தஞ்சை மாவட்டம் காருகுடியைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே நாளில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன்னதாக ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரிடம் ஆசி பெற மடத்திற்கு சென்றார் பக்தர். இரண்டு தட்டுகளில் தேங்காய், பழத்துடன் தனித்தனியாக பத்திரிக்கை வைத்து சுவாமிகளிடம் சமர்ப்பித்தார். விபரம் கேட்ட மஹாபெரியவர் ஒரு தட்டில் இருந்த பத்திரிகையை எடுத்து படித்தார். அதற்கு மட்டும் பிரசாதம் அளித்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டார். இன்னொரு பத்திரிகையை பார்க்கவும் இல்லை; பிரசாதம் தரவும் இல்லை. தயக்கத்துடன் பக்தரும் ஊருக்குத் திரும்பினார். இரண்டு திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று பக்தரின் மனம் தவித்தது. திருமண நாளுக்கு முதல்நாள் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருமணம் நடக்குமோ என்ற நிலை உருவானது. இக்கட்டான நிலையில் இரு மாப்பிள்ளைகளில் ஒருவர் மட்டும் குடும்பத்தினருடன் மணமகளின் ஊருக்கு வந்தார். அந்த மாப்பிள்ளைக்கும் அவருக்கு நிச்சயித்த மணப்பெண்ணுடன் குறித்த நேரத்தில் திருமணம் நடந்தது. ஒரு பத்திரிகையை எடுத்து பார்த்து மஹாபெரியவர் பிரசாதம் கொடுத்ததன் பின்னணி இப்போதுதான் பக்தருக்கு புரிந்தது. முக்காலமும் உணர்ந்த ஞானி அல்லவா மஹாபெரியவர். கருணைக்கடலைச் சரணடைந்த பிறகு இடையூறு வருமா என்ன? நின்று போன திருமணமும் சுவாமிகளின் அருளால் சிறப்பாக முடிந்தது.