ஸ்ரீராமபிரான் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார். அவர் சந்திக்காத ஆபத்தே இல்லை. ஆனாலும் வெற்றி வீரராக திகழ்ந்தார். இதற்கு காரணம் ஒன்றுதான். ஸ்ரீராமபிரான் காட்டிற்கு செல்ல தயராக இருந்தார். குழந்தை ஒன்று பள்ளிக்கு செல்வதுபோல் அவரை எதிர்கொண்டு அழைத்தாள் தாய் கவுஸல்யை. நாம் பள்ளிக்கு சென்றால் அம்மா என்ன தருவாள். சாப்பாடு, பிஸ்கட், தண்ணீர் என பல பொருட்களை கொடுப்பாள். இது ஒரு நாளுக்குச் சரி. ஸ்ரீராமபிரானோ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல உள்ளார். ‘குழந்தைக்கு எதைத் தரலாம்’ என யோசித்தாள் கவுஸல்யை. பிறகு ஒன்றை கண்டுபிடித்தாள். யாராலும் அழிக்க முடியாத, எத்தனை யுகம் வந்தாலும் கெடாத ஒரு பொருளை கொடுத்தாள். இது அவர் பிறக்கும் போதே, அவருடன் சேர்ந்து பிறந்ததுதான். அது என்ன? ‘ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே, உன்னைப் பாதுகாக்கும்’ என சொல்லித் தர்மத்தை அவருக்குத் துணையாக அனுப்பினாள்.
இந்த தர்மமே ஸ்ரீராமபிரானுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. என்னதான் கஷ்டம் வந்தாலும், அவர் அதை கைவிடவே இல்லை. இதை நீங்களும் கடைப்பிடித்தால் வெற்றியாளர்தான்.