பதிவு செய்த நாள்
19
ஜூன்
2023
10:06
கோவை: இஸ்கான் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ஹரே கிருஷ்ணா அமைப்பினர்) கோவையில் நடத்தும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 18.06.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பகவான் ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்குத் திருமஞ்சன சேவை (ஸ்னான யாத்திரை), கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது. தவத்திரு பக்தி வினோத சுவாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
திருமஞ்சன அபிஷேகம்: ஒடிஷா மாநில பூரி நகரில் ஒவ்வோர் ஆண்டும் ஜெகன்னாதர் தேர்த்திருவிழாவிற்கு முன்பாக திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. மரத்தினாலான ஸ்ரீஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவியார் விக்கிரகங்களுக்கு வருடத்தில் ஒருமுறையே இத்திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கோவில் கருவறையிலிருந்து ஜெகன்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி விக்கிரகங்கள், கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அபிஷேகம் நடைபெறும் பந்தலில் எழுந்தருளினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹரி நாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டிருக்கையில், சங்குகள் ஒலிக்கையில் அபிஷேக நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவின் அனைத்து புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரினாலும், மலர்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்புச்சொற்பொழிவு & நாம சங்கீர்த்தனம்: பிறகு தவத்திரு பக்தி வினோத சுவாமி அவர்கள் ஜெகன்நாதர் லீலைகள் மற்றும் திருமஞ்சன அபிஷேகம் பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். ஒருவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜெகநாதர் பேரருளை பெறுவதன் மூலம் தான் செய்த பாவ விளைவுகளில் இருந்து விடுபட வழிவகுக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அகண்ட நாம சங்கீத நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது
ஜெகன்நாதருக்கு 1008 உணவுப்பதார்த்தங்கள்: பக்தர்கள் பக்தியுடனும், அன்புடனும் தயாரித்திருந்த 1008 உணவுப்பதார்த்தங்கள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் பழமையான உணவு வகைகள் உட்பட தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் பல முக்கியப் பிரமுகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் பிரசாத விருந்து நடைபெற்றது.
அனாவஸர காலம்: அனைத்து பக்தர்களின் அபிஷேகத்தையும் ஏற்றுக்கொள்ளும் பகவான் ஜகன்னாதருக்கு உடல்நலம் குன்றிப்போகும் என்பது ஐதீகம். இதனால் தேர்த்திருவிழா நாள்வரை பகவானுக்கு மூலிகைளே உணவாக அர்ப்பணிக்கப்படும், . “அனாவஸர காலம்” என்றழைக்கப்படும் இந்த நாட்களில் தரிசனம் நிறுத்தப்பட்டு, விக்கிரங்களுக்கு முழுஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேர்த்திருவிழாவின்போது நேரடியாக பக்தர்களின் இடத்திற்கே வந்து தரிசனம் வழங்குகிறார், பகவான் ஜெகன்நாதர்.
தேர் திருவிழா : இஸ்கான் அமைப்பானது வருடம் தோறும் தேர்த்திருவிழாவை கோவையில் நடத்திவருகின்றனர். இந்த வருடத்திற்கான இந்த விழாவானது ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று இஸ்கான் அமைப்பினர் தெரிவித்தனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், கோவை