200 ஆண்டுகள் பழமையான கருப்பராயசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் பூச்சாட்டு திருவிழா நடைபெறும். இக்கோவிலில் சில குடும்பங்களை வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ., அனைவரையும் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தி இருந்தார். இந்த கோவிலில் கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. காப்பு கட்டப்பட்டது. இதை எடுத்து 12 நாட்கள் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை குதிரை வாகனம் எடுத்தலும், இரவு படைக்கலம் எடுத்தலும் நடந்தது. இதில் வடக்கலூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை பொங்கல் வைத்தலும், மதியம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. அலங்கார பூஜையை அடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். நாளை காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதையடுத்து மஞ்சள் நீர் உற்சவமும், மதியம் மறு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கலூர் பொதுமக்களும், நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினரும் செய்துள்ளனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க சிறப்பு காவல் படை போலீசார் இக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.