நாம் எந்தச் செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வழிபட்டு, தோப்புக்கரணம் இடுவோம். முதலில் தோப்புக்கரணம் இட்டவர் யார் தெரியுமா? மஹாவிஷ்ணு. ஆம்! ஒருமுறை இவருடைய சக்கரத்தை விநாயகர் பிடுங்கி வாயில் வைத்தார். இவரிடம் இருந்து சக்கரத்தை வாங்குவது சுலபமான விஷயம் இல்லையே என தவித்தார். குழந்தை அடம்பிடித்தால் சிரிப்புக்காட்டி நம் வழிக்கு கொண்டு வருவோம் அல்லவா. அதையே மஹாவிஷ்ணுவும் செய்தார். நான்கு கைகளாலும் காதுகளைக் பிடித்துக் கொண்டு ஆடினார். விநாயகருக்கோ சிரிப்பு தாங்கமுடியவில்லை. சக்கரம் கீழே விழுந்தது. உடனே அதை மஹாவிஷ்ணு எடுத்துக் கொண்டார். ‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என மாறியது. இதற்கு கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப்பொருள். இதோடு அவரது பாதத்தையும் கெட்டியாக பிடித்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும்.