படிப்பு, மதிப்பெண், தேர்வு. இவைதான் பெரும்பாலான வீட்டில் கேட்கும் வார்த்தைகள். ‘சார்.. உங்கள் குழந்தை சரியாக படிப்பதில்லை. முதலில் டியூஷன் சேர்த்துவிடுங்கள்’ என்று ஆசிரியர் சொல்ல, பல பெற்றோர்கள் கைகட்டி நிற்பதை பார்த்திருப்போம். அந்த பெற்றோரைப் போல் நீங்களும் உள்ளீர்களா. குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என யோசிக்கீர்களா... கவலைப்படாதீர்கள். குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர தயாராக உள்ளார் விநாயகர். இவர் தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.வி.சாலையில் உள்ளார். இவருக்கு ‘சாலை விநாயகர்’ என்ற பெயரும் உண்டு. பல்லவர் காலத்து பழமையான கோயில் இது. விநாயகர் என்றால் எளிமையானவர். ஆம்! சாதாரண அருகம்புல்லைக் கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்பவர். அரச மரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் குடிகொண்டிருப்பவர். இவருக்கு கூரை கூடத்தேவையில்லை. ஆனால் இங்கு கோயிலில் அமர்ந்த கோலத்தில் அழகாக உள்ளார். நுாறு ஆண்டுக்கு முன் பல சன்னதிகள் கட்டப்பட்டன. சிறிய கோயிலாக இருந்தாலும், நேர்த்தியாக உள்ளது. சங்கடஹர சதுர்த்தியன்று இவரை தரிசித்தால், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர். திதிகளில் சதுர்த்திக்கு ஒரு சிறப்பு உண்டு. அது வளர்பிறை, தேய்பிறையாக இருந்தாலும் சரி. வளர்பிறை சதுர்த்தி வழிபாடு வளர்ச்சியை கொடுக்கும். தேய்பிறை சதுர்த்தி வழிபாடு குறைகளை போக்கும். வாகனம் வாங்குபவர்கள் இங்குதான் பூஜை செய்கின்றனர். எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபடுவது ஹிந்து மதத்தின் மரபு. பிரகாரத்தை வலம் வரும்போது, முதலில் கண்களுக்கு தெரிவாள் துர்கை அம்மன். பிறகு பாலசுப்பிரமணியர், சரஸ்வதி ஆகியோரும் நமக்காக காத்திருப்பர். வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதை இக்கோயிலில் உணரலாம். எல்லோரும் தரிசிக்க வேண்டிய கோயில் இது.
எப்படி செல்வது: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி தொடர்புக்கு: 96592 80085 அருகிலுள்ள தலம்: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் 57 கி.மீ., நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி தொடர்புக்கு: 0434 – 625 3599